மக்களுக்காக செல்லாத விஜய்.. திரிஷாவுடன் தனி விமானத்தில் பயணம்.. நெட்டிசன்கள் விமர்சனம்
மக்களுக்காக செல்லாத விஜய்.. திரிஷாவுடன் தனி விமானத்தில் பயணம்.. நெட்டிசன்கள் விமர்சனம்
நடிகை கீர்த்தி சுரேஷின் திருமணத்துக்கு நடிகர் விஜய், திரிஷாவுடன் சென்றிருப்பது பேசுபொருளாகியிருக்கிறது.
நடிகை கீர்த்தி சுரேஷின் திருமணம் டிசம்பர் 12ஆம் தேதி கோவாவில் நடைபெற்றுள்ளது. நடிகை கீர்த்தி சுரேஷ் தனது 15ஆண்டுகால நண்பர் ஆண்டனி தட்டில் என்பவரை காதலித்து மணமுடித்துள்ளார்.
பிராமணர்கள் சடங்குகளின்படி தந்தை சுரேஷ் குமார் மடியில் கீர்த்தி அமர்ந்திருக்க, மணமகன் ஆண்டனி தட்டில் அவருக்கு தாலி கட்டி, இந்து முறைப்படி திருமணம் நடைபெற்றிருக்கிறது. மணமக்கள் கழுத்து நிறைய மாலைகள் அணிய, கீர்த்தி சுரேஷ் சிவப்பு நிற சேலை, பாரம்பரிய ஆபரணங்கள் அணிந்து திருமண கோலத்தில் இருந்தார்.
புரோகிதர்கள் மந்திரம் ஓத கீர்த்தி சுரேஷ் - ஆண்டனி தட்டில் திருமணம் இனிதே நடைபெற்று முடிந்த நிலையில், பின்னர் திருமணம் தொடர்பான சடங்குகளும் நடந்தன. இந்நிலையில் இரு குடும்பத்தினரின் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மட்டும் பங்கேற்றனர்.
கீர்த்தி சுரேஷின் திருமணத்தில் பங்கு எடுத்த விஜய்:
இந்நிலையில் சக ஜோடி நடிகையான கீர்த்தி சுரேஷின் திருமணத்தில் நடிகர் விஜய் பங்கு எடுத்தார்.
நடிகை கீர்த்தி சுரேஷ், நடிகர் விஜய்யுடன் சேர்ந்து சர்க்கார், பைரா ஆகியப் படங்களில் நடித்து இருக்கிறார். இதற்காக அன்றைய தினத்தில் சென்னையில் இருந்து நடிகர் விஜய் மற்றும் நடிகை திரிஷா ஆகியோர் தனிவிமானத்தில் கோவா சென்றிருந்ததாக சில படங்களும் வீடியோக்களும் வைரல் ஆன நிலையில், அவர்கள் பயணித்தது தொடர்பான ஆவணங்களும் கிடைத்துள்ளன.
வெள்ளம் பாதித்த பகுதிகளுக்குச் செல்லாத விஜய் திரிஷாவுடன் பயணம்:
சமீபத்தில் திருவண்ணாமலை மலைச்சரிவு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின்போது, பாதிக்கப்பட்ட களத்திற்குச் செல்லாத தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய், பாதிக்கப்பட்ட மக்களை அழைத்து அவரது பனையூர் அலுவலகத்தில் வைத்து நிவாரணப்பொருட்களை வழங்கினார். இதை சில அரசியல் கட்சியினர் விமர்சித்தனர்.
இந்நிலையில் நிவாரணம் வழங்க, மழைவெள்ளம் பாதித்த இடங்களுக்குச்செல்லாத விஜய், நடிகை திரிஷாவுடன் கோவாவிற்கு தனிவிமானத்தில் பறந்திருக்கிறார். இந்நிலையில், அதை நெட்டிசன்கள், நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதாவுக்கு நீதி வேண்டும் என ட்ரோல் செய்து வருகின்றனர். மேலும் பெற்ற பிள்ளைகளுக்காக போகாத விஜய், மக்களுக்காக போகாத விஜய், தனி விமானத்தில் பயணம் செய்யும் அளவுக்கு என்னவாக இருக்கும் என நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.
