வைணவர்களைக் கிண்டலடிக்கும் தங்கலான் என மனு.. தள்ளுபடி செய்த உயர் நீதிமன்றம்.. ஓடிடி ரிலீஸ் எப்போது?
வைணவர்களைக் கிண்டலடிக்கும் தங்கலான்.. தள்ளுபடி செய்யப்பட்ட உயர் நீதிமன்ற வழக்கு.. ஓடிடி ரிலீஸ் எப்போது என்பது குறித்துப் பார்ப்போம்.

நடிகர் விக்ரம், மாளவிகா மோகனன் நடிப்பில் பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள தங்கலான் ஓடிடி ரிலீஸுக்கு உயர் நீதிமன்றத்தால் அனுமதிக்கப்பட்டுள்ளது.
இயக்குநர் பா.இரஞ்சித் இயக்கத்தில் நடிகர் விக்ரம், நடிகை பார்வதி, நடிகை மாளவிகா மோகனன், பசுபதி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்து, கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாகி இருக்கும் திரைப்படம், தங்கலான். இந்தத் திரைப்படத்திற்கு பிரபல இசையமைப்பாளரான ஜி வி பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார். இந்நிலையில் படத்தில் சர்ச்சைக்குரிய கருத்துக்கள் இருப்பதாக ஆன்லைனில் வெளியிடத் தடை விதிக்கக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு (பி.ஐ.எல்) தாக்கல் செய்யப்பட்டது. தற்போது அந்த மனு வாபஸ் பெறப்பட்டுள்ளதாக ’லைவ் லா’ இணையதளம் தெரிவித்துள்ளது.
தங்கலான் ஓடிடி ரிலீஸ்:
தங்கலான் திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸுக்கு தடை விதிக்கக் கோரி, திருவள்ளூரைச் சேர்ந்த பொற்கொடி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநலத் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், ’தங்கலான் படத்தில் பௌத்த மதத்தை பயபக்தியுடன் சித்தரிக்கும் காட்சிகள் இருப்பதாகவும், வைணவம் நகைச்சுவையாக சித்தரிக்கப்படுவதாகவும்’ கூறப்பட்டுள்ளது. மேலும், இது மத சமூகங்களிடையே பதற்றங்களைத் தூண்டக்கூடும் என்றும் மனுதாரர் வாதிட்டார். மேலும், அந்த மனுவில், இந்தப் படம் வைணவர்களை குறிவைத்து வெளியிடப்பட்டுள்ளதாகவும், அதன் ஓடிடி வெளியீட்டிற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது.
இதனை தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம் மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் விசாரித்து, இந்த படத்திற்கு ஏற்கனவே மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியம் (சிபிஎஃப்சி) சான்றளித்துள்ளதால் இந்த மனுவை தள்ளுபடி செய்ததாக அறிவித்தது. இதனால் வழக்கமாக 4-5 வாரங்களுக்குள் ஓடிடியில் ரிலீஸாகும் என எதிர்பார்க்கப்பட்ட இந்த திரைப்படம் அக்டோபர் 31ஆம் தேதி தீபாவளியன்று நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.
தீபாவளிக்கு படம் நெட்பிளிக்ஸில் வெளியாகும் என்று தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தெரிவித்துள்ளார். படம் தாமதமாக ஓடிடி வெளியீடு குறித்து பல வதந்திகளுக்குப் பிறகு, அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "நெட்பிளிக்ஸ் குழுவினர் தீபாவளிக்கு தங்கலான் ஓடிடி வெளியீட்டைத் திட்டமிட்டனர். தங்கலான் பெரிய படம் என்பதால் பண்டிகையில் வெளியிட வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இருப்பினும், தங்கலானில் சில சிக்கல்கள் இருப்பதாக எங்களுக்கு பிடித்த யூடியூபர்கள் கூறினர். ஆனால், உண்மையில் அப்படி எதுவும் இல்லை." என்று தெரிவித்தார். இப்படம் உலகளவில் ரூ.100 கோடி வரை வசூலித்தது.
தங்கலான் சொல்லும் கதை என்ன?
வட ஆற்காடு வேப்பூர் கிராமத்தில் தங்கலான் முனி (விக்ரம்) தன்னுடையை மனைவி கங்கம்மா, ( பார்வதி) குழந்தைகள் மற்றும் தன் சனத்தோடு, தனக்கான நிலத்தில் பயிர் செய்து நிம்மதியாக வாழ்ந்து வருகிறான். இதனைப்பார்த்து பொறுக்காத ஊர் மிராசு, சூழ்ச்சி செய்து, அவனையும் அவனது மகன்களையும் பண்ணை அடிமையாகப் பணி அமர்த்துகிறார். இதற்கிடையே வரும் ஆங்கில துரை (டேனியல்) அந்தக் காட்டில் இருக்கும் தங்கத்தை எடுக்க ஊராரின் உதவியைக் கேட்கிறார். மிராசின் அடிமையாக இருப்பதை விட, துரைக்கு உதவி செய்து கூலி வாங்கி, ரோஷத்தோடு வாழ நினைக்கிறான், தங்கலான். இதனையடுத்து அவனுடைய மகன் அசோகன் மற்றும் ராமானுஜம் வழியில் வந்த அந்தணன் ( பசுபதி) உள்ளிட்டோர் முனியுடன் செல்கின்றனர்.
ஒரு கட்டத்தில் அவனுடன் ஊராரும் சேர்ந்து கொள்கின்றனர். ஆனால், அங்கிருக்கும் தங்கத்தை தன் உயிராகப் பாதுகாத்து நிற்கின்றனர், ஆரத்தியும் ( மாளவிகா) அவரது குழுவும். பொன்னை நெருங்க வரும் நபர்களின் உயிர்களை காவு வாங்கும் அவர்களை மீறி, இறுதியில் தங்கலான் குழு தங்கத்தை எடுத்தார்களா? இல்லையா? அதன் பின்னர் என்ன ஆனது என்பதே படத்தின் கதை.
