கிரே கதாபாத்திரம் பிடிக்கும்..லக்கி பாஸ்கர் தமிழ் டப்பிங்..ரசிகர்களை ஏமாற்றமாட்டேன் - துல்கர் பகிர்ந்த சர்ப்ரைஸ்
`ஒரு நடிகனாக கிரே கதாபாத்திரம் பிடிக்கும். அதுபோன்ற கேரக்டர்களில் நடிக்க விரும்புவேன். ரசிகர்களை ஏமாற்றாமல் லக்கி பாஸ்கர் தமிழ் டப்பிங்கில் நானே பேச முயற்சிப்பேன் என்று நடிகர் துல்கர் சல்மான் கூறியுள்ளார்.
மலையாள சினிமா ஹீரோவான துல்கர் சல்மான் மொழிகளை கடந்த தமிழ், தெலுங்கில் நேரடி படங்களில் நடித்து வரும் ஹீரோவாக இருந்து வருகிறார். இவர் நடித்திருக்கும் புதிய தெலுங்கு படமான லக்கி பாஸ்கர் தீபாவளி வெளியீடாக திரைக்கு வருகிறது. இந்த படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. லக்கி பாஸ்கர் படக்குழுவினர் செய்தியாளர்கள் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.
அப்போது பேசிய துல்கர் லக்கி பாஸ்கர் படம், தனது உடல்நிலை குறித்து பேசினார். ஆண்டுதோறும் வெவ்வேறு மொழிகளில் ஒரு படமாவது நடிக்க வேண்டும் என தெரிவித்தார்.
மூன்று வருட கால இடைவெளியில் நடக்கும் கதை
"லக்கி பாஸ்கர் படத்தில் எனக்கு மிகவும் பிடித்த விஷயமாக, இது ஒரு சாதாரண மனிதனின் கதையாக இருப்பது தான். ஒரு அழகான குடும்பத்தில் பணம் சம்பாதிக்கும் ஒரே நபர் கதாபாத்திரத்தில் தோன்றுகிறேன். இது என்னால் எளிதில் இணைத்து கொள்ள முடிந்தது.
நாம் ஒவ்வொருவரும் எது சரி எது தவறு என்ற நிபந்தனையுடன் வாழ்கிறோம். ஆனால் இந்த படத்தில் பாஸ்கரின் தார்மீக திசைகாட்டி கொஞ்சம் வித்தியாசமானது. கதாபாத்திரம் கற்பனையானது என்றாலும், 1989 முதல் மூன்று வருட கால இடைவெளியில் நடக்கும் கதையாக இருக்கும்.
மோசடிகளால் ஈர்க்கப்பட்ட நிஜ வாழ்க்கை சம்பவங்களுடன் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. இந்த படத்துக்காக இயக்குநர் நிறைய ஆராய்ச்சி செய்துள்ளார். மேலும் இது நிதியியல் சொற்கள், வங்கி நடைமுறைகள் போன்றவற்றைப் பயன்படுத்தி நீங்கள் பார்க்கலாம்" என்று கூறினார்.
சரி, தவறை புரிந்துகொள்ள உதவும் கிரே கதாபாத்திரங்கள்
தொடர்ந்து "நல்லவனாகவும் இல்லாமல், கெட்டவனாகவும் இல்லாமல் இருக்கும் கிரே கதாபாத்திரங்களில் செய்ய நான் அதிகம் விரும்புகிறேன். ஒவ்வொரு நடிகர்களும் இது போன்ற கேரக்டர்களில் நடிக்க விரும்புவார்கள். ஏனென்றால் இது உங்கள் சொந்த குணத்துக்கு வெளியே நடந்துகொள்ள வாய்ப்பு அளிக்கிறது. இதன் மூலம் சரி மற்றும் தவறுகளைப் புரிந்துகொள்ளலாம்.
இதுபோன்ற கேரக்டர்களில் நடிப்பது விளையாட்டாக இருக்கும். உண்மையை செல்வதென்றால் குற்றங்களை மையப்படுத்தியிருக்கும் ஆவணப்படங்கள் மிகவும் பிரபலமானவை. அதில் குற்றங்களை செய்திருக்கும் நபர் அதை எப்படிச் செய்தார் என்பதை அறிந்து கொள்ளும்போது வியப்படைகிறோம். ஒரு நடிகராக, நான் எல்லா வகை கதாபாத்திரங்களையும் ஆராய விரும்புகிறேன். மேலும் எனக்கு வரக்கூடியவற்றில் சிறந்ததைத் தேர்வு செய்கிறேன். அசல் கதையை தேர்வு செய்து நடிப்பதில் கவனம் செலுத்துவேன்"
தமிழ் கலாச்சாரத்தை கொண்டாடும் படம்
"ஒவ்வொரு வருடமும் வெவ்வேறு மொழிகளில் மூன்று முதல் நான்கு படங்கள் செய்ய வேண்டும் என்று விரும்புகிறேன். அது என் கைகளில் இருப்பதில்லை. கடந்த ஆண்டு எனக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டு சிறிது காலம் இடைவெளியில் இருந்தேன். இப்போது நலமாகி இருக்கிறேன். எனவே விஷயங்களை விரைவுபடுத்த முயற்சிக்கிறேன்.
தமிழில் எனது அடுத்த படமான காந்தா படப்பிடிப்பு 40 சதவீதம் நிறைவடைந்துள்ளது. தமிழ் கலாச்சாரம் மற்றும் மொழியைக் கொண்டாடும் விதமாக இந்த படம் இருக்கும். அப்புறம் மேலும் ஒரு தமிழ், மலையாளம், தெலுங்கு. படங்களில் நடிக்க விரும்பினாலும், சில சமயங்களில் நினைத்தபடி இயங்க முடியாது" என்று தெரிவித்தார்.
லக்கி பாஸ்கரில் தமிழில் டப்பிங் பேசுவேன்
முன்னதாக, லக்க பாஸ்கர் தமிழ் பதிப்பு ட்ரெய்லரில் துல்கர் சல்மானுக்கு வேறொரு நபர் குரல் கொடுத்திருந்தார். இதற்கு, படத்தில் துல்கர் குரல் இல்லாதது ஏமாற்றம் அளிப்பதாக ரசிகர்கள் பலரும் கருத்து தெரிவித்தனர். இதுபற்றிய கேள்விக்கு துல்கர் அளித்த பதிலில், "லக்கி பாஸ்கர் படம் டப்பிங் செய்ய எளிதான படம் இல்லை. தெலுங்கில் டப்பிங் செய்ய அதிக நேரம் எடுத்தது. நான் தமிழில் டப்பிங் செய்யவில்லை என்பது பற்றிய நிறைய கருத்துகளைப் படித்தேன். எனவே நான் ஆடியன்ஸை ஏமாற்ற விரும்பவில்லை. இந்தப் படத்தின் புரொமோஷன் பணிகளை முடித்துவிட்டு, தமிழிலும் டப் செய்ய முயற்சிக்கிறேன்" என்றார்.
லக்கி பாஸ்கர் படம்
பேமிலி ட்ராமா த்ரில்லர் பாணியில் உருவாகியிருக்கும் லக்கி பாஸ்கர் படத்தை வெங்கி அட்லூரி இயக்கியுள்ளார். தெலுங்கில் தயாராகி இருக்கும் படம் தமிழ், மலையாளம், இந்தி ஆகிய மொழிகளிலும் டப் செய்யப்பட்டு வெளியாகிறது.