HBD Director M.Rajesh: சிவா மனசுல சக்தி, பாஸ் என்கிற பாஸ்கரன், ஒரு கல் ஒரு கண்ணாடி பட இயக்குநர் எம். ராஜேஷின் கதை!
HBD Director M.Rajesh:சிவா மனசுல சக்தி, பாஸ் என்கிற பாஸ்கரன், ஒரு கல் ஒரு கண்ணாடி பட இயக்குநர் எம். ராஜேஷின் கதை பற்றி அவரது பிறந்தநாளான இன்று அறிந்துகொள்வோம்.
HBD Director M.Rajesh - தமிழ் சினிமாவில் ஒவ்வொரு காலத்திலும், ஒவ்வொரு இயக்குநர்கள் ட்ரெண்ட் செட் இயக்குநர்களாக இருப்பர். அப்படி, முழு நீள நகைச்சுவை திரைப்படங்களை இயக்கி முத்திரைப் பதித்த இயக்குநர், எம். ராஜேஷ்.
2009ஆம் ஆண்டு சிவா மனசுல சக்தி(SMS), 2010ஆம் ஆண்டு பாஸ் என்கிற பாஸ்கரன், 2012ஆம் ஆண்டு ஒரு கல் ஒரு கண்ணாடி ஆகிய மூன்று படங்களின்மூலம் ஹாட்ரிக் ஹிட் கொடுத்தவர். இவரது திரைப்படங்களில் வரும் திரைக்கதையும் வசனங்களும் இப்போதும் மீம் மெட்டீரியலாக வலம் வருகின்றன. தன் ஒவ்வொரு படங்களையும் ஜனரஞ்சகமாக, அனைவருக்கும் பிடிக்கும் வகையில் எடுத்துக்காட்டியவர். பெரும்பாலும் ஒரு நடுத்தர வயதில் உள்ளோர்களின் வாழ்வில் நடப்பதைப் படம் பிடித்துக் காட்டியவர். இயக்குநர் எம். ராஜேஷ் பற்றி பேச நம்மிடம் ஏராளமான விஷயங்கள் உள்ளன. வாருங்கள் பார்ப்போம்.
பிறப்பு மற்றும் படிப்பு:
1985ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 24ஆம் தேதி, நாகர்கோவிலில் பிறந்து வளர்ந்த இயக்குநர் ராஜேஷ், கோவில்பட்டியில் உள்ள நேஷனல் பொறியியல் கல்லூரியில் படித்துமுடித்துவிட்டு, மும்பையில் 6 மாதங்கள் தகவல் தொழில்நுட்பத்துறையில், பணியாற்றியுள்ளார்.
திரைத்துறை என்ட்ரி:
நேரடியாக திரைத்துறையில் சேர்வதற்கு முன்பு, ஒன்றரை ஆண்டுகள், காஸ்மிக் புளூஸ் என்னும் தயாரிப்பு நிறுவனத்தில் குறும்படங்கள் மற்றும் விளம்பரங்கள் இயக்கும் தயாரிப்புப் பணியை ராஜேஷ் மேற்கொண்டார். அதன்பின், இயக்குநர் அமீரின் ’மெளனம் பேசியதே’ திரைப்படத்திலும், எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கிய ’சுக்ரன், நெஞ்சிருக்கும் வரை’ ஆகிய திரைப்படங்களிலும் ராஜேஷ், உதவி இயக்குநராகப் பணிபுரிந்தார்.
அதனைத்தொடர்ந்து அவர்களிடம் இருந்து வெளியில் வந்து சினிமா இயக்கும் முயற்சியில் ஈடுபட்டார், ராஜேஷ். அதன்பின், ராஜேஷுக்கு கிடைத்த வாய்ப்பு தான், ’சிவா மனசுல சக்தி’. அதை நேர்த்தியாக கையாண்டு, அதை மிகவும் லாபகரமான படமாக வெளியில் கொண்டு வந்தவர் தான், ராஜேஷ். படத்தில் யுவனின் இசையில் அத்தனை பாடல்களும் ஹிட். ’ஒரு பார்வையில் பூ கொடுத்தாய், ஒரு வார்த்தையில் வாழ வைத்தாய்’, ’ஒரு கல் ஒரு கண்ணாடி உடையாமல் மோதிக்கொண்டால் காதல்’ ஆகிய இரு பாடல்களும் இன்றும் பலரின் ஃபேவரைட் ரகம். இப்படத்தில் வரும் ’ஒவ்வொரு பொண்ணுக்கும் ஒவ்வொரு ஃபீலிங் மச்சி’ என்னும் வசனம், பலருக்கும் நினைத்தாலே சிரிப்புமூட்டும் ரகம்.
பாஸ் என்கிற பாஸ்கரனை தந்த இயக்குநர்:
அடுத்து ராஜேஷ் இயக்கத்தில் வெளியான படம் தான் பாஸ் என்கிற பாஸ்கரன். பொறுப்பில்லாமல் ஊரைச் சுற்றும் இளைஞர் எவ்வாறு பொறுப்பான இளைஞராக மாறி, காதலியுடன் ஜோடி சேர்கிறார் என்பது தான், படத்தின் ஒன் லைன். இதற்கு பக்கா காமெடி அம்சங்களுடன் திரைக்கதை எழுதி, இப்படத்தையும் ஹிட் ஆக்கியிருப்பார், ராஜேஷ். ‘மச்சி, என் ஆளு என்ன பாடேன் சொல்லிட்டாடா, ஏங்க சத்யமா.. உங்களை எப்படி கரெக்ட் பண்றதுன்னு தெரியலங்க’ என படத்தில், ஆர்யா நயன்தாராவைப் பார்த்து, அங்கு அங்கு வரும் காமெடி வசனங்களை நினைத்தால் மனதில் இன்றும் சிரிப்பு வரும்.
அதன்பின் தனது, ’ஒரு கல் ஒரு கண்ணாடி(ஓகே ஓகே)’ படத்தில் உதயநிதி ஸ்டாலினை கதையின் நாயகனாக அறிமுகப்படுத்தி, முதல்படத்திலேயே ஹிட் கொடுக்கவைத்தவர், ராஜேஷ். ’அடை தேன் அடை’ என இப்படத்தில் வருவது போன்று, படம் முழுக்க காமெடியிலான ஸ்வீட் தான்.
அடுத்து, ஆல் இன் ஆல் அழகுராஜா, வாசுவும் சரவணனும் ஒன்னா படிச்சவங்க, கடவுள் இருக்கான் குமாரு, மிஸ்டர் லோக்கல், வணக்கம்டா மாப்பிள்ளை ஆகிய இவரது இயக்கத்தில் வெளிவந்த படங்கள் ஆவரேஜ்ஜான படங்களாக அமைந்துவிட்டன. இந்நிலையில் ஜெயம் ரவி ஹீரோவாகவும், பிரியா மோகன் ஹீரோயினியாகவும் நடிக்கும் பிரதர் படத்தை இயக்கிவிட்டு, ரிலீஸுக்கு காத்திருக்கிறார், எம்.ராஜேஷ். சிறந்த கம்பேக் உடன் ராஜேஷ் மீண்டு(ம்) வருவார்.
பலரை மனநோயாளிகளாக ஆகவிடாமல் சிரிக்க வைத்த இயக்குநர் ராஜேஷுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள்!
தொடர்புடையை செய்திகள்