பாக்ஸ் ஆபிஸ் வசூலில் சறுக்கல்..பெரும் தொகைக்கு விலை போன வேட்டையன்! ஓடிடியில் எப்போது ரிலீஸ்?
பாக்ஸ் ஆபிஸ் வசூலில் தொடர்ந்து சறுக்கலை சந்தித்து வரும் வேட்டையன் ஓடிடி ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. படம் பெரும் தொகைக்கு பிரபல ஓடிடி நிறுவனத்துக்கு விலை போயிருக்கும் நிலையில் தீபாவளிக்கு பின் படம் வெளியாகலாம் என தெரிகிறது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் தசரா வெளியீடாக அக்டோபர் 10ஆம் தேதி வெளியான படம் வேட்டையன். ஆக்ஷன் த்ரில்லர் படமான இதில் நடிகை மஞ்சு வாரியர், பாலிவுட் மெகா ஸ்டார் அமிதாப் பச்சன், மலையாள நடிகர் பகத் பாசில், தெலுங்கு நடிகர் ராணா, ரித்திகா சிங், துஷாரா விஜயன் உள்பட பலரும் நடித்துள்ளார்கள். ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் பாக்ஸ் ஆபிஸிலும் கணிசமான வசூலை பெற்றுள்ளது.
வேட்டையன் ஓடிடி ரிலீஸ்
திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் வேட்டையன் படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி தீபாவளிக்கு பின் படம் நவம்பர் 7ஆம் தேதி வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது.
அமேசான் ப்ரைம் ஓடிடி தளம் இந்த படத்தை ரூ. 90 கோடி கொடுத்து வாங்கியுள்ளனராம். வேட்டையன் இந்தி பதிப்பு மல்டிபிளக்ஸ்களில் வெளியாகாத நிலையில் 8 வாரங்கள் கழித்து தான் ஓடிடியில் ரிலீஸ் செய்ய வேண்டும் என்கிற விதிமுறை பொருந்தாது.
அத்துடன் வரும் நவம்பர் 7ஆம் தேதி படம் வெளியாகி நான்கு வாரங்கள் முடியும் நிலையில், படம் அந்த நாளில் ஓடிடியில் வெளியாவதில் எந்த சிக்கலும் இருக்காது என விவரம் அறிந்தவர்கள் கூறுகிறார்கள்.
ஏற்கனவே தீபாவளியை முன்னிட்டு தங்கலான், லப்பர் பந்து உள்ளிட்ட எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் படங்கள் ஓடிடியில் வெளியாக இருக்கின்றன. இந்த சூழ்நிலையில் வேட்டையன் ஓடிடி வெளியீடு இரண்டு அல்லது மூன்று நாள்களுக்கு முன்னரே படத்தின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி அறிவிக்கப்படலாம் என்ற தெரிகிறது.
வேட்டையன் பாக்ஸ் ஆபிஸ் வசூல்
பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான வேட்டையன் படம் முதல் 10 நாள்களில் ரூ. 129 கோடி இந்திய அளவில் வசூலை ஈட்டியது. ரஜினி படங்களில் பெரிய அளவில் ஓபனிங் கிடைக்காத போதிலும் அடுத்தடுத்த நாள்களில் படத்தின் வசூல் கணிசமாக உயர்ந்தது. இதுவரை படம் உலக அளவில் ரூ. 300 கோடிக்கு மேல் வசூலித்திருப்பதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
கலவையான விமர்சனங்கள் வெளிவந்தபோதிலும் பேமிலி ஆடியன்ஸை கவர்ந்த வேட்டையன் இரண்டு வாரங்களுக்கு மேலாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இருப்பினும் வசூலை பொறுத்தவரை முதல் வாரத்தை ஒப்பிடுகையில் இரண்டாவது வாரம் கணிசமாக குறைந்துள்ளது. இதற்கு காரணமாக தமிழகத்தில் மழை காலம் தொடங்கியிருக்கும் நிலையில் பல்வேறு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டதாலும், மேலும் பல பகுதிகளில் தொடர் மழை பெய்து வருவதாலும் படத்தின் பாக்ஸ் ஆபிஸ் வசூலில் சறுக்கல் ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
வேட்டையன் இரண்டாம் பாகம்
வேட்டையன் படத்தின் கதையானது போலி என்கவுண்டர்களுக்கு பின்னணியில் இருக்கும் அரசியலை விவாதிக்கும் விதமாக அமைந்திருக்கும். இதைத்தொடர்ந்து இதன் இரண்டாம் பாகத்தை உருவாக்க விருப்பம் தெரிவித்திருக்கும் படத்தின் இயக்குநர் டி.ஜே. ஞானவேல், "வேட்டையன் 2 படம் முதல் பாகத்தின் தொடர்ச்சியாக இல்லாமல், முதல் பாகத்தில் நடந்த கதைக்கு முன்கதையாக இருந்தால் நன்றாக இருக்கும்.
அதியன் எப்படி ஒரு என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் ஆனார், திருடனாக இருக்கும் ஃபகத் ஃபாசில் எப்படி போலீஸுக்கு உதவி செய்பவர் ஆகிறார் என கதையை கொண்டு போவதற்கான திட்டம் இருக்கிறது" என்று கூறினார்.
டாபிக்ஸ்