Karthi Apology: “லட்டு வேண்டாம் என பேச்சு..”கொதித்த பவன் கல்யாண் - பணிந்த கார்த்தி மன்னிப்பு
Karthi Apology: லட்டு வேண்டாம் எனவும், அது உணர்ச்சிகரமான டாப்பிக் ஆக இருப்பதாக கார்த்தி பேசியதற்கு, தெலுங்கு சினிமா பவர் ஸ்டார் மற்றும் துணை முதலமைச்சருமான நடிகர் பவன் கல்யாண் கண்டனம் தெரிவித்தார். இதற்கு கார்த்தி தற்போது மன்னிப்பு கோரியுள்ளார்.
திருப்பதி லட்டு பிரசாதத்தை தயார் செய்யப்படும் நெய்யில் விலங்குகளில் கொழுப்பு கலந்திருக்கலாம் என்று வெளியான தகவல் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் தேசிய அளவில் பேசுபொருள் ஆன நிலையில் பலரும் தங்களது விமர்சனங்களை முன் வைத்தனர்.
இந்துக்களின் மதநம்பிக்கையை புண்படுத்தும் விதமாக நடந்திருக்கும் இந்த நிகழ்வு தொடர்பாக விசாரணை நடத்தை சிறப்பு விசாரணை குழுவை ஆந்திர அராசங்கம் நியமித்துள்ளது.
இந்த விவகாரத்தில், கடந்த ஜெகன்மோகன் ஆட்சிக்கு கண்டனம் தெரிவித்தும், ஏழுமலையானிடம் மன்னிப்பு கோரும் விதமாகவும், ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் 11 நாள் விரதத்தை தொடங்கியுள்ளார்.
அதேபோல் திருப்பதி லட்டு விவகாரத்தில் கோயில் புனிதம் கெட்டுவிட்டதால், அதற்கு பரிகாரமாக 3 நாட்கள் சிறப்பு யாகங்களையும் திருப்பதி தேவஸ்தானம் நிர்வாகம் செய்தது.
லட்டு குறித்து கார்த்தியின் பேச்சு
திருப்பதி லட்டு விவகாரம் தொடர்பாக ஹைதராபாத்தில் நடைபெற்ற சத்யம் சுந்தரம் பட நிகழ்ச்சியின் போது தொகுப்பாளர் நடிகர் கார்த்தியிடம், லட்டு வேணுமா? இன்னொரு லட்டு வேணுமா சார் என நகைச்சுவையாக கேட்டார்.
அதற்கு பதில் அளித்த அவர், "லட்டு குறித்து இப்போது பேசக்கூடாது. அது உணர்ச்சிபூர்வமான டாப்பிக்காக தற்போது உள்ளது. லட்டு வேண்டாம்" என்று சிரித்தவாறோ சொன்னார்.
தொகுப்பாளர் விடாமல், மோட்டசூர் லட்டு வேணுமா? என்று கேட்டார். அதற்கு பதிலளித்த கார்த்தி, "லட்டு இப்போ வேண்டாம்" என பதில் கூறினார்.
பவன் கல்யாண் ஆவேசம்
கார்த்தி பேசிய விடியோ டோலிவுட்டில் வைரலான நிவையில், " லட்டு பற்றி பலருக்கு சிரிப்பாக உள்ளது. ஒரு சினிமா நிகழ்ச்சியில் கூட லட்டு உணர்ச்சிபூர்வமான டாபிக் என ஹீரோ சொல்வதை பார்த்தேன்.
ஒருபோதும் யாரும் அப்படி பேச வேண்டாம். நான் அந்த ஹீரோவை ஒரு நல்ல நடிகராக மதிக்கிறேன். சனாதன தர்மத்தை பற்றி பொது இடத்தில் பேசுவதற்கு முன் ஒரு முறைக்கு நூறு முறையாவது சிந்திக்க வேண்டும்" என்று பவன் கல்யாண் காட்டமாக பேசினார்.
கார்த்தி மன்னிப்பு
இந்த விஷயம் சர்ச்சையாகியிருப்பதை உணர்ந்த நடிகர் கார்த்தி, தனது எக்ஸ் பக்கத்தில் வருத்தம் தெரிவித்துள்ளார், இதுதொடர்பாக கார்த்தி பகிர்ந்திருக்கும் பதிவில், மதிப்புக்குரிய பவன் கல்யாண் சார், நான் பேசியது தவறான புரிதலை ஏற்படுத்தியதற்கு ஆழ்ந்த மரியாதையுடன் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.
திருப்பதி ஏழுமலையான் வெங்கடேசப் பெருமானின் தாழ்மையான பக்தன் என்ற முறையில், நான் எப்போதும் நம் மரபுகளை அன்புடனும், மதிப்புடன் நடத்துகிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.
மெய்யழகன் ரிலீஸ்
கார்த்தி நடித்திருக்கும் புதிய படமான மெய்யழகன் செப்டம்பர் 27ஆம் தேதி வெளியாகிறது. இந்த படத்தின் தெலுங்கு பதிப்பு சத்யம் சுந்தரம் என்ற பெயரில் தெலுங்கில் செப்டம்பர் 28ஆம் தேதி வெளியாகிறது. கார்த்திக்கு தமிழை போல் தெலுங்கிலும் ஏரளாமான ரசிகர்கள் இருக்கிறார்கள். தனது படங்களில் தெலுங்கு பதிப்புக்கு கார்த்தியே டப்பிங்கும் பேசி வருகிறார். அத்துடன் கார்த்தியின் படங்கள் தமிழுடன், தெலுங்கிலும் நேரடியாக வெளியாகி வருகின்றன.
இதையடுத்து மெய்யழகன் தெலுங்கு பதிப்பு சத்யம் சுந்தரம் பட ரிலீசின் போது கார்த்தியின் பேச்சு சர்ச்சையை கிளப்பிய நிலையில், தற்போது அதற்கு அவர் மன்னிப்பும் கோரியுள்ளார்.
டாபிக்ஸ்