கோதாவில் களமிறங்கியாச்சு.. இது வேற மாதிரி மிஷ்கின்.. பாய்ஸ் கெட் ரெடி ஃபார் ஆக்ஷன்..
இயக்குநர் மிஷ்கின் நீண்ட நாட்களுக்குப் பிறகு மீண்டும் ஒரு திரைப்படத்தில் கதாநாயகனாக நடிக்க உள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
இயக்குநரும், நடிகரும் வித்தியாசமான பேச்சால் மக்களை கவரும் கலைஞனான மிஷ்கின், திரைப்படம் ஒன்றில் கதாநாயகனாக நடிக்க ஒப்பந்தமாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
பன்முக கலைஞன்
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக இருந்து வருபவர் மிஷ்கின். இயக்குநராக சினிமாவில் அறிமுகமாகி தற்போது நடிகர், பாடகர், இசையமைப்பாளர், தயாரிப்பாளர் என பன்முக தோற்றத்துடன் சினிமாவில் வலம் வந்து கொண்டிருக்கிறார். பொதுவாக திரையில் தோன்றும் நடிகர்களின் பெயரை சொன்னால் அவரது தோற்றம், நடை உடை பாவனை, ஸ்டைல் போன்ற அடையாளம் ரசிகர்கள் மனதில் நினைவுக்கு வருவதுண்டு.
சித்திரம் பேசிய இயக்குநர்
ஆனால் மிஷ்கின் பெயரை உச்சரித்தாலே, அவரது வித்தியாசமான திரைக்கதையும், பேச்சும் தான் நியாபகம் வருகிறது. தமிழ் சினிமாவில் சித்திரம் பேசுதடி என்னும் படத்தின் மூலம் அறிமுகமாகி, கடைசியாக இயக்கியிருக்கும் சைக்கோ வரை இவர் இயக்கிய ஒவ்வொரு படங்களும் காலம்கடந்தும் தமிழ் ரசிகர்களை கொண்டாட வைக்கும் படங்களாக இருக்கின்றன.
உதவி இயக்குநர் மிஷ்கின்
சினிமாவின் மீது கொண்ட ஆர்வத்தால் திரைத்துறைக்கு வந்த இவர், இதயம், உழவன், காதல் தேசம், காதலர் தினம் போன்ற காதல் படங்களின் இயக்குநரான கதிரிடம் உதவியாளராக மிஷ்கின் பணியாற்றினார். அதன் பிறகு பிரியமுடன், யூத், ஜித்தன் படங்களை இயக்கிய வின்சென்ட் செல்வாவிடம் இணை இயக்குநராக பணிபுரிந்து பின்னர் இயக்குநர் ஆனார்.
மக்களை கவரும் மிஷ்கின்
மிக சிறிய பட்ஜெட்டில் உருவாகி பெரிய ஹிட்டான சித்திரம் பேசுதடி படம் தான் மிஷ்கினின் முதல் படம். ஆக்சன் காதல் கலந்த இந்த படத்தில் வித்தியாசமான திரைக்கதையின் மூலம் ஈர்த்தார்.
பின், இவரது அஞ்சாதே என்கிற த்ரில்லர் படம் இளம் பெண்களை கடத்தும் கும்பல் பற்றிய கதையாக அமைந்திருந்தது. பின்னர், முகமூடி, ஓநாயும் ஆட்டுக்குட்டியும், துப்பறிவாளன், பிசாசு போன்ற வெற்றி படங்களை இயக்கியுள்ளார். இதற்கிடையில் நந்தலாலா எனும் படத்தை இயக்கியதுடன் அதில் கதாநாயகனாகவும் நடித்து அசத்தி இருப்பார். இந்தப் படத்தில் மனம்பிறழ்ந்தவருக்கும் சிறுவனுக்கும் இருக்கும் பந்தம் பற்றியும் எடுத்துக் கூறி தன்னால்,இயக்குநராக அல்ல நடிகராகவும் அசத்த முடியும் என தெரிவித்திருப்பார்.
நடிகர் அவதாரம்
இதையடுத்து, அவரின் நடிப்புத் திறமையை அங்கிகரிக்கும் விதமாக, சவரக்கத்தி, சூப்பர் டீலக்ஸ், பேச்சுலர், மாவீரன், லியோ போன்ற சில படங்களில் குணச்சித்திர நடிகன், வில்லன் என பல்வேறு விதமான கதாபாத்திரங்களில் நடித்திருப்பார்.
மீண்டும் கதாநாயகன்
இந்த நிலையில், அவர், ‘ஓல்ட் இஸ் கோல்ட்’ என்கிற படத்தில் கதாநாயகனாக நடிக்கவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தை ‘ரைட்டர்’ பட இயக்குநர் பிராங்க்ளின் ஜேக்கப்பின் உதவி இயக்குநர் கோகுல் இயக்குகிறார். இந்தப் படத்தின் மூலம் மிஷ்கின் 14 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ் சினிமாவில் மீண்டும் கதாநாயகனாக வலம் வர உள்ளார்.
இந்தப் படத்தில் மிஷ்கின் கதாநாயகனாக நடிக்க உள்ளார் என்ற தகவல் மட்டுமே வெளியாகியுள்ளது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
காத்திருக்கும் மிஷ்கின் படங்கள்
முன்னதாக மிஷ்கின் இயக்கிய பிசாசு படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்த நிலையில், அவர் அந்தப் படத்தின் 2ம் பாகத்தை சில ஆண்டுகளுக்கு முன் எடுத்து முடித்தார். ஆனால் சில காரணங்களுக்காக பிசாசு 2 திரைப்படம் இன்னும் வெளிவராமலே இருக்கிறது. இதற்கிடையில் தான் அவர், நடிகர் விஜய் சேதுபதியை வைத்து, ட்ரெயின் எனும் படத்தை இயக்கி வருகிறார். ட்ரெயின் திரைப்படத்திற்குப் பின், இவர் கதாநாயகநாக நடிக்கச் செல்வார் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது.