Tamil Movies:சூர்யாவின் ரொமான்ஸ், விக்ரமின் அதிரடி, பிரசாந்தின் டான்ஸ், பிரபுவின் காமெடி.. இன்றைய நாளில் வெளியான படங்கள்
Tamil Movies:சூர்யாவின் ரொமான்ஸ், விக்ரமின் அதிரடி, பிரசாந்தின் டான்ஸ், பிரபுவின் காமெடி.. இன்றைய நாளில் வெளியான படங்கள் குறித்துப் பார்க்கலாம்.
Tamil Movies: செப்டம்பர் 8ஆம் தேதியான இன்று சில்லுனு ஒரு காதல், பட்ஜெட் பத்மநாபன், இருமுகன், ஜாம்பவான் ஆகியப் படங்கள் வெளியாகியுள்ளன. அவை குறித்துப் பார்க்கலாம்.
சில்லுனு ஒரு காதல்:
நடிகர் சூர்யாவின் கேரியரில் அதிகம்பேரால் பார்க்கப்பட்டு கொண்டாடப்பட்ட படம் என்றால் அது சில்லுனு ஒரு காதல்(2006) தான். கல்லூரிக்காலத்தில் மிகவும் ரவுடிஸம் செய்துகொண்டு இருக்கும் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படிக்கும் மாணவன் கெளதம்(சூர்யா), ஐஸ்வர்யா(பூமிகா) என்னும் பெண் மீது காதலில் விழுகிறான். இருவரும் பதிவுத்திருமணம் செய்துகொண்டநிலையில், அதை அறிந்து பெண்ணின் தந்தை வந்து, ஐஸ்வர்யாவைப் பிரித்துச் சென்றுவிடுகிறார். அதன்பின் ஐஸ்வர்யா, ஆஸ்திரேலியாவுக்கு அனுப்பப்படுகிறார். காலப்போக்கில், கெளதமுக்கு குந்தவை(ஜோதிகா) என்னும் பெண்ணுடன் திருமணம் நடக்கிறது.
பின் மும்பையில் கெளதமுக்கு வேலைகிடைக்க, குடும்பம் அங்கு செல்கிறது. கெளதம், தனியார் கார் நிறுவனத்தில் தலைமை மெக்கானிக்காகவும், குந்தவை தனியார் நிறுவனத்திலும் பணிசெய்கின்றனர். இருவருக்கும் ஐஸ்வர்யா என்னும் மகள் இருக்கிறாள். ஒருநாள், தனது கணவர் கெளதமின் பழைய டைரியைப் படிக்கும் குந்தவை, அவரது பழைய காதல் குறித்து அறிந்து, தன் கணவரது முன்னாள் காதலியைச் சந்திக்க ஏற்பாடு செய்கிறார். இறுதியில் கெளதம், பெரிதாக குந்தவையைக் காதலிப்பதை உணர்கிறார். பின் இருவரும் சேர்கின்றனர். படத்தின் இசையை ஏ.ஆர். ரஹ்மானும், படத்தை கிருஷ்ணாவும் இயக்கியிருந்தனர். படமும் சூப்பர் டூப்பர் ஹிட்டானது.
ஜாம்பவான்:
ஜாம்பவான்(2006) திரைப்படத்தில் நடிகர்கள் பிரசாந்த், நிலா, மேக்னா நாயுடு ஆகியோர் நடிக்க, ஏ.எம். நந்த குமார் இந்தப் படத்தை எழுதி இயக்கியுள்ளார். மேலும் இப்படத்தில் விவேக், விஜயகுமார் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். பரத்வாஜ் இசையமைத்திருக்கிறார். இப்படத்தில் பனமரத்தில குள்ள நரிஒன்னு பரபரக்குது மக்கா என்னும் பாடல் பலரால் முணுமுணுக்கப்பட்டது. விவேக், மயில்சாமியின் காமெடி அங்கங்கு கிச்சுகிச்சுமூட்டுகிறது. இப்படத்தின் கதை என்னவென்றால், வேறு ஒருவரின் வீட்டில் வளரும் இளைஞருக்கு, தான் வளர்ப்பு மகன் என்று அறிந்ததும் சங்கடம் ஏற்படுகிறது. வீட்டைவிட்டு வெளியேறி தன் சொந்த குடும்பத்தைக் கண்டுபிடிக்க முயற்சிக்கிறான். அப்போது தன் குடும்பத்தைக் கொன்ற நபரை பழிவாங்க முயற்சிக்கும் அந்த இளைஞர், அதில் வென்றாரா இல்லையா என்பதே படத்தின் மீதிக்கதை.
