Seenu Ramasamy: பெரிய நடிகர்கள் கால்ஷீட் தருவது இல்லை.. விக்ரம் அப்படியில்லை: சீனு ராமசாமி புகழாரம்!
Seenu Ramasamy: பெரிய நடிகர்கள் கால்ஷீட் தருவது இல்லை எனவும், விக்ரம் அப்படியில்லை எனவும் இயக்குநர் சீனு ராமசாமி புகழாரம் தெரிவித்துள்ளார்.
Seenu Ramasamy: இயக்குநர் சீனு ராமசாமி இயக்கிய கோழிப்பண்ணை செல்லதுரை திரைப்படம், செப்டம்பர் 20ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்நிலையில் இப்படத்தின் இயக்குநர் சீனு ராமசாமி ஆகாயம் தமிழ் யூட்யூப் சேனலுக்கு அளித்த பேட்டியின் தொகுப்பினைக் காணலாம்.
இதுதொடர்பாக கோழிப்பண்ணை செல்லதுரை படம் குறித்து இயக்குநர் சீனுராமசாமி அளித்த பேட்டி:-
கேள்வி: இயக்குநர் சீனு ராமசாமி என்றாலே புருவம் உயர்த்தி, இவரின் படங்களில் நல்ல விஷயங்கள் இருக்கும் என்று திரையரங்குக்கு வருகிறார்கள். உங்கள் மனதில் என்ன ஓடுது?
பதில்: மக்கள் என் மீது வைத்திருக்கும் நம்பிக்கைக்கு சந்தோஷம். ஒரே படம் மாதிரி, இன்னொரு படம் இருக்கவேண்டும் என நினைப்பதுதான் எனக்கு ரொம்ப கஷ்டமாயிருக்கு. ஒவ்வொரு படமும் ஒவ்வொரு விதமான ஜானர். அதற்கு நியாயமான வகையில் எப்படி திரைக்கதை அமைக்கமுடியுமோ, அதே மாதிரி தான் செய்யமுடியும். நீர்ப்பறவை மாதிரியே தர்மதுரை இருக்கணும்.
தர்மதுரை மாதிரியே மாமனிதன் இருக்கணும். தன் குழந்தைகளைக் காப்பாற்ற வீட்டை விட்டு ஓடிய ஒரு தந்தையின் கதை. தர்மதுரை, ஒரு சொந்தக் குடும்பத்தால் காயப்பட்டவனின் கதை. காயப்பட்ட பறவைக்கு, இன்னொரு காயப்பட்ட பறவை ஆறுதல் தருகிறது. இருவரும் சேர்கின்றனர். அதுதான் கதை.
கோழிப்பண்ணை செல்லதுரை படத்திலும் ஒரு மெசேஜ் இருக்கும்:
நீர்ப்பறவை, கெட்ட சவாகசங்களுக்கு ஆளான பையனை ஒரு பெண் தன் பிரார்த்தனையால் மீட்டெடுப்பது பற்றிய கதை. இப்படி ஒவ்வொரு படத்துக்கும் ஒரு மெசேஜ் இருக்கு. கோழிப்பண்ணை செல்லதுரை, ஒரு மெசேஜை சொல்ல வருகிறது. எந்த ஒரு திட்டமும் இல்லாமல் வாங்க, ஒரு புது அனுபவம் கிடைக்கும். திடீர்னு வாழ்க்கையின் சூறாவளியில் தடுமாறிவிடப்பட்ட ஒரு பையனும், பெண்ணும் தத்தி தடுமாறி, ஒரு மனுஷனும் ஒரு மனுஷியும் ஆனாங்குகிறாங்க என்பது தான், கோழிப்பண்ணை செல்லத்துரை. யாவருக்கும் வாழ்வுண்டு. எல்லாப்பக்கமும் திசைகள் உண்டு.
கேள்வி: சீனு ராமசாமியின் படங்களில் அழுத்தமான வசனங்கள் இருக்கும். தர்மதுரையில் கூட விஜய்சேதுபதி, ‘நீ நல்லா இருக்கணும். அதை நான் பார்க்கணும்’ என அழகாக காதலைச் சொல்லியிருப்பார். அது சீனு ராமசாமிக்கு மட்டும் எப்படி சாத்தியமாச்சு?
பதில்: நில வெளிச்சத்தில் இருட்டில் நானும் நடந்து வறேன். கொஞ்சம் பயமாக இருக்கு. அப்போது லேசாக காத்து அடிச்சு, ஒரு குயில் கூவுது. அப்போ கொஞ்சம் தைரியம் வருது. குயில் இருக்குன்னு. மரம் ஆடும்போது காத்து துணை இருக்கான்னு தோணுது. அதுமாதிரி ஒரு படைப்புங்கிறது, ஒரு மனிதனுடைய உள்ளங்கையைப் போய் பற்றவேண்டாமா?.அது ஏதாவது சின்ன வேலை செய்யவேணாமா?. ஒரு வேப்பமரம் செய்யிறதையாவது, சினிமா செய்யணும்ல. வெறும் எலும்புகளை மட்டும் மனிதன் விட்டுட்டுப்போகணுமாங்கிற தவிப்பு இருக்குல்ல, அப்போது தோணுறதுதான் கதையாக வருது. சிலது நான் வாழணும்னு ஆசைப்பட்டது. சிலது நான் வாழ்ந்தது. கோழிப்பண்ணை செல்லத்துரை முற்றிலும் கற்பனைதான்.
கேள்வி: ஹெச். வினோத், சமீபத்தில் ஒரு படம் மனிதனை மனிதனாக மாற்றவேண்டும் என சொல்லியிருந்தார். அதுபற்றி?
பதில்: அது கமர்ஷியல் இயக்குநர் என்பதால் வெளியில் தெரியுது. நான் ஆரம்பத்தில் இருந்தே அப்படிதான் யதார்த்தப் படத்தைத்தான் எடுத்துட்டு இருக்கேன். நான் அவங்களுக்குப் படம் பண்ணமாட்டேன்னு கிடையாது. அவங்க படம் பண்ண வரமாட்டுறாங்களேன்னு ஏக்கம் தான். எல்லாப் படங்களுக்கும் ஒரே உழைப்பு தான். ஹீரோ மட்டும் தான் மாற்றம். மலையாளத்தில் நடக்குது. மம்மூட்டி பண்றார். இந்தப் பயிற்சியை யார் கொடுக்கணும். ஹீரோக்கள் தான் கொடுக்கணும். ஹீரோக்கள் கால்ஷீட் கொடுத்தால் இயக்குநர்கள் படம் செய்யத் தயாராக இருக்காங்க. விக்ரம் அப்படி இருக்காரே, சேது முதல் தங்கலான் வரை. இப்போது விஜய்சேதுபதி செய்யமுடிஞ்சது. இப்படி வொர்க் பண்ணும்போது கலாபூர்வமான படங்கள் இருந்திட்டே போகும். மிகையற்ற, உண்மைக்கு நெருக்கமான படங்கள் வரணும். ஹீரோக்கள் கமர்ஷியல் படங்கள் மட்டும் பண்ணாமல், யதார்த்தமான படங்களும் பண்ணனும். கதையம்சம் உள்ள படங்கள் பண்ணி ஸ்டார் ஆகணும்’’ என இயக்குநர் சீனு ராமசாமி முடித்தார்.
நன்றி: ஆகாயம் தமிழ்