தமிழக வெற்றிக்கழகம் கடந்துவந்த பாதை:
முன்னதாக, தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திர நடிகரான விஜய் 2024ஆம் ஆண்டின் தொடக்கத்தில் ’தமிழக வெற்றிக் கழகம்’’ என்ற கட்சிப்பெயரை அறிவித்து, அதைத் தேர்தல் ஆணையத்தில் பதிவும் செய்திருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
இதனைத் தொடர்ந்து, அவரது ரசிகர் மன்றமான தளபதி மக்கள் இயக்கம் அப்படியே, அவரது கட்சியாக மாறியது.
அதனைத்தொடர்ந்து தமிழக வெற்றிக் கழகத்தில், மார்ச் 8ஆம் தேதி முதல் உறுப்பினர் சேர்க்கை நடந்தது. குறிப்பாக, 2 கோடி உறுப்பினர்களை சேர்க்க இலக்கு வைத்து உறுப்பினர் சேர்க்கைக்காக , ’’தமிழக வெற்றிக் கழகம்’’ என்னும் செயலி அறிமுகப்படுத்தப்பட்டது. உறுப்பினர் சேர்க்கை தொடங்கிய மூன்றே நாட்களில் 50 லட்சம் பேர் த.வெ.கவில் உறுப்பினர்களாக இணைந்தனர்.
அடுத்து கள்ளக்குறிச்சி விஷ சாராய மரணங்கள் நிகழ்ந்த பகுதிக்கு நேரடியாகச் சென்று, பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் தெரிவித்தார். அண்மையில் 10, 12ஆம் வகுப்புகளில் மாவட்ட அளவில், ஊரக அளவில் முதலிடம் பெற்றவர்களை விஜய் விழாவாக ஏற்பாடு செய்து கெளரவித்தார்.
கன மழையால் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்த தென் மாவட்டங்களுக்கு சென்று, அவர் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்தார்.
அதன் அடுத்தகட்டமாக, தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை, அக்கட்சியின் தலைவரும் நடிகருமான விஜய் அறிமுகம் செய்துவைத்தார். மேலும் தமிழக வெற்றிக் கழகம் தொடர்பான பாடலையும் வெளியிட்டார். அப்போது, தமிழக வெற்றிக் கழகத்திற்கு அங்கீகாரம் கிடைத்ததை அக்கட்சியின் தலைவரும் நடிகருமான விஜய் உறுதி செய்தார்.
தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநாடு அக்டோபர் 27ஆம் தேதி விக்கிரவாண்டியில் வி.சாலையில் நடைபெற்றது. அங்கு அக்கட்சியின் தலைவர் விஜய் செயல்திட்டங்கள் குறித்துப் பேசிய பேச்சு வைரல் ஆகியது.
குறிப்பாக வேலுநாச்சியார், அஞ்சலையம்மாள், பி.ஆர்.அம்பேத்கர், பெரியார் மற்றும் காமராஜ் போன்ற தலைவர்களை தனது கட்சியின் கொள்கைத் தலைவர்களாக அறிவித்தார். மேலும் திமுகவை வீழ்த்தவேண்டும் என தனது தொண்டர்களிடம் அக்கூட்டத்தில் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதைத்தொடர்ந்து நடந்த ‘எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்’ புத்தக வெளியீட்டு விழாவில், விசிக தலைவர் திருமாவுக்கு திமுக கொடுத்த அழுத்தம் குறித்து பேசியது அரசியல் அரங்கில் புயலைக்கிளப்பியது.
டாபிக்ஸ்