HBD Kushboo: கோயில் கட்டி, இட்லியாக சமைத்து கொண்டாடப்பட்ட நடிகை..தமிழ் மக்கள் மனங்களில் நிறைந்திருக்கும் குஷ்பூ-south india movie actress politician kushboo celebrating her birthday today - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Hbd Kushboo: கோயில் கட்டி, இட்லியாக சமைத்து கொண்டாடப்பட்ட நடிகை..தமிழ் மக்கள் மனங்களில் நிறைந்திருக்கும் குஷ்பூ

HBD Kushboo: கோயில் கட்டி, இட்லியாக சமைத்து கொண்டாடப்பட்ட நடிகை..தமிழ் மக்கள் மனங்களில் நிறைந்திருக்கும் குஷ்பூ

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Sep 29, 2024 05:30 AM IST

HBD Kushboo: கோயில் கட்டி, இட்லியாக சமைத்து கொண்டாடப்பட்ட நடிகையாக இருந்து வரும் குஷ்பூ நடிகர்களுக்கு இணையாக தனக்கென ரசிகர் கூட்டத்தை உருவாக்கிய நடிகை என்ற பெருமைக்கு உரியவராக இருக்கிறார். சினிமா, அரசியல் என தமிழ் மக்கள் மனங்களில் நிறைந்திருக்கும் குஷ்பூவுக்கு இன்று பிறந்தநாள்.

HBD Kushboo: கோயில் கட்டி, இட்லியாக சமைத்து கொண்டாடப்பட்ட நடிகை..தமிழ் மக்கள் மனங்களில் நிறைந்திருக்கும் குஷ்பூ
HBD Kushboo: கோயில் கட்டி, இட்லியாக சமைத்து கொண்டாடப்பட்ட நடிகை..தமிழ் மக்கள் மனங்களில் நிறைந்திருக்கும் குஷ்பூ

மும்பை டூ தமிழ்நாடு மருமகள்

மகாராஷ்ட்ரா மாநிலம் மும்பையை சேர்ந்தவரான நடிகை குஷ்பூவின் நிஜ பெயர் நகத் கான். இந்தி படத்தில் குழந்தை நட்சத்திரமாக இவர் அறிமுகமானபோது, குஷ்பூ என்ற பெயர் இவருக்கு வைக்கப்பட்டது. 1980 முதல் 85 காலகட்டத்தில் குழந்தை நட்சத்திரமாக தோன்ற பலரது கவனத்தை ஈர்த்தார்.

தனது டீன் ஏஜ் வயதில் 1986இல் வெளியான கலியுக பாண்டவலு என்ற படத்தில் வெங்கடேஷ் ஜோடியாக நடித்து ஹீரோயினாக அறிமுகமானார். தொடர்ந்து தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த தர்மத்தின் தலைவன் படம் மூலம் தமிழில் அறிமுகமானார். இந்த படத்தில் இரண்டாவது ஹீரோவாக நடித்த பிரபுவின் ஜோடியாக குஷ்பூ தோன்றியிருப்பார். அதன் பின் பாசில் இயக்கத்தில் வெளியான வருஷம் 16 என்ற திரைப்படத்தில் சோலோ நாயகியாக நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்து தமிழ் மக்களின் மனதில் குடிபுகுந்தார்.

இதன் பின்னர் 1990களில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் சினிமாக்களில் டாப் ஹீரோயினாக வலம் வந்தார். மார்கெட்டில் உச்சத்தில் இருந்தபோதே இயக்குநர் சுந்தர் சியை காதலித்து திருமணம் செய்து கொண்டு தமிழ்நாடு மருமகள் ஆனார்.

தமிழ் ரசிகர்கள் கோயில் கட்டிய முதல் நடிகை

குஷ்பூவுக்கு கோயில் கட்டும் அளவிற்கு வெறித்தனமான ரசிகர்கள் கூட்டம் தமிழ்நாட்டில் இருந்தன. இதன் மூலம் தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்தியாவிலேயே கோயில் கட்டப்பட்ட நடிகை என்ற பெருமையை பெற்றார். அத்துடன் குஷ்பூவின் குண்டான தோற்றத்தை ஒத்து தமிழ்நாட்டின் பேமஸ் உணவாக இருக்கும் இட்லியை குண்டாக சமைத்து குஷ்பூ இட்லி என்ற பெயரில் தமிழக மக்கள் கொண்டாடினார்கள்.

