11 Years of நீர்ப்பறவை: காதலும்.. அது நிமித்தம்பேசிய சர்வதேச அரசியலும்!
நீர்ப்பறவை திரைப்படம் வெளியாகி 11 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.
நீர்ப்பறவை திரைப்படம் 2012ஆம் இயக்குநர் சீனு ராமசாமியின் இயக்கத்தில் வெளிவந்தது. இப்படத்தில் அருளப்பசாமியாக விஷ்ணு விஷாலும் இளைய எஸ்தராக சுனைனாவும், மூத்த எஸ்தராக நந்திதா தாஸும் நடித்திருந்தனர். மேலும் லூர்து சாமியாக பூ ராமுவும் மேரியாக சரண்யா பொன் வண்ணனும் உதுமான் கனியாக சமுத்திரக்கனியும் எஸ்தரின் வளர்ப்புத்தாய் பெனிட்டாவாக அனுபாமா குமாரும் நடித்துள்ளனர். அதேபோல் அந்தோணியாக பாண்டியும், எபினேசராக வடிவுக்கரசியும் சர்ச் ஃபாதராக அழகம்பெருமாளும் நடித்திருந்தனர்.
இப்படத்தை ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரித்து இருந்தது. படத்திற்கான துருத்தாத இசையை என்.ஆர்.ரகுநந்தனும் கடலோர கிராமங்களை கண்முன் கொண்டு வரும் ஒளிப்பதிவினை பாலசுப்பிரமணியமும் செய்திருந்தனர்.
நீர்ப்பறவை திரைப்படத்தின் கதை என்ன?: ஒரு கடற்கரை கிராமத்தில் இருக்கும் தாய் எஸ்தரைப் பார்க்க வரும் மகன், அந்த கிராமத்து வீட்டை விற்கும்படி ஒரு கோரிக்கை வைக்கிறான். ஆனால், அந்த வயதான தாய்(நந்திதா தாஸ்) அதனை விற்க மறுக்கிறார். மேலும் கடலுக்குச் சென்ற தந்தை அருளப்பசாமி(விஷ்ணு விஷால்) திரும்பி வந்து கேட்டால், தான் இருக்கவேண்டும் என்கிறார். ஆனால் யதார்த்தத்தில் அவன் தந்தை இறந்து 25 வருடங்களுக்கும் மேல் ஆகிறது. அவன் திரும்பிவரவாய்ப்பில்லை என்பதை உணர்ந்த மகன், தாயைக் கண்காணிக்கிறார். அதுகுறித்து கேட்கையில் கல்லறையில் பாடும் பாடலைப் பாடி அழுகிறார், தாய் எஸ்தர். ஒரு தருணம், தாய் கடற்கரைக்குச் சென்ற நேரத்தில் தாய் அழுத இடத்தைத் தோண்டி பார்க்கும் மகனுக்கு இறுதியில் அதிர்ச்சி மிஞ்சுகிறது. ஏனெனில் கிடைத்தது, ஒரு மனித எலும்புக்கூடு.
அப்படியே கட் செய்தால் நீதிமன்றத்தில் தன் கணவர் அருளப்பசாமியைக் கொன்றது தான் தான் என வாதம் செய்கிறார், தாய் எஸ்தர். ஆனால் உண்மையில் வேறு ஒன்று நடந்துள்ளது.
ஃப்ளாஷ்பேக்:சரியான குடிகார இளைஞன் அருளப்பசாமியை அவரது தந்தை லூர்தும், அம்மா மேரியும் சர்ச் ஃபாதர் உதவியில் குடிகாரர்கள் மறுவாழ்வு மையத்துக்கு அனுப்பிவிடுகின்றனர். ஒரு திருவிழா சமயத்தில் ஓடிவரும் அருளப்பசாமி, போதைக்கிறுக்கில் முன்பின்தெரியாமல் இளம்வயது எஸ்தர் உறங்கிக்கொண்டு இருக்கும் இடத்தின் அருகில் படுத்து உறங்கிவிடுகிறான். இதனை தாமதமாக அறிந்த ஊர் மக்கள், தாய், தந்தை அவனை கண்டிக்கின்றனர். அப்போது அருளப்பசாமிக்கு எஸ்தர்மேல் ஈர்ப்பு வருகிறது. இதனால் மீண்டும் மறுவாழ்வுமையத்துக்குச் சென்று, மனம் திருந்துகிறான். பல்வேறு எதிர்ப்புக்கிடையே எஸ்தரை திருமணம் செய்கிறார். இதற்கிடையே சொந்தமாக படகு வாங்கி மீனவராக முயற்சிக்கையில், அவன் மீனவர் அல்ல என அப்பகுதியினர் அருளப்பசாமி படகு வாங்க முட்டுக்கட்டையாக வருகின்றனர். ஏனெனில் படகில் குண்டடிபட்ட தாய், தந்தைக்கு இடையே இருந்த பிள்ளையை எடுத்து வளர்த்தவர்கள் தான் லூர்தும் மேரியும் எனவும்; இதனால் அவர் உண்மையான மீனவர் இனத்தைச் சார்ந்தவர் இல்லை எனவும் அப்பகுதி மக்கள் எதிர்ப்புத் தெரிவிக்கின்றனர். இறுதியில் படகினை வாங்கி, திருமண வாழ்வில் வெல்லத்துடிக்கும் அருளப்பசாமியை வினையாக சிங்கள கடற்படை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக சுட்டுக்கொன்றுவிடுகிறது. தனது கணவரின் உடலை எப்படியோ படாதபாடு மீட்டு வந்து தனது வீட்டிலேயே புதைத்து விடுகிறார், எஸ்தர். அதனை யாருக்கும் தெரியப்படுத்தவில்லை. பல்வேறு விசாரணைக்குப் பின், தாய் எஸ்தரை விடுவிக்கிறது, காவல் துறை. இறுதியில் அருளப்பசாமி இறந்தபின்னும் ஏன் காத்திருக்கிறீர்கள் என்று எஸ்தரிடம் கேட்டதற்கு தன் கணவரின் உடல் மட்டுமே கிடைத்துள்ளது; ஆன்மா கடலில் தான் உள்ளது எனச் சொல்கிறார், எஸ்தர்.
குண்டடிபட்டுக் கிடந்த தாய், தந்தையருக்கு மகனாகப் பிறந்த மகனும் சிங்கள கடற்படையினரால் குண்டடிபட்டே இப்படத்தில் இறந்துகிடக்கிறார். இதுதான் இந்தப் படம் பேசிய சர்வதேச அரசியல். அதை துணிச்சலாகப் பேசிய இயக்குநர் சீனுராமசாமியின் உன்னத படைப்பு, நீர்ப்பறவை. இப்படம் வெளியாகி 11ஆண்டுகளை நிறைவு செய்தாலும் ஒவ்வொரு முறை இப்படத்தைப் பார்க்கும்போதும் திரையில் ஒரு நாவலைப் படித்த உணர்வுதான் மேலோங்குகிறது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், ஆன்மிகம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்