"சூர்யா பக்கா அரசியல்வாதி.. அவர் அரசியலுக்கு வந்து ரொம்ப வருஷம் ஆச்சு".. மேடையில் சம்பவம் செய்த ஆர்.ஜே. பாலாஜி
நடிகர் சூர்யா அரசியல்வாதியாக மாறி பல வருடங்கள் ஆகிறது எனக் கூறி நடிகரும் இயக்குநருமான ஆர்.ஜோ. பாலாஜி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
சூர்யா நடிப்பில், சிறுத்தை சிவா இயக்கத்தில் நவம்பர் 14 ஆம் தேதி வெளியாக இருக்கும் திரைப்படம் கங்குவா. இந்தப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் நேற்று அக்டோபர் 27ம் தேதி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் நடிகரும் இயக்குநருமான ஆர்.ஜே. பாலாஜி பங்கேற்றார். இவர், நடிகர் சூர்யாவின் 45வது படத்தை இயக்க உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், இவர் இசை வெளியீட்டு விழாவில் பேசிய சில கருத்துகள் வைரலாகி வருகிறது.
சூர்யா ரசிகன்
நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய அவர், நான் காலேஜ் படிக்கும் போது வந்த படம் காக்க காக்க. சூர்யா சார் நடித்து நான் பார்த்த முதல் படம் காக்க காக்க படம் தான். அந்த படத்தை தொடர்ந்து, பிதாமகன், ஆயுத எழுத்து, கஜினி என இந்த 4 படத்தையும் நான் காலேஜ் படிக்கும் போது பார்த்தேன்.
இப்படி திரையில் நான் பார்த்து வியந்த ஒரு நடிகர் தான் சூர்யா. இதே நேரு ஸ்டேடியத்தில் நான் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இருக்கிறேன். தற்போது சூர்யாவின் 45 திரைப்படத்தை நான் இயக்க இருப்பதை நினைத்து மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். இதற்கு முக்கிய காரணம் சூர்யா சார் தான். அவர் என் கதையை கேட்டு என்மீது வைத்த நம்பிக்கையால் தான் இது சாத்தியமானது.
சூர்யா 45
சோசியல் மீடியாவில சூர்யா 45 போஸ்டர் வெளியிடப்பட்டது. அப்போது பலரும் என்னிடம் What are you cooking bro என்று கேட்டு வருகின்றனர். அவர்களுக்கு எல்லாம் ஒன்று சொல்லிக் கொள்கிறேன். சூர்யா 45 படம் பயங்கரமாக மாஸாக சமைத்து அடுத்த வருடம் உங்களிடம் தரப்படும். அதற்கு நான் கேரண்டி என விமர்சனங்களுக்கு பதிலளித்தார்.
பின் தொடர்ந்து பேசிய ஆர்.ஜே. பாலாஜி, முன்னதாக பேசிய போஸ் வெங்கட் சார், சூர்யாவை அரசியலுக்கு வரவேண்டும் என அழைப்பு விடுத்தார். அவருடைய விருப்பத்தில் எனக்கு சில கருத்து முரண் உள்ளது.
சூர்யா அரசியல்வாதி தான்
நான் சூர்யாவின் ரசிகன் என்பதால் இந்த இடத்தில் பதிவு செய்கிறேன். ஒரு அரசியல்வாதி என்பது வெறும் தேர்தலில் நிற்பது மட்டும் அல்ல. ஒரு தெருவில் மரம் விழுந்து விட்டால், அதை 4 பேராக சென்று அப்புறப்படுத்தி எடுத்துப் போடுபவரும் ஒரு அரசியல்வாதி தான். மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்று சிறிய எண்ணம் தோன்றி அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டால் அவரும் அரசியல்வாதி தான்.
அந்தவகையில் சூர்யா சார் அரசியல்வாதியாக மாறி பல வருஷம் ஆகிறது. இந்த அரசியலே உங்களுக்கு போதும் சார். அகரம் அறக்கட்டளை மூலமாக பல பேரை படிக்கவைத்து சூர்யா சார் 25 வருடத்திற்கு முன்பே அரசியலுக்கு வந்துவிட்டார். இந்த அரசியலே அவருக்கு போதுமானது என ஆர்.ஜே. பாலாஜி பேசியுள்ளார்.
போஸ் வெங்கட் விருப்பம்
நிகழ்ச்சியில் பேசிய போஸ் வெங்கட், ஒரு சூப்பர் ஸ்டார், ஒரு நடிகர் ரசிகர்களை வழிநடத்த வேண்டும். எப்படி வழி நடத்த வேண்டும் என்றால், சூர்யா போன்று வழி நடத்த வேண்டும். தர்மம் செய்ய இப்போதே சொல்லிக் கொடுத்து விட வேண்டும். மக்களுடைய பிரச்சினையை எப்படி கவனிக்க வேண்டும் என்பதை தற்போதே சொல்லிக் கொடுத்து விட வேண்டும்.
நீங்கள் எப்படி வாழ வேண்டும் என்று சொல்லிக் கொடுத்து விட வேண்டும். எல்லாவற்றையும் மீறி உங்களுக்கு அறிவு கொடுத்து விட வேண்டும், படிப்பு கொடுத்து விட வேண்டும். அதன் பின்னர் அரசியலுக்கு வர வேண்டும் என சூர்யா அரசியலுக்கு வரவேண்டும் என அவரது விருப்பத்தை கூறினார்.
விஜய்யின் வரவு நல்வரவாக இருக்கட்டும்
முன்னதாக நிகழ்ச்சியில் பேசிய நடிகர் சூர்யா, இந்த நேரத்தில் துணை முதல்வராக பொறுப்பேற்று இருக்கும், உதயநிதி ஸ்டாலினுக்கு என்னுடைய வாழ்த்துக்கள். இன்னொரு நண்பரும் புதிய பாதையை தேர்ந்தெடுத்திருக்கிறார் அவருக்கும் அவருடைய வரவும் நல்வரவாகவே இருக்கட்டும் என நடிகர் விஜய்யின் அரசியல் வாழ்க்கைக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.