தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  14 Years Of Singam: சூர்யாவின் அருவா மீசை! போலீஸ் பற்றி பெருமை பேசிய சிங்கம் - தமிழ் சினிமாவின் சிறந்த மாஸ் மசாலா படம்

14 Years of Singam: சூர்யாவின் அருவா மீசை! போலீஸ் பற்றி பெருமை பேசிய சிங்கம் - தமிழ் சினிமாவின் சிறந்த மாஸ் மசாலா படம்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
May 28, 2024 06:30 AM IST

தமிழ் சினிமாவின் சிறந்த மாஸ் மசாலா திரைப்படமாகவும், போலீஸ் பற்றி பெருமை பேசிய படமாகவும் சூர்யா - ஹரி கூட்டணியில் உருவான சிங்கம் படம் உள்ளது. சூர்யாவுக்கு ஆக்‌ஷன் ஹீரோ அந்தஸ்து தந்த இந்த படம் மிரட்டலான ஆக்‌ஷன் காட்சிகளால் படத்தின் மேக்கிங் வெகுவாக பேசப்பட்டது. சூர்யாவின் அருவா மீசையும் ட்ரெண்ட் ஆனது

போலீஸ் பற்றி பெருமை பேசிய சிங்கம், தமிழ் சினிமாவின் சிறந்த மாஸ் மசாலா படம்
போலீஸ் பற்றி பெருமை பேசிய சிங்கம், தமிழ் சினிமாவின் சிறந்த மாஸ் மசாலா படம்

ட்ரெண்டிங் செய்திகள்

மூன்றாவது முறையாக இணைந்த சூர்யா - ஹரி கூட்டணி

ஆறு, வேல் ஆகிய படங்களின் வெற்றியை தொடர்ந்து சூர்யா - ஹரி மூன்றாவது முறையாக கூட்டணி அமைத்த படம் சிங்கம். கிளாஸ் ஹீரோவாக இருந்த சூர்யாவை மாஸ் ஹீரோவாக மாற்றியதில் முக்கிய பங்கு வகித்தவர் ஹரி.

ஆறு படத்தில் சென்னையை சேர்ந்த லோக்கல் ஹீரோவாகவும், வேல் படத்தில் டிடெக்டிவ் மற்றும் வில்லேஜ் ஹீரோவாக டபுள் ஆக்டிங்கில் சூர்யாவை மாறுபட்ட பரிணாமத்தில் காட்டியிருப்பார். ஆனால் சிங்கம் படத்தில் இவை இரண்டிலும் இருந்து வித்தியாசமாக அதிரடியான போலீஸ் ஆபிசராக மிடுக்கான தோற்றம், கூரான மீசை லுக், கம்பீர பேச்சு என மாஸ் ஹீரோவாக சிங்கம் படத்தில் காட்சிபடுத்தியிருப்பார்.

மாஸ் மசாலா எண்டர்டெயினர்

சிங்கம் படத்தின் கதையும், அதன் விறுவிறுப்பான திரைக்கதையும் அனைவருக்கும் தெரிந்து விஷயம் தான். அந்த படத்தின் க்ளைமாக்ஸில் வருவது போல் தூத்துக்குடி நல்லூரில் தொடங்கி, ஆந்திரா நெல்லூர் வரை படம் முழுவதும் பரபரப்பு காட்சிகள், பைட், சேஸிங் எனவும், தேவைப்படும் இடத்தில் காதல், செண்டிமெண்ட், துள்ளலான பாடல் காட்சிகள் எனவும் நல்ல மாஸ் மசாலா திரைப்படமாக அமைந்திருக்கும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை என அனைவரும் ரசிக்கும் விதமான படத்தின் காட்சிகள் ஒவ்வொன்றும் இடம்பிடித்திருக்கும்.

