தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Nelson Dilipkumar: இயக்கியது நான்கே நான்கு படம் .. 5ஆவது படத்தில் புரொடியூசர்.. நெல்சன் திலீப்குமாரின் அசுரவளர்ச்சி

Nelson Dilipkumar: இயக்கியது நான்கே நான்கு படம் .. 5ஆவது படத்தில் புரொடியூசர்.. நெல்சன் திலீப்குமாரின் அசுரவளர்ச்சி

Marimuthu M HT Tamil
May 01, 2024 08:12 PM IST

Nelson Dilipkumar: இயக்குநர் நெல்சன் திலீப்குமார், தயாரிப்பாளராக உருவெடுப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

நெல்சன் திலீப்குமார்
நெல்சன் திலீப்குமார்

ட்ரெண்டிங் செய்திகள்

தமிழ் சினிமா இயக்குநரும் திரைக்கதை எழுத்தாளருமான நெல்சன் திலீப்குமார் ‘’கோலமாவு கோகிலா'' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகம் ஆனார்.  

ஆறு ஆண்டுகள் சினிமா வாழ்க்கையில், தன்னை மிகவும் நம்பிக்கைக்குரிய தமிழ் இயக்குநர்களில் ஒருவராக நிலைநிறுத்திக்கொண்டவர். நெல்சன் திலீப்குமார், தனது முதல் படமான ‘’வேட்டை மன்னன்''படத்தை 2010ஆம் ஆண்டு தொடங்கினார். இப்படத்தில் சிலம்பரசன், ஹன்சிகா மோத்வானி, தீக்ஷா சேத் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். படம் வெளியாகும் வாய்ப்புகள் எதுவும் இல்லாததால் படம் பாதியிலேயே கிடப்பில் போடப்பட்டது. இதனால் நொந்துபோன நெல்சன் திலீப்குமார், விஜய் டிவியின் பிக்பாஸ் போன்ற சில நிகழ்ச்சிகளையும் இயக்கினார். 

நெல்சன் திலீப்குமார், 2018ஆம் ஆண்டு, நயன்தாரா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த ‘’கோலமாவு கோகிலா'' படத்தினை முதன்முதலாக இயக்கியதன் மூலம் பிரபலமானார். இந்தப் படம் வணிக ரீதியாக மற்றும் விமர்சன ரீதியான பாராட்டையும் பெற்றது. நார்வேயில் தமிழ்த்திரைப்பட விழாவில், இப்படம் சிறந்த திரைக்கதைக்கான விருதினையும் பெற்றது.

இயக்குநர் நெல்சன் திலீப்குமார், தனது வாழ்வின் தொடக்க காலத்தில், ஊக்கத்தை கொடுக்க திரையுலகில் அவருக்கு உறவினர்களோ அல்லது வழிகாட்டியோ இல்லை. எல்லா கஷ்டங்களையும் மீறி, அவர் வெற்றிக்கான பாதையை அமைத்துக்கொடுத்தார்.

அதன்பின்,நெல்சன் திலீப்குமார் சிவகார்த்திகேயன் மற்றும் பிரியங்கா மோகனை வைத்து ’’டாக்டர்’’ படத்தை இயக்கினார். இப்படமும் ரூ.100 கோடி ரூபாய் வசூலை பாக்ஸ் ஆபிஸில் பெற்றது. 

அதன்பின் விஜய்யின் 65ஆவது படமான ‘பீஸ்ட்’ படத்தினை நெல்சன் இயக்கினார். இப்படம் 250 கோடி ரூபாய் வசூல் பெற்றது. இப்படத்தில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடித்தார். 

அதன்பின், தனது நான்காவது படத்தில் தமிழ் சினிமாவின் உச்ச நடிகரான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து, ‘ஜெயிலர்’ படத்தினை இயக்கியுள்ளார். இப்படம் இந்திய அளவில் ரூ.650 கோடி வசூலை ஈட்டியது. தவிர, இப்படத்தில் கன்னட சூப்பர் ஸ்டாரான சிவராஜ்குமார் மற்றும் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன் லால் ஆகியோர் முக்கியவேடங்களில் நடித்திருந்தனர். இந்நிலையில் இப்படத்தின் ஹிட்டுக்குப் பின், தயாரிப்பு நிறுவனமான சன்பிக்சர்ஸ் நிறுவனம், நெல்சன் திலீப்குமாருக்கு விலை உயர்ந்த காரினை, பரிசாக அளித்தது. இதன்மூலம் அதிகம் சம்பளம் பெறும் இயக்குநர் ஆனார். நெல்சன் திலீப்குமார், தனது ஆரம்ப நாட்களில், விஜய் தொலைக்காட்சியில் உதவி திரைக்கதை எழுத்தாளராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்குவதாக இயக்குநர் நெல்சன் திலீப்குமார் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘’நான் என்னுடைய 20வயதில் இருக்கும்போது, ஊடகம் மற்றும் பொழுதுபோக்குத்துறைக்கு வந்தேன். இத்தனை வருடங்களில், எண்ணற்ற ஏற்ற இறக்கத்தின்போது, எனது துறையில் வளர்வதற்காக மட்டுமே பணி செய்து இருக்கிறேன்.

இதற்கிடையே எப்போதுமே எனக்கு ஒரு சொந்த படத்தயாரிப்பு நிறுவனம் தொடங்கவேண்டும் என்ற ஆசை இருந்தது. இன்று எனது சொந்த தயாரிப்பு நிறுவனத்தை உங்களுக்கு அறிமுகப்படுத்தில் மெய்சிலிர்ப்புடன் இருக்கிறேன். எனது நிறுவனத்தின் பெயர், ஃபிலமென்ட் பிக்சர்ஸ் ஆகும்.

எங்களது ஃபிலமென்ட் பிக்சர்ஸ் நிறுவனத்தின்மூலம், எங்களது முதன்மையான நோக்கம் என்பது புதுவிதமான மற்றும் அனைவருக்கும் பிடிக்கும் வகையிலான படங்களை உருவாக்கி, பெரிய அளவிலான ரசிகர்களை மகிழ்விக்க விரும்புகிறோம். எங்களுடைய முழுமையான பார்வையைக் கொண்ட சினிமாக்களை இதன்மூலம் தயாரிக்க இருக்கிறோம். அது நிச்சயம் வேடிக்கையாகவும் நகைச்சுவையாகவும் இருக்கும். எங்களது முதல் படம் பற்றிய அறிவிப்பு வரக்கூடிய மே 3ஆம் தேதி இருக்கும். அதுவரை காத்திருங்கள். உங்களது ஆதரவுக்கு நன்றி'' என்றார்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்