ஷாருக்கானின் சொத்தைவிட 4 மடங்கு அதிகம்.. பாலிவுட் தயாரிப்பாளர்களே இவருக்கு பின்னாடி தான்.. கலாநிதிமாறனின் சொத்து மதிப்பு
ஷாருக்கானின் சொத்தைவிட 4 மடங்கு அதிகம்.. பாலிவுட் தயாரிப்பாளர்களே இவருக்கு பின்னாடி தான்.. கலாநிதிமாறனின் சொத்து மதிப்பு எவ்வளவு என்பது குறித்துப் பார்ப்போம்.
கலாநிதி மாறனின் சொத்து மதிப்பு, பாலிவுட் தயாரிப்பாளர்களைவிட அதிகம் என தகவல் வெளியாகியுள்ளது.
திரைப்படங்கள் கோடி கோடியாய் பணம் சம்பாதிக்க உதவும் முக்கியமான தொழில் என்பது அனைவரும் அறிந்ததே. இந்தியப் படங்கள் ஒவ்வொரு ஆண்டும் கோடிக்கணக்கில் வசூல் வேட்டையை ஆடி, மிகப்பெரிய பொருளாதாரத்தை நாட்டிற்குக் கொண்டு வருகின்றன.
இதில் சினிமா நட்சத்திரங்கள் இந்தப் பணம் சம்பாதிக்கும் திட்டத்துக்கு முகமாக இருந்து, ஃபைனான்ஸியர் மற்றும் தயாரிப்பாளர்களுக்கு அதிக அளவு பணத்தை சம்பாதித்து கொடுக்கின்றனர். அப்படியில்லையென்றால், அவர்களின் நஷ்டத்துக்கும் காரணமாக இருக்கின்றனர்.
அந்த வகையில் இந்தியாவின் பணக்கார திரைப்படத் தயாரிப்பாளர் ஒருவர், பெரும்பாலும் கேமராவுக்குப் பின்னால் இருந்தும் மிகப்பெரிய ஊடக வெளிச்சத்திலிருந்து விலகி இருந்து மிகப்பெரிய அளவில் சொத்து சம்பாதித்து வைத்துள்ளார். இதன் மூலம் அவர் 360 கோடி டாலர் சொத்து சேர்த்துள்ளார். அதன் இந்திய ரூபாயின் மதிப்பு, 30 ஆயிரத்து 290 கோடி ரூபாய் ஆகும்.
இந்தியாவின் பில்கேட்ஸ் கலாநிதி மாறன்:
ஒரு காலத்தில் இந்தியாவின் பில்கேட்ஸ் என்று அழைக்கப்பட்ட தொழிலதிபர் கலாநிதி மாறன் இந்தியாவின் பணக்கார திரைப்படத் தயாரிப்பாளர் ஆவார். ஃபோர்ப்ஸ் பத்திரிகையின் கூற்றுப்படி, தொழிலதிபர் மற்றும் திரைப்பட தயாரிப்பாளர் கலாநிதி மாறனின் சொத்து மதிப்பு 3.6 பில்லியன் டாலர் (ரூ .30,290 கோடி) ஆகும்.
37 தொலைக்காட்சி சேனல்களையும், சன் பிக்சர்ஸ் என்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தையும் கட்டுப்படுத்தும் சன் குழுமத்தின் உரிமையாளர், கலாநிதி மாறன். எந்திரன், பேட்ட, பீஸ்ட், ஜெயிலர், ராயன் உள்ளிட்ட இந்திய சினிமா வரலாற்றில் மிகப்பெரிய வெற்றிப் படங்களைக் கொடுத்தது, கலாநிதி மாறனின் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தான்.
ரஜினிகாந்த், தனுஷ் உட்பட பல நடிகர்களின் வாழ்க்கையில் மிகப்பெரிய வெற்றிப் படங்களை தயாரித்திருக்கிறார், தயாரித்துக்கொண்டும் இருக்கிறார், கலாநிதி மாறன்.
பாலிவுட் தயாரிப்பாளர்களை மிஞ்சிய கலாநிதி மாறன்:
இவரது சொத்து மதிப்பு இந்தியாவின் மிகப்பெரிய புரொடியூசரான யூடிவி குழுமத் தலைவர் ரோனி ஸ்க்ரூவாலாவை விட அதிகம். ஆம். ரோனி ஸ்க்ரூவாலாவின் சொத்து மதிப்பு 1.55 பில்லியன் டாலர் மதிப்பு என்றால், கலாநிதி மாறனின் சொத்து மதிப்பு 3.6 பில்லியன் டாலர் ஆகும்.
இந்தி திரைப்படத்துறை அதன் பரந்த மக்கள்தொகை அளவு மற்றும் பார்வையாளர்களை எளிதாக அடைவதன் மூலம் இந்தியாவின் மற்ற திரைப்படத்துறைகளைவிட பெரிதாக இருக்கிறது. ஏனெனில் தமிழை விட, இந்தியாவில் இந்தி பேசுபவர்கள் பல மாநிலங்களில் இருப்பதால் அவர்களின் எண்ணிக்கை அதிகம்.
ஆனாலும் கலாநிதி மாறனின் சொத்து மதிப்பு பாலிவுட் திரைத்துறை ஜாம்பவான்களை விட அதிகம். உதாரணமாக, ஆதித்யா சோப்ராவின் சொத்து மதிப்பு 890 மில்லியன் டாலர், பூஷன் குமாரின் சொத்து மதிப்பு 950 மில்லியன் டாலர் மட்டுமே. உலகின் பணக்கார நடிகர்களில் ஒருவரான ஷாருக்கானின் நிகர சொத்து மதிப்பு 870 மில்லியன் டாலர் மட்டுமே. இது கலாநிதி மாறனின் சொத்தில் நான்கில் ஒரு பங்கு மட்டுமே ஆகும்.
யார் இந்த கலாநிதி மாறன்?
முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறனின் மகன் கலாநிதி மாறன். அவர் தனது தந்தையின் உதவியின் மூலம் சிறுவணிகத்தை 1990-ல் தனது 26 வயதில் தொடங்கினார்.
1993ஆம் ஆண்டில், கலாநிதி மாறன் சன் டிவியை நிறுவினார். அது இப்போது ஒரு மாபெரும் நெட்வொர்க்காக வளர்ந்துள்ளது. சமீபத்திய ஆண்டுகளில், அவர் ஊடகத் துறைக்கு வெளியே உள்ள துறைகளிலும் தனது பிசினஸை விரிவுபடுத்தினார்.
குறிப்பாக, இந்தியன் பிரீமியர் லீக்கில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியையும் மற்றும் தென்னாப்பிரிக்காவில் விளையாடப்படும் டி20 லீக்கில் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் ஆகிய இரண்டு அணிகளையும் வாங்கி அதன் உரிமையாளராக இருந்து வருகிறார். 2010ஆம் ஆண்டு முதல் 2015ஆம் ஆண்டு வரை ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தை நடத்துவதில் பெரும் பங்கு வகித்தார். இவரது சகோதரர் தயாநிதி மாறன் எம்.பி.யாகவும், முன்னாள் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சராக இருந்துள்ளார்.
டாபிக்ஸ்