Meghana Raj Sarja: ‘சர்ஜா போனதுக்கு அப்புறமா அவ்வளவு வலி..உடனே 2 வது கல்யாணம் சொல்லி..நாங்களும் மனுஷங்கதான்’-மேக்னாராஜ்
Meghana raj sarja: ‘சர்ஜா போனதுக்கு அப்புறமா அவ்வளவு வலி..உடனே 2 வது கல்யாணம் சொல்லி..நாங்களும் மனுஷங்கதான்’- மேக்னாராஜ்“சர்ஜா இறந்து விட்டார் என்று செய்தி வந்த உடனே, எனக்கு முதலில் தோன்றியது என்னுடைய மகனை நான் பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்பதுதான்.- மேக்னா ராஜ்

கன்னட சினிமாவில் மிகவும் பிரபல நடிகராக வலம் வந்தவர் நடிகை சிரஞ்சீவி சர்ஜா. கன்னடத்தில் 20க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்த இவர், கடந்த 2020ம் ஆண்டு நெஞ்சுவலி காரணமாக உயிரிழந்தார். நடிகை மேக்னா ராஜை திருமணம் செய்திருந்த இவருக்கு, துருவா சர்ஜா என்ற மகன் இருக்கிறான். அந்த இழப்பில் இருந்து கடந்து வந்த அனுபவத்தை மேக்னா ராஜ் கலாட்டா பிங்க் சேனலுக்கு அளித்த பேட்டியில் பகிர்ந்து இருக்கிறார்.
சர்ஜா இறந்த உடனே..
இது குறித்து அவர் பேசும் போது, “சர்ஜா இறந்து விட்டார் என்று செய்தி வந்த உடனே, எனக்கு முதலில் தோன்றியது என்னுடைய மகனை நான் பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்பதுதான். ஒரு தாயாக இருந்த காரணத்தால், அந்த எண்ணம் எனக்குள் வந்ததா? என்று தெரிய இல்லை. தெய்வம் எனக்கு கொடுத்ததா என்பதும் எனக்குத் தெரியாது. அவனை வைத்துதான் நான் இந்த கடினமான காலத்தை கடந்து வந்தேன். சர்ஜா எந்த மாதிரியான சூழ்நிலையாக இருந்தாலும், சந்தோஷமாக இருக்க முயற்சி செய்வார்.
நமக்கு எப்படிப்பட்ட சூழ்நிலை வந்தாலும், அதை நாம் எப்படி பார்க்கிறோம் என்பதுதான் இதில் முக்கியமானது. நீங்கள் சிரிக்க வில்லை என்றாலும், மகிழ்ச்சியாக இருக்க முயற்சி செய்யவில்லை என்றாலும், நீங்கள் வாழ்க்கையை வீணாக்குகிறீர்கள் என்று அர்த்தம். அது ஒரு முயற்சிதான். எல்லோரும், எல்லா நேரங்களிலும் மகிழ்ச்சியாக இருக்க முடியாதுதான். ஆனாலும் நாம் முயற்சி செய்ய வேண்டும். அவர் அதனை செய்வார். அதே போல அவர் தன்னை விரும்பும் மனிதர்களை அதிகளவு கொண்டாடுவார்.
நாங்களும் மனிதர்கள்தான்
என்னை எல்லோரும் எப்படி இவ்வளவு வலிமையாக கஷ்டகாலத்தை கடக்கிறீர்கள் என்று கேட்கிறார்கள். உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால், நானும் உடைந்து அழுவேன். அதுதான் ரியாலிட்டி. நாங்கள் வெளியே வெளிப்படுத்திக்கொள்வதை மட்டும் வைத்து, நாங்கள் எப்போதும் கடினமான காலங்களை வலிமையாக கடப்போம் என்று எண்ணி விட வேண்டாம்.
உண்மையில் அப்படி ஒரு அழுத்தத்தை இந்த சமூகம் உங்கள் மீது வைக்கும். அதை நீங்கள் எடுத்துக்கொள்ள வேண்டிய அவசியமில்லை. அதுவும் நீங்கள் பிரபலமாக இருக்கும் போது அழுதால், உடைந்து உட்கார்ந்தால்.. என்ன நீயே இப்படி அழுதுவிட்டாய் என்று பேசுவார்கள். நாங்களும் மனிதர்கள்தான். எங்களுக்கும் உடையும் தருணங்கள் வருவதுண்டு.
தயவு செய்து அழுது விடுங்கள்.
எங்களுக்கும் உங்களைப்போன்று எமோஷன் ஒன்றுதான். ஆகையால் உங்களுக்கு உடைந்து போக வேண்டும். அழ வேண்டும் என்று தோன்றினால், தயவு செய்து அழுது விடுங்கள். அப்போதுதான் அதை எதிர்கொள்வதற்கான வலிமை உங்களுக்கு வந்து சேரும். வலிமையாக இருப்பது என்பது ஒரு பயணம். கணவரை இழந்த பின்னர் மகனுக்கு தேவையான அனைத்தையும், நான்தான் செய்ய வேண்டும் என்ற அழுத்தம் எனக்கு இருந்தது.
ஆனால் அதை எதிர்கொள்வதற்கான வலிமையை நான் என்னுடைய குடும்பத்தில் இருந்துதான் எடுத்தேன். என்னுடைய ரசிகர்கள் ஏன் இரண்டாவது கல்யாணம் செய்து கொள்ள கூடாது என்று கேட்டுக்கொண்டு இருக்கின்றனர். ஆனால் நான் அதைப்பற்றி யோசிக்கவே இல்லை. அது என்னுடைய மனதிற்கு வரவில்லை அவ்வளவுதான். அதை பற்றி நான் நினைக்க கூட இல்லை. அதை நான் அப்படியே விட்டு விட்டேன்.” என்று பேசினார்.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

டாபிக்ஸ்