இருமுகன்:
இருமுகன்(2016) படத்தை ஆனந்த் சங்கர் எழுதி இயக்க விக்ரம், நயன்தாரா, நித்யா மேனன் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருந்தார். இப்படத்தில் விக்ரம் இரட்டை வேடங்களில் நடித்திருந்தார்.
கோலாலம்பூரில் இருக்கும் இந்தியத் தூதரகம் முகம் தெரியாதவர்களால் சூறையாடப்படுகிறது. இந்திய அரசின் உளவுப் பிரிவான ‘ரா’ போலீஸ், சூறையாடலுக்கான காரணத்தை விசாரிக்கத் தொடங்குகிறது. அதில் சஸ்பெண்டில் இருக்கும் ‘ரா’அதிகாரி, அகிலனை விசாரிக்கச் சொல்கிறது. ஆரம்பத்தில் அதை புறக்கணிக்கும் அகிலன், தன் மனைவி மீராவின் மரணத்துக்கு தொடர்புடைய லவ் என்பவன், இந்த சூறையாடலை நடத்தியிருப்பதை அறிந்து, அவரை பிடிக்கும் ஆப்ரேசனுக்கு ஒத்துக்கொள்கிறார். இறுதியில் ஊக்க மருந்தினை விற்கும் வில்லன் தான், லவ். இறுதியில் வில்லன் லவ்வின் செயல்பாடுகளை அகிலன் தடுத்து நிறுத்தினாரா என்பதே படத்தின் மீதிக்கதை!
பட்ஜெட் பத்மநாபன்:
2000ஆவது ஆண்டு தொடக்கத்தில் தமிழ் சினிமாவில் இந்த நூற்றாண்டில் வெளியாகி ஹிட்டடித்த காமெடி கலந்த பேமிலி டிராமா படமாக பட்ஜெட் பத்மநாபன் உள்ளது. தமிழில் 80களின் இறுதியில் முன்னணி இயக்குநராகவும், பின்னர் நடிகராகவும் நன்கு அறியப்பட்ட டி.பி. கஜேந்திரன் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். பிரபு, ரம்யா கிருஷ்ணன், விவேக், மும்தாஜ், கரண், மணிவண்ணன், கோவை சரளா என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கும் இந்தப் படத்தின் கதை ஒரு காலனிக்குள் நடைபெறும் விதமாக அமைந்திருக்கும் நிலையில், சென்னையிலுள்ள அருணாச்சலா ஸ்டுடியோஸில் மிகப்பெரிய அளவில் செட் போட்டு முழு படத்தையும் படமாக்கினர்.
கடனை திருப்பி கொடுக்க முடியாமல் சிறிய வயதில் இழந்த வீட்டை பெரியவன் ஆனதும் பிரபு மீட்பதே படத்தின் ஒன்லைன். இதில் மாத சம்பளத்துக்கு வேலை பார்க்கும் மிடிஸ் கிளாஸ் குடும்பஸ்தனாக வரும் பிரபு பட்ஜெட் போட்டு வாழ்க்கை வாழ்வதை காமெடி கலாட்டவுடன் சொல்லியிருப்பார்கள்.
மும்தாஜ் - கரண் இடையிலான காதல், அவர்களின் வாழ்க்கையில் பிரபு எதிர்பாராதவிதமாக இணைவது படத்தில் என்ன திருப்பத்தை உண்டு செய்கிறது என்பது தான் படத்தின் மீதிக்கதை.
டாபிக்ஸ்