HT Election Special: கரை சேருமா கை?.. மீண்டும் மலருமா தாமரை?.. கன்னியாகுமரி தொகுதி களநிலவரம் இதோ.!
கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதியை பொறுத்தவரை நான்கு கட்சிகளும் தீவிர வாக்கு வேட்டை நடத்தி வருவதால் தேர்தல் களம் நாளுக்கு நாள் அனலை கிளப்பி வருகிறது.

Lok Sabha Election 2024: நாட்டின் 18-வது மக்களவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டு, நாடு முழுவதும் களைகட்டத் துவங்கிவிட்டது . 7 கட்டங்களாக நடைபெற உள்ள இத்தேர்தலுக்காக அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். ஆட்சியை தக்க வைக்கும் முனைப்பில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியும், ஆட்சி கட்டிலில் ஏறும் முனைப்பில் இந்தியா கூட்டணியும் தீவரமாக களப்பணியாற்றி வருகின்றன. தமிழகத்திலும் நாளுக்கு நாள் தேர்தல் களம் சூடுபிடித்து வருகிறது. தமிழ்நாட்டை பொறுத்தவரை ஏப்ரல் 19 ஆம் தேதி மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக பணியாற்றி வருகின்றன.
ஆளும் கட்சியான திமுக தலைமையிலான ஒரு அணியும், பிரதான எதிர்கட்சியான அதிமுக ஒரு அணியாகவும் இத்தேர்தலை சந்திக்கின்றன. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி பாமக, அமமுக, தமிழக மக்கள் முன்னேற்ற கட்சி, இந்திய ஜனநாயக கட்சி, ஓபிஎஸ் அணி உள்ளிட்டோருடன் இணைந்து தேர்தல் களம் காண்கிறது. நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை அறிவித்து தனித்து களம் காண்கிறது.
நாளுக்கு நாள் தேர்தல் களம் சூடுபிடித்துவரும் சூழலில், கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி எம்.பி பதவியை யார் கைப்பற்ற போகிறார் என்பதை இந்த சிறப்பு தொகுப்பில் பார்ப்போம்..!
நான்கு முனை போட்டி
பாஜக சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் போட்டியிடுகிறார். காங்கிரஸ் சார்பில் தற்போதைய எம்.பி விஜய் வசந்த் மீண்டும் களமிறங்கி உள்ளார். அதிமுக சார்பில் பசிலியான் நசரேத், நாம் தமிழர் கட்சி சார்பில் மரிய ஜெனிபர் ஆகியோர் போட்டியிடுகின்றனர். இதன் மூலம் கன்னியாகுமரி தொகுதியில் நான்கு முனை போட்டி என்பது உறுதியாகிவிட்டது.
கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதியை பொறுத்தவரையில் திமுக, காங்கிரஸ் கூட்டணி இணைந்துள்ளதால் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கும். சிறுபான்மை வாக்குகள் இந்தக் கூட்டணிக்கு ஒட்டுமொத்தமாக கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
விஜய் வசந்தின் தந்தை வசந்தகுமார் கடந்த 2019 தேர்தலில் போட்டியிட்டு 2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் பொன்னாரை தோற்கடித்தார். வசந்தகுமார் மறைவை அடுத்து 2021-ல் நடந்த இடைத்தேர்தலில் மத்தியில் பாஜக ஆட்சிதான் இருந்தது. ஆனாலும் விஜய் வசந்தை கன்னியாகுமரி மக்கள் வெற்றி பெறச் செய்தனர். அதுபோல் இம்முறையும் மக்களின் ஆதரவு தனக்குத்தான் கிடைக்கும் என விஜய் வசந்த் நம்பிக்கையுடன் இருக்கிறார்.
கன்னியாகுமரி தொகுதிக்கு 48 ஆயிரம் கோடி ரூபாய்க்கான வளர்ச்சி திட்டங்களை கொண்டுவந்துள்ளேன் என பொன்.ராதாகிருஷ்ணன் இப்போதே பிரசாரத்தை முன்னெடுத்துள்ளார்.
அதிமுகவிலும், நாம் தமிழர் கட்சியிலும் மீனவர் சமூகத்தை சேர்ந்த வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளதால் அவர்கள் காங்கிரஸின் வாக்கு வங்கியான மீனவர்கள் வாக்குகளை கணிசமாக பெறுவார்கள். அதன் மூலம் தங்களது வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளதாக பொன்னார் தரப்பு கணித்திருக்கிறது.
கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதியை பொறுத்தவரை நான்கு கட்சிகளும் தீவிர வாக்கு வேட்டை நடத்தி வருவதால் தேர்தல் களம் நாளுக்கு நாள் அனலை கிளப்பி வருகிறது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9

டாபிக்ஸ்