பல விஷயங்கள் நடந்துள்ளது..நியாயம் கிடைக்கும் வரை போராடுவேன்! கெளதமி நில மோசடி வழக்கின் பின்னணி என்ன?
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  பல விஷயங்கள் நடந்துள்ளது..நியாயம் கிடைக்கும் வரை போராடுவேன்! கெளதமி நில மோசடி வழக்கின் பின்னணி என்ன?

பல விஷயங்கள் நடந்துள்ளது..நியாயம் கிடைக்கும் வரை போராடுவேன்! கெளதமி நில மோசடி வழக்கின் பின்னணி என்ன?

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Updated Oct 19, 2024 11:10 AM IST

நிலம் வாங்கி கொடுத்த விவகாரத்தில் பல விஷயங்கள் நடந்துள்ளது. இதில் நியாயம் கிடைக்கும் வரை போராடுவேன் என நில மோசடி வழக்கு குறித்து நடிகை கெளதமி தெரிவித்துள்ளார். கெளதமி நில மோசடி வழக்கின் பின்னணி என்ன என்பதை பார்க்கலாம்

பல விஷயங்கள் நடந்துள்ளது..நியாயம் கிடைக்கும் வரை போராடுவேன்! கெளதமி நில மோசடி வழக்கின் பின்னணி என்ன?
பல விஷயங்கள் நடந்துள்ளது..நியாயம் கிடைக்கும் வரை போராடுவேன்! கெளதமி நில மோசடி வழக்கின் பின்னணி என்ன?

கெளதமிக்கு நிலத்தை விற்று தருவதாக மோசடி

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே நடிகை கெளதமிக்கு சொந்தமாக 150 ஏக்கர் நிலம் இருந்துள்ளது. இந்த சொத்தை காரைக்குடியை சேர்ந்த சினிமா பைனான்சியர் அழகப்பன் நிர்வகித்து வந்துள்ளார். இதையடுத்து முதுகுளத்தூர் அருகே துலுக்கன் குறிச்சி கிராமத்தில் 64 ஏக்கர் நிலம் வாங்கிக் கொடுத்ததில் ரூ.3.16 கோடி மோசடி செய்துவிட்டதாக கடந்த மே மாதம் நடிகை கெளதமி புகார் அளித்திருந்தார். இதுதொடர்பாக ராமநாதபுரம் மாவட்டம் க்ரைம் பிரிவில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கில் அழகப்பன், அவரது மனைவி நாச்சாள், மகன்கள் சொக்கலிங்கம் அழகப்பன், சிவ அழகப்பன், மருமகள் ஆர்த்தி அழகப்பன், புரோக்கர் நெல்லியான், ஜோசப் ஜெயராஜ், பாக்கிய சாந்தி, ஜெயபாலன், சந்தான பீட்டர், ரமேஷ் சங்கர் சோனாய், பாஸ்கர், விசாலாட்சி ஆகிய 13 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

கெளதமி வழக்கின் விசாரணை ராமநாதபுரம் ஜேஎம் நீதிமன்றம் 2இல் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் அழகப்பனின் மேலாளர் மதுரை கருப்பாயூரணியைச் சேர்ந்த ரமேஷ் சங்கர் சோனாய் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார். இவரது ஜாமின் மனு மீது விசாரணை நடைபெற்ற போது, நடிகை கெளதமி நேரில் ஆஜரானார்.

இந்த மோசடி நடைபெறுவதற்கு முக்கிய காரணமாக இருந்து வரும் ரமேஷ் சங்கர் சோனாய்க்கு ஜாமின் வழங்ககூடாது என கெளதமி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

நியாயம் கிடைக்கும் வரை போராடுவேன்

இந்த வழக்கின் விசாரணையின்போது நீதிமன்றத்தில் வைத்து நடிகை கெளதமி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர், "எனக்கு அநீதி நடந்திருக்கிறது. அதை எதிர்த்து நியாயத்துக்காக போராடி வருகிறேன். எனக்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்கி வருகிறார்கள். நியாயத்துக்காக என்னுடன் துணையாக நிற்கிறார்கள். அதற்கு நான் அவர்களுக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். இந்த விஷயத்தில் என்ன நடந்தது என விசாரித்தபோது பல விஷயங்கள் நடந்திருப்பது எனது கவனத்திற்கு வந்தது. அதையெல்லாம் பற்றி இப்போது எதுவும் கூறமுடியாது. எனக்கு நியாயம் கிடைக்கும் வரை போராடுவேன்" என்று கூறினார்

கெளதமி மோசடி வழக்கின் பின்னணி

சென்னையில் வசித்து வரும் கட்டுமான நிறுவன அதிபரும், பாஜக பிரமுகருமான அழகப்பன் என்பவர் மீது சென்னை காவல் ஆணையரிடம் நடிகை கெளதமி கடந்த ஆண்டு புகார் ஒன்றை அளித்திருந்தார். அதில், தனது கையெழுத்தை அழகப்பனும் அவரது குடும்பத்தினரும் மோசடியாக போட்டு, தனக்கு சொந்தமான நிலத்தை அபகரித்து கொண்டதாக கூறியிருந்தார்.

கடந்த ஆண்டு டிசம்பரில் கேரளாவில் இருந்த அழகப்பன், அவரின் மனைவி, மகன், மருமகள், கார் ஓட்டுநர் கைது செய்யப்பட்டனர். பின்னர், அவர்கள் சென்னை அழைத்து வரப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அழகப்பனை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவிட்டார். அதன்படி, அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

கெளதமி படங்கள்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் 1988இல் வெளியான குரு சிஷ்யன் படத்தின் மூலம் தமிழில் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை கெளதமி. இதற்கு முன்னரே தெலுங்கு, கன்னட சினிமாக்களில் அவர் ஹீரோயினாக நடித்திருந்தார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் ஹீரோயினாக நடித்துள்ள கெளதமி, கடைசியாக தமிழில் கமல்ஹாசனுடன் இணைந்து 2015இல் வெளியான பாபநாசம் படத்தில் நடித்திருந்தார். தற்போது தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் நடித்து வருகிறார். இந்த ஆண்டில் இவரது நடிப்பில் தெலுங்கில் சிம்பா, 35 ஆகிய படங்கள் வெளியாகியுள்ளன.

 

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.