Devara Box Office: பார்த்து பழகிய கதை..ஜூனியர் என்டிஆர் மேஜிக்! முதல் நாளில் தேவாரா வசூல் எவ்வளவு தெரியுமா?
Devara Box Office Day 1: பார்த்து பழகிய கதை, பெரிதாக திருப்பங்கள் இல்லாத திரைக்கதை என தேவாரா பார்ட் 1 படம் இருந்திருந்தாலும், ஜூனியர் என்டிஆர் மேஜிக் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. முதல் நாளில் தேவாரா வசூல் பற்றி முழு விவரத்தை பார்க்கலாம்
தெலுங்கில் ஜூனியர் என்டிஆர் நடிப்பில் உருவாகி பான் இந்தியா படமாக மிக பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகியிருக்கும் படம் தேவாரா பார்ட் 1. தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம் உள்பட பிற மொழிகளிலும் படம் நேற்று வெளியாகியுள்ளது.
படத்தின் ரிலீஸை ஜூனியர் என்டிஆர் ரசிகர்கள் கோலாகலமாக கொண்டாடிய நிலையில், அதுதொடர்பான விடியோக்களும் சமூக வலைத்தலங்களில் வைரலாகியுள்ளன.
தேவாரா பார்ட் 1 இந்திய பாக்ஸ் ஆபிஸ்
Sacnilk.com படி, தேவாரா படம் முதல் நாளில் இந்தியாவில் மட்டும் ரூ. 77 கோடி வசூலித்துள்ளது. தெலுங்கில் ரூ. 68.6 கோடி, இந்தியில் ரூ. 7 கோடி, தமிழில் ரூ. 80 லட்சம், கன்னடத்தில் ரூ. 30 லட்சம், மலையாளத்தில் ரூ. 30 லட்சம் வசூலித்திருப்பதாக கூறப்படுகிறது. அத்துடன் படம் ரிலீசான முதல் நாளில் ஒட்டுமொத்தமாக 79.56% தெலுங்கு ஆக்கிரமிப்பைப் பெற்றிருப்பதாக கூறப்படுகிறது
தேவாரா கதை
‘ஜனதா கேரேஜ்’ படத்துக்கு பிறகு, ஜூனியர் என்.டி.ஆர்- கொரட்டாலா சிவா கூட்டணியில் உருவாகியிருக்கும் படம் தேவாரா.
‘தேவாரா’ (என்டிஆர்), அவரது நண்பர் ராயப்பா (ஸ்ரீகாந்த்), மற்றொரு கிராமத்து பெரியவர் பைரா (சைஃப் அலி கான்) மற்றும் அவர்களது கூட்டாளிகள் (கலையரசன், ஷைன் டாம் சாக்கோ) முருகா (முரளி ஷர்மா)விடம் வேலை செய்கிறார்கள். இவர்கள் கடற்படை அதிகாரிகளின் கண்களில் மண்ணைத்தூவி, சட்டவிரோத ஆயுதங்களை கரைக்கு கடத்தி வருகின்றனர்
ஒரு கட்டத்தில், சட்டவிரோத ஆயுதங்களால் தங்கள் உயிருக்கு ஆபத்து இருப்பதாக உணர்ந்த தேவரா, முருகனிடம் வேலை செய்ய வேண்டாம் என்று முடிவு செய்கிறார்.அத்தோடு அவர் நிற்கவில்லை. தன் சொல்லை மீறி முருகனுக்கு பணிவிடை செய்தவர்களை தன் பாணியில் தண்டிக்கிறான். எப்போதும் தைரியத்தின் முகவரியாக இருக்கும் அவருக்கு, கோழையாக வந்து பிறக்கிறான் மகன் வாரா.
தேவாராவின் தொடர் நடவடிக்கைகள் மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்த, கடலில் இறங்கவே அவர்கள் பதறுகிறார்கள். ஆனாலும், இந்த தடையை உடைக்க, பைரா முயற்சிகளை எடுக்கிறான். அந்த முயற்சிகள் வெற்றிபெற்றதா? கோழையாக மகன் வளர்ந்ததற்கு காரணம் என்ன? செங்கடல் பகுதி மக்களுக்காக அவன் நடத்திய போராட்டம் என்ன? அவன் மீது ஜான்வி வைத்த காதல் என்னவானது? உள்ளிட்ட கேள்விகளுக்கான பதில்களே ‘தேவாரா’ படத்தின் கதை
கிளைமாக்ஸ் ட்விஸ்ட்
க்ளைமாக்ஸை ஒரு திருப்பத்துடன் முடித்திருக்கிறார் கொரட்டால சிவா. கடந்த காலத்தில் தெலுங்கில் வந்த ஒரு ட்ரெண்ட் செட்டர் படத்தை இது நினைவூட்டுகிறது. அந்தத் திருப்பத்தின் பின்னணியில், உள்ள கதையை இரண்டாம் பாகத்தில் பார்க்க இயக்குநர் லீடு கொடுத்திருக்கிறார்.
தேவாரா படம் பற்றி
பேண்டஸி ஆக்ஷன் த்ரில்லர் பாணியில் உருவாகியிருக்கும் தேவாரா படத்தில் ஜூனியர் என்டிஆர் அப்பா, மகன் என இரண்டு கேரக்டர்களில் நடித்துள்ளார். பாலிவுட் இளம் நாயகியான ஜான்வி கபூர் இந்த படம் மூலம் தென்னிந்திய சினிமாவில் அறிமுகமாகியுள்ளார். அனிருத் படத்துக்கு இசையமைத்துள்ளார்.
படத்தில் தேவாரா, வர்தா என இரண்டு வேடங்களில் ஜூனியர் என்டிஆர் தோன்றுகிறார். பாலிவுட் நடிகர் சயீப் அலிகான் வில்லனாக நடித்துள்ளார்.
வலுவான சமூகக் கருவை எடுத்துக்கொண்டு, அதில் கமர்ஷியலை புகுத்தி படம் எடுப்பது கொரட்டாலா சிவாவின் ஸ்டைல். ஆனால் இந்தப் படத்தில் அந்த மேஜிக் மிஸ்ஸிங். காரணம் கதை மிகவும் சுமார். கதையில் அடுத்து என்ன நடக்கும் என்பதை எளிதாக யூகிக்க முடிகிறது. திருப்பங்களும் அவ்வளவு சுவாரசியமானதாக இல்லை. என்டிஆர் மற்றும் ஜான்விகபூரின் காதல் கதை, ஒரே மாதிரியான நாம் பார்த்து பழகிபோன காதல் கதையாகத்தான் தேவாரா இருப்பதாக விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கின்றன.
டாபிக்ஸ்