MRG vs Kalaignar: ‘ரஜினியிடம் எம்ஜிஆர்-எஸ்எஸ்ஆர் பேசிய ஆடியோ டேப்’ முரசொலி கட்டுரையால் புதிய பூதம்!
Rajinikanth: ‘எனக்கு தெரிந்த ஒருவர், அவர் பெயர் கூற முடியாது. அவர் எனக்கு ஒரு ஆடியோ கேசட் கொடுத்து, ‘இதை யாரிடமும் கொடுக்க வேண்டாம், நீங்கள் மட்டும் கேட்ட பிறகு, என்னிடம் கொடுத்துவிடுங்கள்’ என்று கூறினார்’
திமுகவில் இருந்து எம்.ஜி.ஆர்., நீக்கப்பட்ட பிறகு, அவரும், லட்சிய நடிகர் எஸ்.எஸ்.ஆர்.,வும் பேசிய தொலைபேசி உரையாடல் கேசட் தன்னிடம் வந்ததாகவும், அதில் அவர்கள் பேசியதாக சில விசயங்களை, முரசொலியில் தான் எழுதிய கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார் ரஜினிகாந்த். கட்சியில் நீக்கப்பட்ட பின், எம்.ஜி.ஆர்.,யின் தொலைபேசி உரையாடல்கள் ஒட்டுக் கேட்கப்பட்டதா? என்கிற சந்தேகத்தை எழுப்பியுள்ளது. இதோ கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி, முரசொலியில் ரஜினி எழுதிய கட்டுரையில் கூறியிருப்பதாவது:
‘‘நான் கருணாநிதி உடன் நெருங்கிப் பழகியிருக்கிறேன். அவர் எந்த முடிவையும் எடுத்தோம், கவிழ்த்தோம் என்று எடுக்க மாட்டார். சம்மந்தப்பட்டவர்களிடம் பேசி, விசாரித்து தான் முடிவு செய்வார். அப்படியிருக்கும் போது, எம்.ஜி.ஆர்.,யை கட்சியில் இருக்கும் நீக்கும் முடிவை, பல பேரின் ஆலோசனையில் தான் எடுத்திருப்பார்.
எனக்கு தெரிந்த ஒருவர், அவர் பெயர் கூற முடியாது. அவர் எனக்கு ஒரு ஆடியோ கேசட் கொடுத்து, ‘இதை யாரிடமும் கொடுக்க வேண்டாம், நீங்கள் மட்டும் கேட்ட பிறகு, என்னிடம் கொடுத்துவிடுங்கள்’ என்று கூறினார். 1972 ம் ஆண்டு, கட்சியை விட்டு எம்.ஜி.ஆர்., கட்சியை விட்டு நீக்கப்பட்ட பின், அவருக்கும் எஸ்.எஸ்.ராஜேந்திரனுக்கும் நடந்த தொலைபேசி உரையாடல் அது.
‘அண்ணே.. ஏதோ கெட்ட நேரம், அவசர அவசரமாக என்னென்னமோ நடந்து விட்டது. வருங்காலத்தில் கழகத்திற்கு இதனால் பெரிய இழப்பு ஏற்படும். வேறு யாரும் இல்லாமல் நீங்கள் இருவர் மட்டும் ஒரு பொது இடத்தில் சந்தித்து மனம் விட்டு பேசினால், எல்லாம் சரி ஆகிடும். கருணாநிதியிடம் நான் பேசுகிறேன், எனக்காக இதை செய்யுங்கள்’ என்று எஸ்.எஸ்.ராஜேந்திரன் கூறிவார்.
அதற்கு எம்.ஜி.ஆர்., ‘இல்லை தம்பி.. என்னுடைய விசுவாசிகள் எனக்காக போராட்டங்கள் செய்து, என்னுடைய அபிமானிகள் என்று அடையாளம் காட்டிக் கொண்டுவிட்டார்கள். நான் திரும்பி கட்சியில் சேர்ந்தால், என்னுடைய அபிமானிகளை முந்தைய மாதிரி கட்சியில் பார்க்க மாட்டார்கள். அவர்களை தனிமைப்படுத்துவார்கள். அவர்கள் உதிரிப்பூக்கள் ஆகிவிடுவார்கள். அவர்களுக்காக நான் தனிக்கட்சி ஆரம்பிக்க வேண்டும். எனக்கு வேறு வழியில்லை. தப்பாக நினைத்துக் கொள்ளாதே’ என்று எம்.ஜி.ஆர்., பேச அந்த உரையாடம் முடிந்திருக்கும்.
அதன் பின் எம்.ஜி.ஆர்., அதிமுகவை உருவாக்கினார். அதன் பின், யாரெல்லாம் எம்.ஜி.ஆர்.,யை கட்சியில் இருந்து நீக்கச் சொன்னார்களோ, அவர்கள் எல்லாம் எம்.ஜி.ஆர்., பக்கம் போனார்கள். அதனால் கருணாநிதியின் இதயம் எவ்வளவு வேதனையில் துடித்திருக்கும்?
எதையும் தாங்கும் இதயம் என்று, இவரைப்பார்த்து தான் அண்ணா சொன்னாரோ? எவ்வளவு வேதனைகள், சங்கடங்கள், ஏமாற்றங்கள், துரோகங்கள் என அத்தனையும் தாண்டி தொண்டர்களுக்கு அவர் எழுதிய ஆயிரக்கணக்கான கடிதங்கள், கட்டுரைகள், வசனங்கள், சுற்றுப்பயணங்கள், மேடை பேச்சுகள், 13 ஆண்டுகள் ஆட்சியில் இல்லை என்றாலும் தனியாளாக கட்சியை கட்டுக்கோப்பாக வழிநடத்தி, மீண்டும் ஆட்சியை பிடித்தது ஒரு மாபெரும் புரட்சி.
அவரைப்பற்றி எழுதினால், எழுதிக் கொண்டே போகலாம். அவருடைய இந்த நூற்றாண்டில் அவரை நினைத்து அவருடன் கழித்த எத்தனையோ தருணங்களை ஞாபகப்படுத்தி, அவர் வாழ்ந்த காலத்தில் நானும் வாழ்கிறேன், அவருடைய இதயத்தில் எனக்கென்று தனி இடம் இருந்தது. அதனால் தான், எந்த ஒரு விழாவிலும் அவர் அருகில் என்னை அமர வைத்து மகிழ்வார் என்பதை நினைக்கும் போது, எனக்கு பெருமையாக இருக்கிறது,’’
என்று கட்டுரையில் ரஜினி எழுதியுள்ளார்.