Chinmayi: தமிழ் சினிமாவில் பாலியல் தொல்லை நடப்பதில்லை - நடிகர் ஜீவாவின் பேச்சுக்கு வசைபாடும் சின்மயி!
Chinmayi: தமிழ் சினிமாவில் பாலியல் தொல்லை நடப்பதில்லை என நடிகர் ஜீவாவின் பேச்சுக்கு வசைபாடும் சின்மயி குறித்த செய்தி கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
Chinmayi: சமீபத்தில் தேனியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் ஜீவா கூறிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் ஜீவாவின் பேச்சுக்கு, பாடகி சின்மயி பதிலடி கொடுத்துள்ளார்.
தேனியில் ஒரு கடையின் விழாவில் பங்கெடுக்க வந்த நடிகர் ஜீவாவிடம் செய்தியாளர்கள் கேள்விகேட்டனர். அப்போது கேரளாவில் நடந்த பாலியல் சுரண்டல்கள் தொடர்பான கேள்விகளை செய்தியாளர்கள் முன்வைத்தனர். அப்போது பேசிய அவர் கேரளாவில் நடக்கும் பாலியல் துன்புறுத்தல்கள் தவறானது என்றார். இதே கேள்வியை மற்ற சில நிருபர்களும் கேட்டபோது, நடிகர் ஜீவா பொறுமையை இழந்து கோபத்தில் பேசினார். அவருக்கு பாடகி சின்மயி கண்டனங்களைப் பதிவு செய்தார்.
ஆரம்பத்தில் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட முன்னணி நடிகர்களை அம்பலப்படுத்தும் ஹேமா கமிட்டியின் அறிக்கை குறித்து தேனியில் நடிகர் ஜீவா செய்தியாளர்களிடம் கேட்டபோது, 'அதைப் பற்றி கேள்விப்பட்டேன். அது தவறு தான். முன்பு மீ டூ ஒன்று (Me Too) இருந்தது. இப்போது மீ டூ பகுதி 2 வந்துவிட்டது. இப்போது, அதில் பாதிக்கப்பட்டவர்கள் வெளிப்படையாக சொல்ல ஆரம்த்துள்ளனர். பாலியல் தொல்லை என்பது தவறான ஒன்று. சினிமாவில் ஆரோக்கியமான சூழல் அமைய வேண்டும்’’ என்றார்.
தேனியில் ஜீவாவிடம் நடந்தது என்ன?
மேலும், அந்த நிகழ்வில் செய்தியாளர்கள் சில கேள்விகளைக் கேட்டபோது, 'விழாவின் நல்ல சூழ்நிலையை' பராமரிப்பதற்காக சில கேள்விகளுக்கு பதிலளிக்க நடிகர் ஜீவா மறுத்துவிட்டார். அதன்பின்பும் பேசிய நடிகர் ஜீவா, "இதற்கு நான் ஏற்கனவே பதில் சொல்லிவிட்டேன், என்னால் மீண்டும் மீண்டும் பதில் சொல்ல முடியாது. தமிழ் சினிமாவில் இது போன்ற பிரச்னைகள் கிடையாது; அவை கேரளாவில் மட்டுமே நடக்கின்றன’’ என்றார். அதன்பின் நடிகர் ஜீவா நிருபரிடம் அறிவு இருக்கிறதா என்று கேட்டார். இதனால் அப்பகுதியில் நடிகர் தரப்புக்கும் செய்தியாளர் தரப்புக்கும் சலசலப்பு ஏற்பட்டது.
பாடகி சின்மயி ஜீவாவுக்கு காட்டமான பதில்:
தமிழ்த் திரையுலகில் பாலியல் துன்புறுத்தல் சம்பவங்கள் குறித்து குரல் கொடுத்து வரும் பாடகி சின்மயி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, பாடலாசிரியர் மற்றும் கவிஞர் வைரமுத்து தனக்குப் பாலியல் துன்புறுத்தல்களைக் கொடுத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் நடிகர் ஜீவா தமிழ்நாட்டில் பாலியல் துன்புறுத்தல்கள் என்று கூறிய நிலையில், அதற்குப் பதிலளிக்கும் வகையில் பதிவிட்ட பாடகி சின்மயி, "தமிழ்த் திரையுலகில் பாலியல் துன்புறுத்தல் இல்லை என்று நடிகர் ஜீவா தரப்பு எப்படி சொல்கிறார்கள் என்று எனக்கு உண்மையில் புரியவில்லை. எப்படி?!" என தனது எக்ஸ் தளத்தில் பாடகி சின்மயி தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரத்தில் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினிகாந்த், ஹேமா கமிட்டி அறிக்கை குறித்து கேட்டபோது, "அது பற்றி எனக்கு எதுவும் தெரியாது. மன்னிக்கவும்." எனக் கேட்டுக்கொண்டார்.
நீதிபதி ஹேமா குழுவின் அறிக்கை என்பது என்ன?
2017ஆம் ஆண்டில் ஒரு பெண் நடிகை வாகனத்தில் கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், கேரள அரசு மலையாளத்திரையுலகில் நடக்கும் பாலியல் தொல்லைகள் குறித்து விசாரிக்க நீதிபதி ஹேமா தலைமையில் குழுவினை அமைத்து விசாரித்தது. சமீபத்தில் வெளியான அந்த அறிக்கையில் மலையாள சினிமாவில் பெண் நடிகைகள் பாலியல் தொல்லைகளுக்கு ஆளானது, பாலியல் சுரண்டலுக்கு ஆளானது தெரியவந்தது. இதையடுத்து நடிகர் சித்திக், ரஞ்சித் போன்ற நடிகர்கள் மற்றும் மலையாள இயக்குநர்கள் மீது ஏராளமான நடிகைகள் பாலியல் புகாரைத் தெரிவித்து வருகின்றனர்.