Kaadhal Solla Vandhen: கல்லூரி சீனியரை காதலிக்கும் ஜூனியர்.. பூபதி பாண்டியனின் காமெடி.. காலேஜ் அலப்பறைகள் தான் கதை!
Kaadhal Solla Vandhen: சீனியரை காதலிக்கும் ஜூனியரின் காதல்.. பூபதி பாண்டியனின் காமெடி.. கல்லூரி அலப்பறைகள் தான் கதை! காதல் சொல்ல வந்தேன் திரைப்படம் வெளியாகி 14ஆண்டுகள் நிறைவுபெற்றது தொடர்பான கட்டுரை!
Kaadhal Solla Vandhen: திருவிளையாடல் ஆரம்பம், மலைக்கோட்டை, தேவதையைக் கண்டேன் ஆகியப் படங்களை இயக்கிய இயக்குநர் பூபதி பாண்டியன் எழுதி, இயக்கி, 2010ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 13ஆம் தேதி வெளியான காதல் - காமெடி திரைப்படம், காதல் சொல்ல வந்தேன். இப்படத்தை ’கனா காணும் காலங்கள்’ சீரியல் புகழ் யுதன் பாலாஜி, மேக்னா ராஜூம் நடித்திருந்தனர். நடிகர் ஆர்யா சிறப்புத்தோற்றத்தில் நடித்திருந்தார். இப்படத்தில் இசையை யுவன் சங்கர் ராஜாவும் செய்து ஒட்டுமொத்த ஆல்பத்தையும் 90’ஸ் கிட்ஸ்கள் பலரின் இதயத்திற்குரிய ரீங்காரப் பாடல்களாக மாற்றினார். இப்படத்தை எஸ்3 நிறுவனம் தயாரிக்க, ஒளிப்பதிவை ராணாவும், எடிட்டிங்கினை கே.எல்.பிரவீனும், எஸ்.பி.ஸ்ரீகாந்தும் செய்திருந்தனர். இப்படம் குறித்துப் பேச நம்மிடம் ஏராளமான விஷயங்கள் உள்ளன. வாருங்கள் பார்க்கலாம்.
காதல் சொல்ல வந்தேன் படத்தின் கதை என்ன?:
மிகவும் ஒல்லியான சேட்டையான பையன் பிரபு என்கிற நானு பிரபு. இவர் கல்லூரியில் சேர்ந்து மிக மகிழ்ச்சியாக இருக்க கல்லூரியில் சேர்கிறார். அங்கு தன்னைவிட வயதில் மூத்த கல்லூரி சீனியர் சந்தியாவைப் பார்த்ததும், முதல் பார்வையிலேயே பிடித்துவிடுகிறது. இதற்காக, அவர் பின்பே பல சேட்டைகள் செய்து,சந்தியாவை இம்ப்ரெஸ் செய்ய முயற்சிக்கிறார். அப்போது பெத்த பெருமாள் என்னும் நபருக்கு, சந்தியாவை காதலிக்க வைக்க உதவுவதாகச் சொல்லி, சந்தியாவுடன் நண்பனாக முயற்சிக்கிறார். பின், தன் காதலை சந்தியாவிடம் சொல்கிறார், நானு பிரபு. அதை ஏற்க மறுத்த சந்தியா, நாம் இருவரும் நண்பர்களாகப் பழகுவோம் எனத் தெரிவிக்கிறார். அதை ஏற்றுக்கொண்டு, சந்தியாவுடன் நட்பு பாராட்டி, மெல்ல மெல்ல அவரது மனதில் இடம்பெற முயற்சிக்கிறார். பின் ஒரே பேருந்தில் கல்லூரிக்குச் சென்று வரும் அளவுக்கு நானு பிரபுவும், சந்தியாவும் நல்ல ஃப்ரெண்ட்ஸ் ஆகிறார்கள். ஒரு கட்டத்தில் பிரபு வரவில்லை என்றால், சந்தியா சோகம் ஆகிவிடும் அளவுக்கு அவரது நட்பு ஆழமாகிவிட்டது.
இது சந்தியாவுடன் படிக்கும், அவருடன் நெருங்கமுடியாத நபர்களுக்கு பிரபு மீது எரிச்சலை உண்டாக்குகிறது.
மேலும், இது நானு பிரபுவுக்கும், அவரது சீனியர்களுக்கும் இடையே மோதல்போக்கை உண்டாக்குகிறது. ஒரு கட்டத்தில் எதையும் கண்டுகொள்ளாத நானு பிரபுவின் செயல்பாடுகள், சந்தியாவுக்கு அவர் மீது ஈர்ப்பை உண்டாக்கிவிடுகிறது.
கிட்டத்தட்ட காதல் வந்துவிடுகிறது. அப்போது எதிர்பாராத திருப்பமாக வேகமாக வந்த வேனில் மோதி, பிரபு இறந்துவிடுகிறார். அப்போது மிகுந்த வேதனையுடன் அழுது துடிக்கும் சந்தியா, பிரபுவை தன் மடியில் கிடத்திக்கொண்டு சொல்லமுடியாத காதலுடன் அழுது புலம்புகிறார். பின், சில ஆண்டுகள் கழித்து, தானும் பிரபுவும் படித்த கல்லூரியில் திருமணம் ஆகாமல், பிரபுவின் நினைவுகளுடன் யாரையும் மணமுடிக்காமல் பேராசிரியராகப் பணிசெய்கிறார். படம் முடிகிறது.
காதல் சொல்ல வந்தேன் திரைப்படத்தில் நடித்தவர்கள் விவரம்:
இப்படத்தில் நானு பிரபுவாக, கனா காணும் காலங்கள் புகழ் நடிகர் யுதன் பாலாஜியும், சந்தியாவாக மேக்னா ராஜூம் பிரபுவின் தந்தையாக, ஆர். சுந்தர்ராஜனும் நடித்திருந்தனர். கல்லூரி முதல்வராக தம்பி ராமையாவும், டாக்டராக நடிகர் ஆர்யாவும் நடித்திருந்தனர். பெத்த பெருமாளாக, கார்த்திக் சபேஷ் நடித்துள்ளார்.
வேறலெவல் ஹிட்டாகிய காதல் சொல்ல வந்தேன் படப் பாடல்கள்:
இப்படத்தின் இசையை யுவன் சங்கர் ராஜா புரிந்திருந்தார். இப்படத்தின் 4 பாடல்களை நா.முத்துக்குமாரும், ஓ ஷலா பாடலை சாரதியும் எழுதியிருந்தார். குறிப்பாக, நா. முத்துக்குமார் எழுதிய ஒரு வானவில்லின் பக்கத்திலே வாழ்ந்து பார்க்கிறேன் நானே, என்ன என்ன ஆகிறேன், அன்புள்ள சந்தியா உனை நான் காதலிக்கிறேன், சாமி வருகுது ஆகியப் பாடல்கள் கல்லூரி இளசுகள் இடையே சூப்பர் ஹிட்டானது.
நம் கல்லூரியில் படித்த நினைவுகளை வேடிக்கைத் தருணங்களை நினைவுகூர்ந்து கொஞ்சம் சோகப்படுத்தினால், அது காதல் சொல்ல வந்தேன் திரைப்படம் எனலாம். படம் வெளியாகி 14 ஆண்டுகள் ஆனாலும் இன்றும் இப்படம் டிவியில் போடும்போது ரசிக்காமல் இருக்கமுடியவில்லை.
தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்