தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Actor Jiiva: முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி வாழ்க்கை வரலாறு படம்..! நடிகர் ஜீவாவுக்கு இப்படியொரு ஆசை

Actor Jiiva: முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி வாழ்க்கை வரலாறு படம்..! நடிகர் ஜீவாவுக்கு இப்படியொரு ஆசை

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Jun 07, 2024 09:45 PM IST

முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி வாழ்க்கை வரலாறு படம் உருவானால், அதில் அவரது கதாபாத்திரத்தில் நடிக்க ஆசை என்று நடிகர் ஜீவா தனது விருப்பத்தை தெரிவித்துள்ளார்.

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி வாழ்க்கை வரலாறு படத்தில் கருணாநிதியாக நடிக்க ஆசைப்படும் நடிகர் ஜீவா
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி வாழ்க்கை வரலாறு படத்தில் கருணாநிதியாக நடிக்க ஆசைப்படும் நடிகர் ஜீவா

ட்ரெண்டிங் செய்திகள்

சமீபத்தில் தெலுங்கில் வெளியான யாத்ரா 2 என்ற படத்தில் ஆந்திராவின் முன்னாள் முதலமைச்சரான ஜெகன் மோகன் ரெட்டி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் ஜீவா. இந்த படத்தில் ஜீவாவின் அப்பாவாக மலையாள மெகா ஸ்டார் மம்முட்டி, மறைந்த ஆந்திரா முதலமைச்சர் ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இந்த படம் ரசிகர்களை கவர்ந்ததுடன், படத்தில் ஜீவாவின் நடிப்பும் பாராட்டை பெற்றது.

கலைஞர் கருணாநிதியாக நடிக்க ஆசை

இதைத்தொடர்ந்து தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சரான கலைஞர் கருணாநிதியாக நடிக்க விரும்புவதாக தெரிவித்துள்ளார் ஜீவா. இதுதொடர்பாக ஜீவா கூறியதாவது, " தமிழ்நாட்டுக்காக கலைஞர் கருணாநிதி பல அற்புதமான விஷயங்களை செய்துள்ளார். திமுக தலைவராக 40 ஆண்டுகளுக்கு மேல் இருந்துள்ளார்.

இவரது வாழ்க்கை வரலாறு பற்றி படம் எடுத்தால் அதில் நான் நடிக்க விரும்புகிறேன். கருணாநிதி பற்றி படமாக எடுப்பது நியாயமாக இருக்காது. எனவே அதை வெப்சீரிஸாக எடுக்க வேண்டும்." என்று கூறினார்.

ஏற்கனவே மறைந்த முன்னாள் முதலமைச்சரான ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக வைத்து தலைவி என்ற படமும், குயின் என்ற வெப் சீரிஸும் வெளியாகியிருக்கிறது. தற்போது கலைஞர் கருணாநிதி பற்றி வெப்சீரிஸ்க்கான ஐடியாவை வெளிப்படுத்தியுள்ளார் ஜீவா. 

கருணாநிதி நூற்றாண்டு விழா

கடந்த சில நாள்களுக்கு முன் மறைந்த முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்வின்போது பல்வேறு அரசியல் தலைவர்களுடன் கருணாநிதியின் அரிதான 100 புகைப்படங்கள் வைக்கப்பட்ட கண்காட்சியும் நடைபெற்றது. இந்த கண்காட்சியை நடிகர் ஜீவா, பாடலாசிரியர் பா. விஜய் போன்ற பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

இந்த கண்காட்சியானது ஜூன் 10ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது.

கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்தாக நடித்த ஜீவா

ஆந்திர முன்னாள் முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி கதாபாத்திரத்துக்கு முன்னரே, முன்னாள் கிரிக்கெட் வீரரான தமிழ்நாட்டை சேர்ந்த கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் வேடத்தில் நடித்திருந்தார் நடிகர் ஜீவா.

இந்திய கிரிக்கெட் அணி 1983ஆம் ஆண்டில் முதல் முறையாக உலகக் கோப்பையை வென்றதை அடிப்படையாக வைத்து உருவாகியிருந்த 83 படத்தில், இந்திய கிரிக்கெட் அணியில் அப்போது அங்கம் வகித்த ஸ்ரீகாந்த் வேடத்தில் நடித்திருந்த ஜீவா, ஸ்ரீகாந்த் போலேவே பாடி லாங்குவேஜ் வெளிப்படுத்தி பாராட்டுகளை பெற்றார். 

83 திரைப்படம் இந்தி தவிர தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளிலும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. 

ஜீவா புதிய படம்

ஜீவா நடிப்பில் மோதாவி என்ற படம் உருவாகி வருகிறது. கடந்த ஜனவரி மாதம் வெளியான சிங்கப்பூர் சலூன் என்ற படத்தில் ஜீவா கேமியோ கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதேபோல் யாத்ரா 2 படமும் பிப்ரவரி மாதம் வெளியாகி தெலுங்கில் கலவையான விமர்சனங்களை பெற்றது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

டி20 உலகக் கோப்பை 2024

டாபிக்ஸ்