வெறும் இட்லியோடு நிறுத்தாமல் திரைப்படங்களில் குஷ்பூ அணியும் ஆடை, அணிகலன்களையும் அவரது பெயரில் குஷ்பூ சேலை, குஷ்பூ ஜிமிக்கி என்ற பெயரில் அழைத்து மகிழ்ந்தார்கள்.

அரசியல் பயணம்

திருமணத்துக்கு பிறகு தொடர்ந்து சினிமாக்களில் நடித்து வந்தார் குஷ்பூ. இடையில் குழந்தைகளுக்கு தாயான பின்னரும் நடிப்பையும், குடும்பத்தையும் சரியாக கவனித்து வந்தார். 2010இல் திமுகவில் இணைந்தார் குஷ்பூ. அப்போது கட்சியின் தலைவராக இருந்த கலைஞர் கருணாநிதி முன்னிலையில் சேர்ந்த அவர், பின்னர் 2014இல் விலகி இந்திய தேசிய காங்கிரஸில் இணைந்தார்.

2020இல் அங்கிருந்து விலகிய அவர் பின் பாஜவில் இணைந்தார். பாஜக சார்பில் திமுகவின் கோட்டையான ஆயிரம் விலக்கு தொகுதியில் 2021 சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட்டார் குஷ்பூ. இதில் திமுக வேட்பாளருக்கு எதிராக தோல்வியை பெற்றார். இருப்பினும் 28.99 சதவீதம் வாக்குகளை பெற்றார்.

குஷ்பூவின் சர்ச்சை

தனது கலையுலக பயணத்திலும் சரி, அரசியல் வாழ்க்கையிலும் சரி பல்வேறு சமூக கருத்துகளை வெளிப்படுத்தியிருக்கும் குஷ்பூ, தனது பேச்சாலும், நடத்தையாலும் பல சர்ச்சைகளிலும் சிக்கியுள்ளார். திருமணத்துக்கு முன் பெண்கள் பாதுகாப்பாக பாலியல் உறவு வைத்து கொள்வது, கடவுளின் புகைப்படங்களை கொண்டிருக்கும் சேலை அணிந்து பொது இடத்துக்கு வந்தது என இவரது மாட்டிக்கொண்ட சர்ச்சைகள் ஏராளம். ஆனால் அவை அனைத்துக்கும் துணிச்சலாக எதிர்கொண்டு கடந்து சென்ற நடிகையாக திகழ்ந்துள்ளார்.

திரையுலகத்தில் முன்னணி நடிகையாக விளங்கி குஷ்பூ, பின்னர் அரசியலிலும் தன்னை இணைத்துக் கொண்டு தான் ஈடுபட்டிருக்கும் கட்சிக்கு சிறப்பான பணியை செய்து வருபவராக திகழ்கிறார்.

நடிகைக்கு ரசிகர் கூட்டத்தை உருவாக்கியவர்

தமிழ் சினிமாவில் 90களில் உள்ள ஹீரோக்களில் கிட்டத்தட்ட பெரும்பாலோனருடன் இணைந்து நடித்துள்ள குஷ்பூ தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருது, தமிழ்நாடு அரசின் சிறந்த நடிகை விருது, சினிமா எக்ஸ்பிரஸ் விருது போன்ற பல்வேறு விருதுகளை வென்றவராக உள்ளார். சினிமா பார்க்க வேண்டும் என்பதை கடந்து, குஷ்பூவை பார்க்க திரையரங்குக்கு ரசிகர்களை வரவழைத்த நடிகைகளில் முக்கியமானவர் குஷ்பூ.

முஸ்லீம் பெண்ணான குஷ்பூ, இந்துவை திருமணம் செய்து கொண்டாலும் மதமாற்றம் செய்து கொள்ளவில்லை. தன்னை அவர் நாத்திகர் என்றே அடையாளப்படுத்தி கொண்டுள்ளார்.

ஹீரோக்கள் மீதான சினிமா ரசிகர்களின் வழிபாடுக்கு இணையாக ஹீரோயினை கொண்டாட வைத்து, பொதுமக்களின் மனங்களில் நடிகை குஷ்பூ இடம் பிடித்தது போல் இதுவரை எந்த நடிகையும் பிடிக்கவில்லை என்பதுதான் எதார்த்த உண்மை. சினிமாவிலும், அரசியலும் தமிழக மக்களின் மனங்களில் நீக்கமற நிறைந்திருக்கும் குஷ்பூ இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

 

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.