Director Mari Selvaraj: வரிசையில் காத்திருக்கும் நடிகர்கள்..அடுத்தடுத்து படம்.. இது வெற்றிக்கான நேரம்..
Director Mari Selvaraj: இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான அனைத்து படங்களும் வெற்றியடைந்த நிலையில், அவரிடம் இணைந்து பணியாற்ற நடிகர்கள் பலர் போட்டி போட்டுக் கொண்டு உள்ளர். இதற்கிடையில் இவர் கார்த்தியை வைத்து முதலில் படம் எடுக்க உள்ளார்.

தன் வாழ்வில் பட்ட துயர்களை தனது ஒவ்வொரு படைப்பின் மூலம் மிகவும் ஆழமாக வெளிப்படுத்தி வருபவர் இயக்குநர் மாரி செல்வராஜ். இவரின் முதல் படமான பரியேறும் பெருமாள் தமிழ் சினிமாவில் ஏற்படுத்திய தாக்கம் கொஞ்சம் நஞ்சமல்ல. இந்தப் படத்தை பார்த்த பலரும் மாரி செல்வராஜின் ஆழமான கருத்தையும், அதை வெளிப்படுத்தும் தன்மையையும் பாராட்டி வந்தனர்.
இந்நிலையில், இவரின் வாழ்க்கையை மையப்படுத்தி எடுக்கப்பட்ட வாழை திரைப்படம் பல இயக்குநர்களையும் கலங்க வைத்தது. நடிகர்கள் பலரும் மாரி செல்வராஜை பாராட்டிய நிலையில் அவருடன் இணைந்து பணியாற்ற விரும்புவதாக கருத்து தெரிவித்து வந்தனர். இதற்கிடையில், மாரி செல்வராஜ் வாழை படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, நடிகர் கார்த்தியை வைத்து படம் எடுக்க உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் கார்த்தி
இயக்குநர் அமீரின் பருத்தி வீரன் திரைப்படம் மூலம் திரைத்துறைக்கு ஹீரோவாக அறிமுகமானவர் கார்த்தி. நடிகர் சிவக்குமாரின் மகன், நடிகர் சூர்யாவின் தம்பி என அறிமுகப்படுத்தப்பட்ட இவர், வெவ்வேறு கதைக்களத்தில் நடித்து ரசிகர்களிடம் தனக்கான இடத்தை பிடித்துக்கொண்டார். தனது முதல் படத்திலேயே அசாத்தியமான கதாப்பாத்திரத்தை ஏற்று மக்களை அசரவைத்தார். பின், காதல், குடும்பப் படங்களை கையிலெடுத்து தமிழ் சினிமாவில் மெல்ல மெல்ல கால்தடம் பதித்தார்.