சூர்யாவுக்கு ஜோடியாக அனுஷ்கா பக்காவான பொருத்தமாக இருப்பதுடன், இருவருக்கும் இடையிலான கெமிஸ்ட்ரி சிங்கம் சீரிஸ் படம் முழுவதும் அழகான காதல் எபிசோடாக ரசிக்க வைக்கும். அதேபோல் படம் முழுக்க காமெடியில் விவேக் கலக்கியிருப்பார். வில்லனாக பிரகாஷ் ராஜ் அலட்டிக்கொள்ளாத விதத்தில் வில்லத்தனத்தில் மிரட்டியிருப்பார்.

ராதா ரவி, நாசர், விஜய குமார், போஸ் வெங்கட், சுமித்ரா, ஜானகி சபேஷ், யுவராணி, மனோரமா உள்பட பலரும் தங்களது கதாபாத்திரத்தை சிறப்பாக செய்திருப்பார்கள்.

சூர்யாவுக்கு ஆக்‌ஷன் ஹீரோ அந்தஸ்து

சிங்கம் படத்துக்கு முன்னரே பல படங்களில் சூர்யா ஆக்‌ஷன் வேடங்களில் நடித்திருந்தாலும், இந்த படத்தில் இவர் பேசும் பஞ்ச் வசனங்கள், போலீஸ் கதாபாத்திரத்தில் இருந்த பெர்பெக்‌ஷன் போன்றவை அவருக்கு ஆக்‌ஷன் ஹீரோ அந்தஸ்தை தந்தது. அருவா போன்ற தோற்றத்தில் இருக்கும் சூர்யாவின் மீசை அப்போது இளைஞர்கள், ஆண்கள் மத்தியில் ட்ரெண்டானது.

ரேஸ் வேகத்தில் செல்லும் திரைக்கதை, தனித்துவமான ஆக்‌ஷன் காட்சிகள் போன்ற படத்தை தனித்துவமாக காட்டும் விஷயமாக இருந்தன. ஆக்‌ஷன் காட்சிகளால் படத்தின் மேக்கிங் வெகுவாக பேசப்பட்டது.

பாடல், பின்னணி இசையில் மிரட்டிய தேவி ஸ்ரீ பிரசாத்

படத்துக்கு பாடலாசிரியர்கள் விவகா, நா. முத்துக்குமார் ஆகியோர் பாடல்கள் எழுத தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருப்பார். என் இதயம் என்ற மெலடி பாடல், காதல் வந்தாலே துள்ளிசை பாடலும் சிங்கம் படத்தை நினைவு கூறும் பாடலாக இன்றளவும் ஒலித்துக்கொண்டிருக்கிறது.

பாக்ஸ் ஆபிஸ் ஹிட்

கோடை விடுமுறை முடிவதற்கு முன்பு மே 28ஆம் தேதி உலகம் முழுவதும் சுமார் 800 திரையரங்குகளில் படம் வெளியாகி, விடுமுறை தின ட்ரீட்டாக இந்த படம் ரசிகர்களுக்கு அமைந்தது. படத்துக்கு கிடைத்த வரவேற்பால் இந்தி, வங்காளம், பஞ்சாபி, கன்னடம் ஆகிய மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு அங்கும் ஹிட்டடித்தது. நேர்மையான போலீஸ் கதாபாத்திரத்தை பின்னணியாக வைத்து, வில்லனகள் வேட்டையாடும் கதையம்ச்தில் காவல்துறை பற்றி பெருமை பேசும் விதமாக தமிழ் சினிமாவில் உருவான சிறந்த படமாக இருந்து வரும் சிங்கம் வெளியாகி இன்றுடன் 14 ஆண்டுகள் ஆகிறது.

ரஜினிக்கு பாட்ஷா படத்தை போல், சூர்யாவின் சிங்கம் படம் எந்த காலகட்டத்திலும் பார்த்து ரசிக்ககூடிய சிறந்த மசாலா படமாக உள்ளது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

டி20 உலகக் கோப்பை 2024

டாபிக்ஸ்