HBD DeviSriPrasad: கண்மூடி திறக்கும் முன்னே முதல் ஏன் சாமி வாய்யா சாமி வரை: தேவிஸ்ரீபிரசாந்தின் இசை சாம்ராஜ்யம்
HBD DeviSriPrasad: கண்மூடி திறக்கும் முன்னே முதல் ஏன் சாமி வாய்யா சாமி வரை, தேவிஸ்ரீபிரசாந்தின் இசை சாம்ராஜ்யம் குறித்து அவரது பிறந்தநாள் சிறப்புப் பகிர்வுக் கட்டுரையில் காணலாம்.
HBD DeviSriPrasad: ஒவ்வொரு இசையமைப்பாளருக்கும் தனி ஸ்டைல் உண்டு. அதில் தென்னிந்தியாவில் பணியாற்றும் இசையமைப்பாளர் தேவிஸ்ரீபிரசாந்துக்கும் இசையில் தனி ஸ்டைல் உண்டு; தனி ரசிகர்கள் உண்டு. தெலுங்கில் இன்றும் முன்னணி இசையமைப்பாளர் என்றால் அது தேவிஸ்ரீபிரசாத் தான். டிஎஸ்பி என தமிழ் ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீபிரசாந்த், தெலுங்கு மற்றும் தமிழ் சினிமாவில் நன்கு அறியப்பட்ட இசையமைப்பாளராக இருக்கிறார். இவர் இசையமைத்த பல படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட்டாகின. யார் இந்த தேவிஸ்ரீபிரசாந்த்? வாருங்கள் அறிந்துகொள்வோம்.
யார் இந்த தேவி ஸ்ரீபிரசாந்த்?:
தேவி ஸ்ரீபிரசாந்த், ஆந்திர மாநிலம், மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள வெதுருபாகா என்னும் ஊரில் ஆகஸ்ட் 2, 1979ல் பிறந்தார். இவரது தந்தை தெலுங்கில் பிரபலமான திரைக்கதை ஆசிரியர். பெயர் ஜி.சத்யமூர்த்தி, தாய் சிரோன்மணி. தந்தை ஜி.சத்யமூர்த்தி தேவதா, கைதி நம்பர் 786, பெத்தராயுடு போன்ற பல ஹிட் படங்களில் பணியாற்றியிருக்கிறார். தேவி ஸ்ரீ பிரசாந்தின் இயற்பெயர், காந்தம் ஸ்ரீபிரசாந்த். சினிமாவுக்காக தனது தாய்வழிப்பாட்டி தேவி மீனாட்சியின் பெயரை முன்னொட்டாக தன்னுடன் இணைத்துக்கொண்டு தேவிஸ்ரீபிரசாந்த் ஆனார். தேவி ஸ்ரீபிரசாந்துக்கு சாகர் என்கிற ஒரு சகோதரனும், பத்மினி என்கிற சகோதரியும் உள்ளனர். இவர்களது குடும்பம் சென்னையில் உள்ள அபிபுல்லா சாலையிலேயே இருந்தது. தேவிஸ்ரீபிரசாந்தும் பன்னிரெண்டாம் வகுப்பு வரை சென்னையில் தான் படித்துள்ளார். சிறுவயதில் தேவிஸ்ரீ பிரசாந்துக்கு இருக்கும் ஆர்வத்தை அறிந்த, அவரது தந்தை, அவரை மாண்டலின் ஸ்ரீனிவாசனிடம் இசை பயில அனுப்பி வைத்துள்ளார். அங்கிருந்து தேவி ஸ்ரீபிரசாந்தின் இசைப்பயணம் தொடங்கியுள்ளது.
தேவிஸ்ரீ பிரசாந்தின் இசைப் பயணம்:
ஒருமுறை திரைப்படத்தயாரிப்பாளர் எம்.எஸ்.ராஜூ, சென்னையில் இருக்கும் திரைக்கதை ஆசிரியர் ஜி.சத்யமூர்த்தியை பார்க்கச் சென்றபோது, அங்கு இசை அமைத்துக்கொண்டு இருந்த தேவிஸ்ரீபிரசாந்தை பார்த்து வியந்துபோய், இவரை தன் திரைப்படத்தில் இசையமைக்கச் சொன்னார். அப்படி 19 வயதில் தேவிஸ்ரீபிரசாந்த் இசையமைத்த படம் தான், 1999ஆம் ஆண்டு வெளியான தெலுங்கு திரைப்படமான ‘தேவி’. இப்படத்தின் பாடல்கள் சூப்பர்ஹிட்டாகின.
அதே ஆண்டில் இயக்குநர் ஸ்ரீனு வைட்லாவுடன் சேர்ந்து ஆனந்தம் என்னும் தெலுங்கு படத்துக்கு இசையமைத்தார், தேவிஸ்ரீபிரசாந்த். இது அந்த காதல் படத்தை தூக்கி நிறுத்தியது. அதன்பின், 2001ஆம் ஆண்டு, பத்ரி என்னும் விஜய் நடித்த தமிழ் திரைப்படத்திற்கு பின்னணி இசைமட்டும் செய்திருந்தார்.
அதன்பின், பிரியா நெஸ்டம்மா, கலுகோவலனி, சொந்தம், கட்கம், தொட்டி கேங், மன்மதடு ஆகிய தெலுங்கு படங்களுக்கு இசையமைத்தார். அதன்பின், பிரபாஸ், திரிஷா நடித்த வருஷம், ரவிதேஜா மற்றும் சினேகா நடித்த வெங்கி ஆகியப்படத்துக்கும் இசையமைத்தார், தேவி ஸ்ரீபிரசாந்த். அதன்பின் கிடைத்தது தான், தெலுங்கின் முன்னணி இயக்குநர் சுகுமாரின் முதல் படமான ‘ஆர்யா’. இப்படத்தில் இவரது இசை தான் படத்தை மிகப்பெரிய அளவில் மக்களிடம் கொண்டுபோய் சேர்த்தது எனலாம். ஹீரோ அல்லு அர்ஜூனும் இவரது இசைக்கு நியாயம் செய்யும் வகையில் டான்ஸ் ஆடியிருப்பார். பின் ஷங்கர் தாதா எம்.பி.பி.எஸ். என்னும் சிரஞ்சீவி படத்துக்கு இசையமைத்தார்.
தமிழில் இறங்கி அடித்த தேவிஸ்ரீபிரசாந்த்:
முதன்முறையாக தமிழில் 2005ஆம் ஆண்டு சச்சின் என்னும் படத்தில் இசையமைப்பாளராக அறிமுகம் ஆனார், தேவி ஸ்ரீபிரசாந்த், அதன்பின், மழை, ஆறு, உனக்கும் எனக்கும், சந்தோஷ் சுப்பிரமணியம், வில்லு, கந்தசாமி, குட்டி, சிங்கம், மன்மதன் அம்பு, வேங்கை, அலெக்ஸ் பாண்டியன், வீரம், பிரம்மன், புலி, சாமி ஸ்கொயர், ரத்னம் என நீண்ட தேவிஸ்ரீபிரசாந்தின் பட்டியல், தற்போது கங்குவா படம் வரை இருக்கிறது.
இதுவரை நூறுக்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்த தேவிஸ்ரீபிரசாந்த், ராக் ஸ்டார் எனப் புகழப்பட்டவர். குறிப்பாக, இவரது இசையில் குத்துப்பாடல்கள் மிகப்பிரபலமாக ஹிட்டாகும். சமீபத்தில் வெளியான புஷ்பா என்ற பான் இந்தியப் படத்துக்கு கூட தேவி ஸ்ரீபிரசாந்த் தான் இசை. இதுதான் அவரது இசைப்பணிக்கு ஒரு சோற்று சமீபத்திய உதாரணம்.
தேசிய விருதுபோன்ற பல விருதுகளை வென்ற தேவிஸ்ரீபிரசாந்துக்கு இன்னும் பல விருதுகிடைக்க பிறந்தநாள் வாழ்த்துகள்