ஆட்டத்தை தொடங்கிய 'வேட்டையன்'.. தியேட்டர்களில் திருவிழா கொண்டாட்டம்..மனம் திறந்த இயக்குநர் ஞானவேல்!
ரஜினிகாந்த் நடித்த 'வேட்டையன்' திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி உள்ள நிலையில், இயக்குநர் டி.ஜே.ஞானவேல், தனது அனுபவம் குறித்து மனம் திறந்துள்ளார்.

இந்திய சினிமாவின் இருபெரும் உச்ச நட்சத்திரங்களான ரஜினிகாந்த், அமிதாப் பச்சன் ஆகியோர் இணைந்து நடித்துள்ள வேட்டையன் திரைப்படம் உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் இன்று (அக.10) ரிலீஸாகி இருக்கிறது.
டி.ஜே.ஞானவேல் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் ராணா, ஃபகத் பாசில், மஞ்சு வாரியர், துஷாரா விஜயன், ரித்திகா சிங் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். லைகா நிறுவனம் சார்பில் சுபாஷ்கரன் தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். லைகா புரொடக்ஷன்ஸின் முப்பதாவது படமான 'வேட்டையன்' தமிழ் சினிமாவில் அமிதாப் பச்சனின் முதல் படமாகும்.
தமிழகத்தில் சிறப்பு காட்சியாக காலை 9 மணிக்கு வெளியான வேட்டையன் திரைப்படத்தை காண ரசிகர்கள் அதிகாலை முதலே தியேட்டர்களில் குவிந்த வண்ணம் இருந்தனர். வழக்கமான ரஜினி ரசிகர்களின் ஆரவாரமும் தியேட்டர்கள் முன்பு காணமுடிந்தது. ஆனால், இப்படம் முதல்பாதி சிறப்பாகவும் இரண்டாம் பாதி சுமாராக இருந்ததாகவும் சமூகவலைத்தளங்களில் கருத்துக்கள் பதிவிடப்பட்டு வருகின்றன. மேலும், என்கவுண்டர் குறித்து பேசிய விஷயங்கள் அழுத்தமாக இருந்ததாகவும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.