தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Hbd Samuthirakani:சுப்பிரமணியபுரம் கனகாய் அறிமுகம்.. நடோடிகளில் ஹிட் இயக்குநர்.. இப்போ தென்னிந்திய நடிகர் சமுத்திரக்கனி

HBD Samuthirakani:சுப்பிரமணியபுரம் கனகாய் அறிமுகம்.. நடோடிகளில் ஹிட் இயக்குநர்.. இப்போ தென்னிந்திய நடிகர் சமுத்திரக்கனி

Marimuthu M HT Tamil
Apr 26, 2024 05:24 AM IST

HBD Samuthirakani: இயக்குநர் மற்றும் நடிகர் சமுத்திரக்கனியின் 51ஆவது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இந்நாளில் அவரைப் பற்றிய சிறப்புக் கட்டுரையில் பல்வேறு சுவாரஸ்யமான விஷயங்கள் பகிரப்பட்டுள்ளன. வாருங்கள் பார்ப்போம்.

சமுத்திரக்கனி
சமுத்திரக்கனி

ட்ரெண்டிங் செய்திகள்

யார் இந்த சமுத்திரக்கனி?: 1973ஆம் ஆண்டு, ஏப்ரல் 26ஆம் தேதி, தமிழ்நாட்டின் விருதுநகர் மாவட்டத்தில் ராஜபாளையம் அருகேயுள்ள சேத்தூரில் பிறந்தவர், சமுத்திரக்கனி. அதன்பின் ராஜபாளையத்தில் உள்ள ராஜூஸ் கல்லூரியில் இளங்கலை கணிதவியல் பிரிவில் பட்டம் பெற்றார். பின், அம்பேத்கர் சட்டக்கல்லூரியில் சட்டம்பயின்றார், சமுத்திரக்கனி. அடிப்படையில் வழக்கறிஞரான சமுத்திரக்கனி, நடிகராகவேண்டும் என்று ஆசைப்பட்டார். அதனால், திரைத்துறையில் 1997ஆம் ஆண்டு, சுந்தர் கே.விஜயனிடம் உதவி இயக்குநாகப் பணி செய்தார்.

சீரியல் இயக்குநர்:

அதன்பின் இயக்குநர் பாலச்சந்தரின் 100ஆவது படமான ‘பார்த்தாலே பரவசம்’ என்ற படத்திற்கான உதவி இயக்குநர் தேர்வில் கலந்துகொண்டு, உதவி இயக்குநராக தேர்வு ஆனார். அந்தப் படத்திற்குப் பின், ஜெயா டிவியில் ஒளிபரப்பான ’அண்ணி’ சீரியலை பாலச்சந்தர் இயக்கிக்கொண்டிருந்தார். அதில் உதவி இயக்குநர் முதல் எபிசோட் டைரக்டர் வரை முன்னேறினார், சமுத்திரக்கனி. இந்த அனுபவங்கள் அவருக்கு சன் டிவியில் ராதிகாவை வைத்து சீரியலை இயக்க வாய்ப்பினை உருவாக்கிக் கொடுத்தது. சித்திக்குப் பின், ராதிகா சன் டிவியில் நடித்த ’அரசி’ சீரியலை சமுத்திரக்கனி இயக்கினார். பின், ’செல்வி’ என்னும் சீரியலையும் இயக்கினார். இது அக்காலத்தில் பெரும்பாலான இல்லத்தரசிகளை வெகுவாகக் கவர்ந்து, சமுத்திரக்கனியின் பெயரை மெல்ல மெல்ல வெளியில் கொண்டு வந்தது.

