சபரிமலையில் பாடலாம்..பூசை நன்றாக நடக்கும் "I Am Sorry Iyyappa..அறிவு புகட்டி அனுப்பப்பா" - நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் நக்கல்
இதைப்போன்ற கருத்தாழமுள்ள பாடல்களை சபரிமலை அருகிலேயே மேடையிட்டு பாடினால் பூசை சிறப்பாக நடக்கும். எல்லா மொழி பக்தர்களும் கேட்டு 'பரிசளிப்பார்கள்' அல்லவா? என்று ஐ யம் சாரி ஐயப்பா பாடல் குறித்து நடிகர் எம்.எஸ். பாஸ்கர் விமர்சித்துள்ளார்.
தென்தமிழகத்தில் ஐயப்பன் சீசன் களைகட்ட தொடங்கியிருக்கும் நிலையில், சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து வயதினரும் விரதம் இருந்து வருகிறார்கள். இதையடுத்து இருமுடி கட்டி கேரளா மாநிலம் சபரிமலையில் இருக்கும் ஐயப்பன் கோயிலில் சாமி தரிசனமும் செய்கிறார்கள்.
இந்த நேரத்தில் கடந்த 2018இல் பிக் பாஸ் பிரபலமும், கானா பாடகியுமான இசைவாணி பாடிய ஐ ஏம் ஸாரி ஐயப்பா என்ற பாடல் சமூக வலைத்தளங்களில் வைரலானது. இதைத்தொடர்ந்து இந்த பாடலுக்கு பல்வேறு தரப்பிலிருந்து எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில், பாடலை பாடிய இசைவாணியை கைது செய்ய கோரி போலீசில் புகாரும் அளிக்கப்பட்டது.
இந்த பாடலுக்கு திரைபிரபலங்கள் பலரும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தமிழ் சினிமாவின் மூத்த குணச்சத்திர நடிகரான எம்.எஸ். பாஸ்கர், இசைவாணி பாடிய பாடலை விமர்சித்துள்ளார்.
இதுதொடர்பாக எம்.எஸ். பாஸ்கர் தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, ”நான் நடிகர் எம்.எஸ்.பாஸ்கர். சமீபத்தில் இசைவாணி அவர்கள் பாடியிருந்த 'ஐயாம் சாரி ஐயப்பா' பாடல் கேட்டேன்! சுவாமி ஐயப்பனிடம் மன்னிப்பு கேட்டு பாடத் தொடங்கிய விதம் அருமை, நல்ல குரல் வளம். ஆடிக்கொண்டே பாடிய ஸ்டைல் அற்புதம்! ஒரே ஒரு குறை! பாடல் தெளிவாக கேட்காத அளவுக்கு வாத்தியங்களின் ஓசை அதிகம்.
பூசை சிறப்பாக இருக்கும்
இதைப்போன்ற கருத்தாழமுள்ள பாடல்களை சபரிமலை அருகிலேயே மேடையிட்டு விஷு, மகரஜோதி போன்ற விசேஷ நேரங்களில் பாடுவது இன்னும் சிறப்பாக இருக்கும்! இவர்களுக்கும் 'பூசை' சிறப்பாக நடக்கும்! நான் சிறுவனாக இருந்த போது எனது மூத்த சகோதரர் சபரிமலைக்கு இருமுடி கட்டி, வாய்க்கரிசி வாங்கி செல்வதை கண்டிருக்கிறேன்.
அதே போல் இவர்களும் உறவினர்கள் நண்பர்களிடம் வாய்க்கரிசி வாங்கிக் கொண்டு சென்று இசை நிகழ்ச்சி நடத்தலாம்! பாடல் எழுதியவரையும் அறிமுகப்படுத்தலாம். இப்படிப்பட்ட அருமையான பாடலை தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் என எல்லா மொழிகளிலும் பாடலாம்.
அறிவு புகட்ட அனுபப்பபா
எல்லா மொழி பக்தர்களும் கேட்டு 'பரிசளிப்பார்கள்' அல்லவா? யார் வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் பாடலாம். என்ன ஒன்று. ஐயன் ஐயப்பன் இதை 'நிந்தா ஸ்துதி'யாக ஏற்றுக்கொள்வார்! அவர் வாகனமாகிய புலி ஏற்றுக் கொள்ளுமா என்று தெரியவில்லை! 'ஐயாம் சாரி ஐயப்பா. அறிவு புகட்டி அனுப்பப்பா,” என்று கூறியுள்ளார்.
ஐயப்ப பக்தர்களை புண்படுத்துவதாக புகார்
"ஐ யம் சாரி ஐயப்பா” என இசைவாணி பாடியிருக்கும் இந்த பாடல் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வந்த நிலையில், ஐயப்ப பக்தர்கள் உணர்வை புண்படுத்தும் வகையில் இருப்பதாக கண்டனங்கள் எழும்பியுள்ளன.
இந்த பாடல் இந்துக்கள் மனதை புண்படுத்தும் விதமாகவும், பிற மதங்களுக்கு இடையே கலவரத்தை தூண்டும் விதமாகவும் இந்த பாடல் அமைந்துள்ளதாகக் கூறி, ஓசூர் காவல் நிலையத்தில் சிவசேனா கட்சியினர் புகார் அளித்துள்ளனர்.
அதேபோல், கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அனைத்து ஐயப்ப பக்தர்கள் சங்கத் தலைவர் செல்வராஜ் தலைமையில் 50க்கும் மேற்பட்ட ஐயப்ப பக்தர்கள், "ஐயப்ப சுவாமி குறித்தும், பக்தர்கள் மேற்கொள்ளும் விரதங்கள் குறித்தும் கொச்சைப்படுத்தும் வகையில் கானா பாடகி இசைவாணி மற்றும் நீலம் கலாச்சார மையம் பாடல் ஒன்றை வெளியிட்டுள்ளனர். இது, கடவுள் நம்பிக்கை உள்ளவர்களின் மனங்களைப் புண்படுத்தும் வகையிலும், பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்தும் வகையிலும் உள்ளது. எனவே, கானா பாடகி இசைவாணி, நீலம் கலாச்சார மையத்தைச் சேர்ந்த இயக்குநர் பா.ரஞ்சித் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து, நடவடிக்கை எடுக்க வேண்டும்” என மேட்டுப்பாளையும் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளனர்.
இந்த பாடலை பாடியபோது பாடகி இசைவாணி தனது கழுத்தில் சிலுவையுடன் கூடிய டாலர் அணிந்திருந்தார் எனவும், ஐயப்ப பக்தர்களின் நம்பிக்கையை சீர்குலைக்கும் விதமாக நடந்துள்ளார் என கூறியும் எதிர்ப்புகள் கிளம்பின. அத்துடன் இசைவாணி, நீலம் பண்பாட்டு மையம், பாடல் உருவாக்கிய The Casteless Collectiveக்கு தொடர்ந்து மிரட்டல்கள் விடுக்கப்படுகின்றன.
டாபிக்ஸ்