Story of the scene: துரோகம்.. குற்ற உணர்வு.. பழி தீர்த்தல்.. நெஞ்சை பதற வைத்த வடசென்னை ராஜன் கொலை - உருவானது எப்படி?
வடசென்னை திரைப்படத்தில் ராஜன் கொல்லப்படும் காட்சியின் பின்னணியை இங்கு பார்க்கலாம்.
வெற்றிமாறன் இயக்கத்தில், நடிகர்கள் தனுஷ், அமீர், கிஷோர், சமுத்திரக்கனி உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்து, கடந்த 2018ம் ஆண்டு வெளியான திரைப்படம் வடசென்னை.
இந்தப்படத்தின் மிக முக்கியமான காட்சியாக, அந்தப்படத்தில் அமீர் ஏற்று நடித்த ராஜன் கதாபாத்திரத்தின் கொலை அமைந்து இருக்கும். மிகவும் யதார்த்தமாக எடுக்கப்பட்ட அந்த காட்சிதான் படத்தின் அச்சாணி என்று சொல்லலாம். அந்தக்காட்சி குறித்து இயக்குநர் வெற்றிமாறன் விவரிக்கிறார்.
“வடசென்னை திரைப்படத்தில் ராஜனுடைய கொலை தான், படத்தை வரையறுக்கும் காட்சியாக அமைந்திருக்கும். மனிதருடைய மனமென்பது, வெள்ளையோ, கருப்போ கிடையாது. அது சாம்பல் நிறம் கொண்டது.
அந்த காட்சியில், அங்கு எல்லோரும் மனதில் ஒன்றை நினைத்து உட்கார்ந்திருப்பார்கள். அப்போது ராஜன் ஹோட்டலுக்குள் வருவார். அவரை இந்த சமயத்தில் எதுவும் செய்ய வேண்டாம் என்று நினைக்கும் பொழுது, அங்கு வேறு ஒன்று நடக்கிறது.
அப்போது அவர்களது மனது ஒரு விதமாக மாறும். இந்த அத்தனை உணர்ச்சிகளும் அடங்கிய அந்த காட்சி, கிட்டத்தட்ட ஐந்து நிமிடங்கள் வரை செல்லும்.
அந்த ஐந்து நிமிடங்களுக்குள், அவ்வளவு மாற்றங்களும் நிகழ்ந்து, ஒரு மரணம் யாருமே விரும்பாமல், யாருடைய கட்டுப்பாட்டிலும் இல்லாமல் நடக்கும்;
அப்படி நடக்கும் பொழுது, அது ஏற்படுத்தக்கூடிய வலி, தாக்கம், அந்த ஒரு மரணம், 20 வருடங்களுக்கு பல பேருடைய வாழ்க்கையை பாதிக்கப் போகிறது என்பதை மையப்புள்ளியாக கொண்டே அமைக்கப்பட்டு இருக்கும். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாக, அந்த மரணம் பாதிக்கும். ஒரு பக்கம் குற்ற உணர்ச்சியாக, இன்னொரு பக்கம் துரோகமாக, இன்னொரு பக்கம் பழி தீர்த்தலாக மாறும்” என்று பேசினார்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
டாபிக்ஸ்