சினிமா இயக்குநர் அவதாரம்: என்ன தான் வெற்றிகரமான சீரியல் இயக்குநர் என்று பெயர் எடுத்தாலும் கனிக்கு, சினிமா இயக்குநர் ஆகவேண்டும் என்ற கனல் மட்டும் குறையவில்லை. அதற்காக, இயக்குநர் சேரனை வைத்து ‘ உயிர் நண்பனுக்கு’ என்னும் படத்தைத் தொடங்கினார். ஆனால், பொருளாதாரச் சிக்கல்களால் அப்படம் டிராப் ஆனது. பின், 2003ஆம் ஆண்டு வெங்கட் பிரபுவை ஹீரோவாக வைத்து எஸ்.பி.பி.சரண் தயாரித்த ‘உன்னைச் சரணடைந்தேன்’ என்னும் படத்தை இயக்கினார். இப்படம் சிறந்த கதைக்கான மாநில விருதினைப் பெற்றது. ஆனால், எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. அடுத்து, 2004ஆம் ஆண்டு, ’நிறைஞ்ச மனசு’ என்னும் படத்தை விஜயகாந்தினை வைத்து இயக்குகிறார். அப்படமும் தோல்வியில் முடிகிறது. பின் தன்னிடம் ஏதோ ஒன்று மிஸ் ஆவதை உணர்ந்த சமுத்திரக்கனி, இரண்டு படங்கள் இயக்கிய பின், ‘பருத்திவீரன்’ படத்தில் அமீரின் உதவி இயக்குநராகப் பணிபுரிந்தார், சமுத்திரக்கனி. 

அங்கு கிடைத்த சசி குமாரின் நட்பு, கற்றுக்கொண்ட பாலபடங்கள், அவரை, ’சுப்ரமணியபுரம்’ படத்தில் ’கனகு’ என்னும் வில்லன் நடிகராக மாற்றுகிறது. பின் சமுத்திரக்கனிக்கு ஏறுமுகம் தான். அதன்பின், 2009ஆம் ஆண்டு, ’நாடோடிகள்’ என்ற படத்தினை எடுத்து ரிலீஸ் செய்தார். அப்படம் கனியை வெற்றிப்பட இயக்குநராக மாற்றியது. பின், அப்படத்தின் தெலுங்கு ரீமேக்கினை இயக்கினார், சமுத்திரக்கனி. பின், 2011ஆம் ஆண்டு, ’போராளி’ என்னும் படத்தை இயக்கியிருந்தார், சமுத்திரக்கனி. மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்குப் பின் இருக்கும் வலியை காரணங்களை இப்படம் மூலம் பதிவுசெய்திருப்பார்,சமுத்திரக்கனி. இப்படமும் கமர்ஷியலாக ஹிட் ஆனது. பின், இப்படத்தை புனீத் ராஜ்குமாரை வைத்து, கன்னடத்தில் இயக்கினார், சமுத்திரக்கனி. அப்போது, ஏற்பட்ட காவிரிப் பிரச்னையில், சமுத்திரக்கனியைத் தாக்க சில கன்னடர்கள் வரும்போது, அவரை புனீத் ராஜ்குமார் மிரட்டி, காப்பாற்றியுள்ளார். 

பின், 2014ஆம் ஆண்டு, ஜெயம் ரவியை வைத்து ‘நிமிர்ந்து நில்’ என்ற படத்தை இயக்கினார், சமுத்திரக்கனி. பின் அப்பா, தொண்டன், நடோடிகள் 2, விநோதய சித்தம் ஆகியப் படங்களை இயக்கினார்.

நடிப்பில் கால்பதித்த கனி: இயக்கம் தந்த வெளிச்சம், சுப்பிரமணியபுரத்தில் கனகு என்னும் கேரக்டர் கொடுத்த முகவரி ஆகியவற்றினை இறுகப்பற்றிக்கொண்ட சமுத்திரக்கனி, ஒரு படத்தில் கிடைக்கும் சின்ன சின்ன ரோல்களையும் செய்யத் தொடங்கினார். சுப்பிரமணியபுரத்துக்குப் பின், ’ஈசன்’ படத்தில் ’ஏ.சி.பி. சங்கய்யா’ கேரக்டரில் நடித்து, தமிழ்நாடு அரசின் சிறந்த குணச்சித்திர நடிகர் விருதை வென்றார். பின், ‘சாட்டை’ படத்தில் முன் மாதிரி ஆசிரியர் தயாளனாகவும், ‘நீர்ப் பறவை’ படத்தில் ‘ உதுமான் கனி’ என்னும் முக்கிய கேரக்டரிலும் நடித்தார். குறிப்பாக, ’வேலையில்லா பட்டதாரி’ படத்தில் தனுஷின் தந்தையாக நடித்து, சிறந்த துணை நடிகருக்கான விஜய் டிவி விருதைப் பெற்றார். பலரால் ரசிக்கப்பட்டார். 

