விஜய் வரவு நல்வரவாக இருக்கட்டும்..வெறுப்பை விதைச்சா நாம் அன்ப.. தரம் தாழ்ந்த விமர்சனங்களுக்கு”- சூர்யா!
துணை முதல்வராக பொறுப்பேற்று இருக்கும், உதயநிதி ஸ்டாலினுக்கும் என்னுடைய வாழ்த்துக்கள். இன்னொரு நண்பரும் புதிய பாதையை தேர்ந்தெடுத்திருக்கிறார் அவருக்கும் அவருடைய வரவும் நல்வரவாகவே இருக்கட்டும் - சூர்யா
சூர்யா நடிப்பில், சிறுத்தை சிவா இயக்கத்தில் நவம்பர் 14 ஆம் தேதி வெளியாக இருக்கும் திரைப்படம் கங்குவா. இந்தப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்று கொண்டிருக்கிறது.
நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய சூர்யா , “கிட்டத்தட்ட 27 வருடங்களாக உங்களுடன் என்னை தொடர்பில் வைக்க உதவிய இயக்குநர்கள், தயாரிப்பாளர்களுக்கு இந்த நேரத்தில் நான் நன்றி கூற கடமைப்பட்டிருக்கிறேன். ஞானவேல் எங்களுக்கு தாய் வீடு. அங்கிருந்துதான் ட்ரீம் வாரியர், 2டி, பொட்டன்ஷியல் என எல்லா தயாரிப்பு நிறுவனங்களும் உருவானது.
ஞானவேல் எங்களுக்கு தாய் வீடு போல
என்னை விட கார்த்தி சினிமாவிற்கு வர வேண்டும் என்று அதிகம் ஆசைப்பட்டது அவர்தான். என்னுடைய கெரியரிலும் நான் அடுத்த கட்ட பாய்ச்சலுக்கு செல்வதற்கு உதவியாக இருந்தது அவர்தான். மார்க்கெட் சொல்வதை அவர் கேட்கவே மாட்டார். மார்க்கெட்டை விட அதிகமான பட்ஜெட்டில் ஒரு படத்தை செய்வோம் என்று சொல்வார். எப்போதுமே துணிச்சலாக இருப்பார். என்ன அவ்வப்போது கொஞ்சம் எக்ஸ்ட்ராவாக பேசி விடுவார். இந்தப் படத்தை வெளிக்கொண்டு வருவதற்கு ஞானவேல் தன்னுடைய மண்டைக்குள் எவ்வளவு பெரிய போர்களை நடத்திக் கொண்டிருக்கிறார் என்பது எனக்கு நன்றாகவே தெரியும்.
இந்தப்படத்தில் வில்லனாக நடித்திருக்கும் பாபி என்னுடைய சகோதரராக மாறிவிட்டார் அவருடன் ஏன் இவ்வளவு நாட்களாக பயணிக்கவில்லை என்று நினைக்கிறேன். இந்தப் படத்தை காசு பணம், நேரம் உள்ளிட்டவற்றையெல்லாம் பார்த்து செய்தால் நிச்சயம் செய்ய முடியாது. ஒரு சிறந்த படைப்பை கொடுக்க வேண்டும் என்ற ஒற்றை நோக்கத்தில் எல்லோரும் அடிமை போலவே வேலை செய்தார்கள்.
அந்த மன்னிப்புதான்
இந்தப்படத்தின் ஒளிப்பதிவாளர் வெற்றி இந்தப்படத்தில் லைட்டே இல்லாமல் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். இரவில் கூட நெருப்பில் இருந்து கிடைக்கும் ஒளியை வைத்துதான் லைட்டிங் செய்தார். படப்பிடிப்பில் கிட்டத்தட்ட 3000 பேர் இருப்பார்கள். அவர்கள் அனைவர் மீதும் சிவாவின் கண்கள் இருக்க வேண்டும். அது அவ்வளவு எளிதான காரியம் அல்ல; சிறுத்தை சிவாவிற்கு என்னுடைய நன்றி.
தமிழ் எப்போது வளரும் என்றால், தமிழில் இருந்து புது புது வார்த்தைகள் வரும் போதுதான் வளரும். அதற்காக மதன் கார்க்கியும், அவரது குழுவும் அவ்வளவு உழைக்கிறார்கள். தமிழுக்காக அவ்வளவு செய்கிறார்கள். அவருக்கு என்னுடைய நன்றி விவேகா இந்த படத்தில் மன்னிப்பு என்ற பாடலை எழுதியிருக்கிறார். அந்த பாடல் எனக்கு மிகவும் நெருக்கமான பாடல். பூமி அழகாக இருப்பதற்கு காரணமே அந்த மன்னிப்பு தான்.
இந்தப்படத்தில் இடம் பெற்றிருக்கும் உலகம் எங்களுக்கு முழுக்க முழுக்க புதுமையானது. இந்த உலகத்தை முன்னர் பின்னர் நாங்கள் பார்த்தது கிடையாது. இந்த உலகத்தை எங்களுக்காக உருவாக்கிக் கொடுத்த ஆர்ட் டைரக்டர் மிலனை நாங்கள் பிரம்மாவாக பார்க்கிறோம்.
