HBD Vijay Vasanth: நடிகர் விஜய் வசந்துக்கு பிறந்த நாள்.. நடிகர், தொழிலதிபர், அரசியல்வாதி என பல குதிரை பயணியின் கதை!
HBD Vijay Vasanth: நடிகர் விஜய் வசந்துக்கு பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. அவரது பிறந்தநாள் தொடர்பான சிறப்புக் கட்டுரை..

HBD Vijay Vasanth: விஜய் வசந்த், பல்வேறு பரிணாமங்களை தன்னிடம் கொண்டவர். சினிமாவில் நடிகர், தொழில் முனைவோர், அரசியல்வாதி எனப் பல்வேறு குதிரைகளில் பயணிக்கும் திறன் கொண்டவர். மறைந்த தொழிலதிபரும் வசந்த் அண்ட் கோ குழுமங்களின் தலைவருமான மறைந்த ஹெச். வசந்த குமாரின் மகன், விஜய் வசந்த். அவரது தந்தையின் இறப்புக்குப் பின், கன்னியாகுமரி மக்களவைக்கான இடைத்தேர்தலில் நின்று, வென்று, தற்போது எம்.பி.ஆக உள்ளார். அவரைப் பற்றி அறிந்துகொள்ள நம்மிடம் கூடுதல் தகவல்கள் உள்ளன. வாருங்கள் பார்ப்போம்.
யார் இந்த வசந்த குமார்?:
மறைந்த தொழிலதிபர் வசந்த குமார் மற்றும் தமிழ் செல்வி தம்பதினரின் மகன், விஜய் வசந்த். இவர் நாகர்கோவிலில் 1983ஆம் ஆண்டு, மே 20ஆம் தேதி பிறந்தார். 2010ஆம் ஆண்டு, நித்யா என்பவரை மணந்தார். விஜய் வசந்த் மற்றும் நித்யா தம்பதியினருக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர்.
விஜய் வசந்தின் பூர்வீகம் நாகர்கோவில் அருகிலுள்ள அகஸ்தீஸ்வரம் ஆகும். விஜய் வசந்துக்கு வினோத் குமார் என்ற சகோதரனும், தங்கமலர் என்ற சகோதரியும் உள்ளனர்.
