Vijayadharani MLA: ’துரோகம்! துரோகம்! துரோகம்!’ விஜயதாரணியை விளாசும் விஜய் வசந்த்!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Vijayadharani Mla: ’துரோகம்! துரோகம்! துரோகம்!’ விஜயதாரணியை விளாசும் விஜய் வசந்த்!

Vijayadharani MLA: ’துரோகம்! துரோகம்! துரோகம்!’ விஜயதாரணியை விளாசும் விஜய் வசந்த்!

Kathiravan V HT Tamil
Published Feb 24, 2024 04:22 PM IST

”3 முறை சட்டமன்ற உறுப்பினராக்கி அழகு‌ பார்த்த விளவங்கோடு தொகுதி மக்களுக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் செய்த மிகப்பெரிய துரோகம்”

விஜயதாரணி - கன்னியாகுமரி எம்.பி விஜய் வசந்த்
விஜயதாரணி - கன்னியாகுமரி எம்.பி விஜய் வசந்த்

தமிழகத்தில் மக்களவை தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீட்டு பேச்சு வார்த்தை என தேர்தல் களம் அனல் பறக்கத் தொடங்கி உள்ளது. இந்த நிலையில், விளவங்கோடு தொகுதி காங்கிரஸ் பெண் எம்.எல்.ஏ. விஜயதாரணி இன்று பாஜகவில் தன்னை இணைத்துக்கொண்டார்.

டெல்லி பாஜக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் அருண் சிங் மற்றும் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் முன்னிலையில் அவர் இணைந்தார்.

இந்த நிலையில் விஜயதாரணி பாஜகவில் இணைந்துள்ளது குறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கருத்து தெரிவித்துள்ளார். அதில், அந்த அம்மையார் எங்கிருந்தாலும் வாழ்க; அன்னை சோனியா காந்தி அவர்கள் இந்த அம்மா மீது கருணை வைத்து மூன்று முறை சட்டமன்ற உறுப்பினர் ஆக்கினார். இந்த கட்சி எல்லாவற்றையும் அவர்களுக்கு கொடுத்தது. பணி செய்யவில்லை என்றாலும் கட்சியில் பெருமையுடன் வழிநடத்தினோம்.

என்னுடைய பார்வை மீண்டும் அவர் திரும்பி வருவார், அங்கே சென்றவர்கள் யாரும் மகிழ்ச்சியாக இல்லை என்று தெரியும். இந்த தேசத்தை பாதுகாக்கும் வேளையில் இப்படிப்பட்ட செயலில் இறங்கி இருப்பது வருத்தம். எங்கிருந்தாலும் வாழ்க! என தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகியது ஏன் என்ற கேள்விக்கு, பதில் அளித்த விஜயதாரணி, காங்கிரஸ் கட்சியில் தலைமை பதவிகளுக்கு பெண்கள் வர முடியாத சூழல் நிலவுகிறது. மூன்று முறை எம்.எல்.ஏவாக இருந்த நான் சட்டமன்ற முதன்மை கொறடாவாக நீண்டநாள் இருந்துவிட்டேன். சட்டமன்ற கட்சித் தலைவர் பொறுப்பை என்னைவிட ஜூனியருக்குதான் கொடுத்துள்ளனர். சென்ற முறை எம்.பி தேர்தலுக்கு நான் வாய்ப்பு கேட்டேன். 1999ஆம் ஆண்டு முதல் எம்.பி சீட்டு கேட்டேன். ஆனால் அதற்கான வாய்ப்பு மறுக்கப்பட்டது என விஜயதாரணி கூறி இருந்தார். 

இந்த நிலையில், விஜயதாரணி பாஜகவில் இணைந்துள்ளது குறித்து கன்னியாகுமரி எம்.பி விஜய்வசந்த் ட்வீட் செய்துள்ளார். அதில், திருமதி. விஜயதரணி அவர்கள் மாற்று கட்சியில் இணைந்தது அவரை 3 முறை சட்டமன்ற உறுப்பினராக்கி அழகு‌ பார்த்த விளவங்கோடு தொகுதி மக்களுக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் செய்த மிகப்பெரிய துரோகம். மக்கள் அவரை ஒரு போதும் மன்னிக்க மாட்டார்கள் என கூறி உள்ளார். 

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.