கலை மூலமாக நல்ல விஷயங்கள் வெளியே வரவேண்டும். அது சினிமா, எழுத்து என எதுவாக வேண்டுமென்றாலும் இருக்கலாம் அப்போது தான் இந்த சமூகம் மேம்படும் என்பதை நான் முழுமையாக நம்புகிறேன். மெய்யழகன் படத்தை எல்லோரும் மருந்து போல பார்க்கிறார்கள். வாழ்க்கையே விட்டுப்போச்சு என்று சொன்ன பலர் மெய்யழகன் படத்தை பார்த்து மனம் திரும்பி இருக்கிறார்கள்.
அதே போல, கிட்டத்தட்ட 27 வருடங்களுக்குப் பிறகு எனக்கு சிவா கொண்டு வந்திருக்கும் இந்த பொக்கிஷத்தில், நீங்கள் பார்க்காத காட்சிகள் நிச்சயமாக இருக்கும். தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்வதற்கான உழைப்பை இதில் நாங்கள் போட்டு இருக்கிறோம்
கங்குவா கொம்புத்தேன்
நிச்சயமாக விருந்து என்ற வார்த்தைக்குள் இந்தப்படத்தை அடக்க முடியாது. இது ஒரு தலை வாழை விருந்து. இது மலை உச்சியில் இருக்கும் ஒரு கொம்புத்தேன் என்று கூட சொல்லலாம். எட்டாத ஒரு கனியாகவும் இதை பார்க்கலாம். சிவாவோடு பயணித்ததில் இன்னும் நல்ல மனிதராக மாறி இருக்கிறேன். அவர் எனக்கு இரண்டு சக்திகளை கொடுத்திருக்கிறார். அதை நாம் இப்போது சொல்ல போகிறேன்.
ஒன்று, எது நடந்தாலும் எல்லாம் நன்மைக்கே நடக்கிறது என்று நினைக்க வேண்டும். அப்படி நினைக்கும் போது வாழ்க்கை மிகவும் நிம்மதியாக இருக்கும் என்பார். எங்களுக்கு இது ஒரு மிகப்பெரிய பட்ஜெட் படம். அது மட்டும் இல்லாமல் இது கடினமான படமும் கூட..அப்படி இருக்கும் பொழுது எது வேண்டுமென்றாலும் எப்போது வேண்டுமென்றாலும் எங்களது படப்பிடிப்பை நிறுத்துவதற்கான் வாய்ப்பு இருந்தது. ஆனால் சிவாவின் நல்லதே நடக்கும் என்ற எண்ணம் எங்களுக்கு அவ்வளவு உறுதியாக இருந்ததால் நாங்கள் நல்லபடியாக ஷூட்டிங்கை முடித்தோம்
இன்னொரு சக்தி என்னவென்றால் உங்களை யாராவது மனசு சங்கடப்படுத்த வேண்டும் என்று நினைத்தால், அவர்களுக்கு அந்த சக்தியை நீங்கள் அவருக்கு கொடுக்கக்கூடாது. ஆகையால் அவர்கள் என்ன வெறுப்பை விதைத்தாலும், நாம் அன்பை மட்டுமே பரிமாறுவோம். அதனாலேயே நாம் உயர்வோம் தரம் தாழ்ந்த விமர்சனங்களுக்கு பதில் அளித்து உங்களுடைய நேரத்தை நீங்கள் வீணாக்க வேண்டாம்.
என்னுடைய கேரியரில் ஏற்ற இறக்கங்கள் நிறைய இருந்திருக்கின்றன. சூரியன் உச்சத்திலையே இருந்தால் ஒரு புது விடியல் கிடைத்திருக்காது. ஒரு புது நாள் கிடைத்திருக்காது ஆகையால் எனக்கு வந்த அந்த இறக்கத்தை நான் சந்தோஷமாகத்தான் பார்க்கிறேன். அதன் மூலமாக நான் புது முயற்சிகளை எடுத்து இருக்கிறேன். அதன் மூலம் நான் மீண்டும் மேல் எழுந்து வந்திருக்கிறேன். ஒரு அம்பு பின்னோக்கி சென்றால் தான் முன்னோக்கி வேகமாக பாய்ந்து, அதனுடைய இலக்கை வெறித்தனமாக தாக்கும். இரண்டு வருடங்கள் அம்பு கொஞ்சம் பின்னால் சென்றது என்று வைத்துக் கொள்ளுங்கள்
இந்த நேரத்தில் துணை முதல்வராக பொறுப்பேற்று இருக்கும், உதயநிதி ஸ்டாலினுக்கும் என்னுடைய வாழ்த்துக்கள். இன்னொரு நண்பரும் புதிய பாதையை தேர்ந்தெடுத்திருக்கிறார் அவருக்கும் அவருடைய வரவும் நல்வரவாகவே இருக்கட்டும்” என்று பேசினார்.
டாபிக்ஸ்