தமிழ் செய்திகள்  /  Entertainment  /  Singer Sonu Nigam Pushed, His 2 Colleagues Manhandled At Mumbai Event

Mumbai: பிரபல பாடகரை தள்ளிவிட்டதாக சிவசேனா எம்எல்ஏ மகன் மீது வழக்கு

Manigandan K T HT Tamil
Feb 21, 2023 01:32 PM IST

Singer Sonu Nigam: “ஸவப்னில் பதேர்கர் என்பவர் பின்பக்கமாக வந்து சோனு நிகத்தை பிடித்து நிறுத்தியிருக்கிறார். அப்போது செல்ஃபி எடுக்க விரும்புவதாக அவரிடம் ஸவப்னில் தெரிவித்திருக்கிறார்.”

செம்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்த பாடகர் சோனு நிகம்
செம்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்த பாடகர் சோனு நிகம் (PTI)

ட்ரெண்டிங் செய்திகள்

இதுகுறித்து காவல் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:

மும்பையின் செம்பூர் ஜிம்கானாவில் திங்கள்கிழமை இரவு சோனு நிகத்தின் லைவ் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சி முடிவடைந்த பிறகு, சோனு நிகமும், அவருடன் பணிபுரிபவர்களும் அரங்கை விட்டு வெளியேறியிருக்கின்றனர்.

அப்போது, ஸவப்னில் பதேர்கர் என்பவர் பின்பக்கமாக வந்து சோனு நிகத்தை பிடித்து நிறுத்தியிருக்கிறார். அப்போது செல்ஃபி எடுக்க விரும்புவதாக அவரிடம் ஸவப்னில் தெரிவித்திருக்கிறார்.

அதை கவனித்த சோனு நிகம் உடன் இருந்த ஹரி பிரகாஷ் என்பவர் ஸ்வப்னிலை அங்கிருந்து அப்புறப்படுத்த முயற்சி செய்திருக்கிறார்.

அப்போது ஸ்வப்னில் ஹரி பிரகாஷுடன் கைகலப்பில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. அப்போது ஹரி பிரகாஷ் மேடையில் இருந்து கீழே விழுந்து காயமடைந்தார். சோனு நிகத்தையும் ஸவப்னில் தள்ளிவிட்டதாகவும், அதில் அவர் படியில் விழுந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.

இதையடுத்து, அங்கிருந்த பணியாளர்கள் அவர்களை மீட்டு பத்திரமாக அங்கிருந்து அழைத்துச் சென்றிருக்கின்றனர். காயமடைந்த ஹரி பிரகாஷ் செம்பூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

கைகலப்பில் காயமடைந்த மற்றொரு நபரான ரப்பானி கானும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதுதொடர்பாக பாடகர் சோனு நிகம் செம்பூர் காவல் நிலையத்தில் இன்று காலை புகார் அளித்தார்.

செம்பூரில் கைகலப்பு நேரிட்டபோது எடுக்கப்பட்ட புகைப்படம்
செம்பூரில் கைகலப்பு நேரிட்டபோது எடுக்கப்பட்ட புகைப்படம் (PTI)

விசாரணையில் ஸவப்னில் சிவசேனா கட்சியின் எம்எல்ஏ பிரகாஷ் படேர்பெகரின் மகன் என்பது தெரியவந்தது.

இந்தச் சம்பவம் தொடர்பாக ஸவப்னிலுக்கு எதிராக இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் வேண்டுமென்றே காயம் ஏற்படுத்துதல் பிரிவு 323, தவறான நடத்தை-பிரிவு 341, மற்றவர்களின் உயிருக்கு அல்லது தனிப்பட்ட பாதுகாப்பிற்கு ஆபத்தை விளைவிக்கும் செயலின் மூலம் காயத்தை ஏற்படுத்துதல்-பிரிவு 337-இன் கீழ் ஸவப்னிலுக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று அந்த காவல் துறை அதிகாரி தெரிவித்தார்.

இதனிடையே, ஸவப்னிலின் சகோதரி டுவிட்டரில் வெளியிட்ட பதிவொன்றில், தேவையில்லாத நிகழ்வுக்காக சோனு நிகம் மற்றும் விழா ஏற்பாட்டாளர்களிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறோம். பாடகருடன் செல்ஃபி எடுக்கவே எனது சகோதரர் விரும்பினார். அவசரமும் ஆவேசமும் காரணமாக, ஒரு சலசலப்பு ஏற்பட்டது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, சோனு நிகம் உடன் இருந்தவர்களுடன் ஸவப்னில் கைகலப்பில் ஈடுபட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவியது.

பாடகர் சோனு நிகம், இந்தி, தமிழ், கன்னடம் உள்ளிட்ட பல மொழி திரைப்படங்களில் பாடியுள்ளார்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்