முன்னாள் முதலமைச்சர் காமராஜ் குறித்த படத்தில், மாநகராட்சி அதிகாரியாக சம்பளம் வாங்காமல் நடித்தார். பின், ’ரஜினி முருகன்’ படத்தில் இவர் நடித்த ‘ஏழரை’ மூக்கன் என்னும் கேரக்டர், இவரை பட்டித்தொட்டியெங்கும் பிரபலப்படுத்தியது. பின், வெற்றிமாறன் இயக்கத்தில் ‘விசாரணை’ படத்தில், இன்ஸ்பெக்டர் முத்துவேல் என்னும் பாத்திரத்தில் நடித்து சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருதை வென்றார். இதனையடுத்து சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் காலா, வடசென்னை, சில்லுக்கருப்பட்டி, ஆண் தேவதை, ஏலே, தலைவி , வாத்தி, டான் ஆகிய முக்கியப் படங்களில் நடித்து நற்பெயரைச் சம்பாதித்தார்.

தவிர, ஷிகர், ஒப்பம் ஆகிய மலையாளப் படங்களில், அம்மாநில சூப்பர் ஸ்டார் மோகன்லாலுடன் நடித்துள்ளார், சமுத்திரக்கனி.

தெலுங்கில் மோஸ்ட் வான்டட் நடிகர்: அல்லு அர்ஜூன் நடித்த ’அலா வைகுந்தபுரமுலு’ என்னும் தெலுங்கு படத்தின் மூலம் அம்மொழியின் முக்கிய நடிகர் ஆனார், சமுத்திரக்கனி. பின், கிராக் படத்தில் ‘கட்டாரி கிருஷ்ணா’, பீம்லா நாயக்கில் ‘ஜீவன் குமார்’ என்னும் கேரக்டரிலும், ’ஆர்ஆர்ஆர்’ படத்தில் வெங்கடேஸ்வரலு என்னும் கதாபாத்திரத்திலும் நடித்து தெலுங்கிலும் பெயர்பெற்றார். பின், தசரா, விமானம், அனுமன் ஆகிய தெலுங்கு படங்கள், இவரை வேறு ஒரு நடிகராக பரிணமித்தது. தற்போது பிரமாண்ட இயக்குநர் ஷங்கரின் கேம் சேஞ்சர் படத்திலும், இந்தியன் 2 படத்திலும் நடித்து வருகிறார், சமுத்திரக்கனி.

சேத்தூரில் இருந்து கேம் சேஞ்சர் வரையிலான சமுத்திரக்கனியின் பயணம் பலருக்கு நம்பிக்கை அளிக்கிறது. இவர் இயக்கிய ’போராளி’ படத்தில் ஒரு வசனம் வரும், ‘ நீ தோத்தவனை பார்க்கிற பயப்புடுற. நான் ஜெயிச்சவனை பார்க்குறேன் தைரியமா இருக்குறேன்’ என்பது போல..

சமுத்திரக்கனி பலரை தனது வெவ்வேறு படங்களின்மூலம் தைரியப்படுத்த முயற்சித்து இருக்கிறார். அவரது பிறந்தநாளில் அவரை வாழ்த்துவதில் பெருமிதம் கொள்கிறது, இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்!

IPL_Entry_Point

டாபிக்ஸ்