தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Kamal Haasan Speech: ‘தேவர்மகன் ரீவைண்ட்;உதயநிதி மீதான கோபம்; மாரி அரசியல்; அண்ணன் வடிவேலு’ - கமல் மாஸ் பேச்சு!

Kamal haasan speech: ‘தேவர்மகன் ரீவைண்ட்;உதயநிதி மீதான கோபம்; மாரி அரசியல்; அண்ணன் வடிவேலு’ - கமல் மாஸ் பேச்சு!

Kalyani Pandiyan S HT Tamil
Jun 02, 2023 07:53 AM IST

அவர்களின் குரல் இப்போதுதான் கேட்க ஆரம்பித்து இருக்கிறது. இது மாரி அரசியல் என்று சொல்கிறார்கள். மாண்புமிகு அமைச்சரே… இது நம் அரசியல்.

கமல்ஹாசன் பேச்சு
கமல்ஹாசன் பேச்சு

ட்ரெண்டிங் செய்திகள்

“உயிரே உறவே தமிழே... பல மேடைகளில் படத்தை நாம் வாழ்த்துவோம். ஏன் என்றால் படத்தை நாம் பார்த்திருக்க மாட்டோம். படம் நன்றாக வர வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் சொல்லி விட்டுச் செல்வோம்.

கமல்ஹாசன்
கமல்ஹாசன்

இந்தப்படத்தை நான் படம் பார்த்து விட்டேன். இந்தப்படம் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்பது என்னுடைய ஆசை. என் நட்புக்காக மட்டும் நான் இதைச் சொல்லவில்லை. இதில் இருக்கும் குரல் கேட்கப்பட வேண்டியது. இது மாரியின் குரல் என்று அவர் நினைத்துக் கொண்டிருக்கிறார். உண்மையில் அவரைப்போல கோடிக்கணக்கான பேர் இருக்கிறார்கள்.

அவர்களின் குரல் இப்போதுதான் கேட்க ஆரம்பித்து இருக்கிறது. இது மாரி அரசியல் என்று சொல்கிறார்கள். மாண்புமிகு அமைச்சரே… இது நம் அரசியல். அப்படித்தான் இருக்க வேண்டும். இந்தியா எந்த வழியில் செல்ல வேண்டும் என்பதை நிர்ணயிக்கும் தலைவரை நாம் தேர்ந்தெடுக்க வேண்டும். அதற்கு இது மாதிரியான படங்கள் வரவேண்டும். இந்த மாதிரியான படத்தை உதயநிதி தேர்ந்தெடுத்ததற்காக அவருக்கு முதலில் பாராட்டுகள்.

 

எனக்கு ஒரு சின்ன வருத்தம். நீங்கள் என்னுடைய படம் செய்வீர்கள் என்று எதிர்பார்த்தேன். பரவாயில்லை இதுவும் என்னுடைய படம்தான். என்னை பொருத்தவரை இது என்னுடைய அரசியலும் தான். இந்தப்படம் வெற்றி பெறுவதற்கான பல காரணங்கள் இருக்கின்றன. குறிப்பாக கதாபாத்திரங்களுக்கு நடிகர்களை அவர் தேர்வு செய்திருக்கும் விதம். தம்பி வடிவேலு என்று சொல்வதா? இல்லை.. அண்ணன் என்று சொல்வதா..? நடிப்பிலும் அவர் அண்ணன் தான்.. இந்தப்படத்தில் அவர் மாமன்னாக மாறி இருக்கிறார்.

 

கமல்ஹாசன் பேச்சு
கமல்ஹாசன் பேச்சு

எனக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது. இவரை ஆரம்ப காலங்களில் ரசித்த ரசிகர்களுள் நானும் இளையராஜாவும் ஒருவர்கள். ‘தேவர் மகன்’ படத்தில் இவரை தேர்ந்தெடுக்கும் பொழுது ஒல்லியாக இருக்கிறாரே என்று கேட்டனர். ஆனால் அந்த படத்தின் கிளைமாக்ஸில் அவர் வெளிப்படுத்திய நடிப்பு.. உண்மையில் சொல்லப்போனால் என்னுடைய நடிப்பையும் அவர் அந்த இடத்தில் தாங்கிப் பிடித்தார் என்று தான் சொல்ல வேண்டும். அந்த காட்சி இன்றும் பேசப்படுவதற்கான காரணம்.. ‘நான் ஏற்றுக்கொள்கிறேன் ஐயா’ என்று அவர் நடித்த விதம்.. அதற்கு நான் ‘போய் படிங்கடா’ என்ற சொல்வதற்கு இப்படியான ஒரு அழுகுரல் தேவைப்பட்டது.

கீர்த்தி சுரேஷ் அழகாக இருக்கிறார் என்று சொன்னார்கள். அது மேக்கப் போட்டுக் கொண்டால் வந்துவிடும். அறிவாக இருப்பதுதான் கஷ்டம். அழகும் அறிவும் சேர்ந்து இருக்க வேண்டும். அது கீர்த்தி சுரேஷுக்கு வாய்த்து இருக்கிறது. இது போன்ற படங்களை நீங்கள் தேர்ந்தெடுத்து நடித்ததால் உங்களுக்கு அழகோடு அறிவும் இருக்கிறது என்பது நிரூபிக்கப்பட்டு விட்டது. ரஹ்மான் அவர்களுக்கு மாரி செல்வராஜ் நிறைய இடம் கொடுத்திருக்கிறார். அவர் ஒரு கலக்கு கலக்குவதற்கு ஒரு பெரிய மேடையை அமைத்துக் கொடுத்திருக்கிறீர்கள். படத்தில் எமோஷனலான காட்சிகள் நிறைய இருக்கின்றன;கோபத்தை வரவழைக்கும் காட்சிகள் நிறைய இருக்கின்றன.

இந்த உரையாடல் நடக்க வேண்டிய உரையாடல். ‘பரியேறும் பெருமாள்’ படத்தில் இருந்து நான் மாரி செல்வராஜை பார்த்துக் கொண்டிருக்கிறேன். எதிர்தரப்பு என்று ஒருவரை நிர்ணயம் செய்து கொள்ளாமல், இது நடக்கிறது.. நிஜம் என்று அவர் படம் எடுக்கிறார். எதிர் தரப்பினருக்கு கூட சமமான ஒரு இடத்தை மாரி செல்வராஜ் கொடுப்பது அவரது சம நிலையை காட்டுகிறது. இது மிகவும் முக்கியமானது.

நம் பக்கத்தில் கோபம் மட்டும் இருந்தால் போதாது நியாயம் இருக்க வேண்டும். அந்த நியாயத்தை செயல்படுத்த உதவியாக நின்ற அமைச்சர் உதயநிதிக்கு நன்றி. அமைச்சர்..அமைச்சர்..என்று நான் சொல்வது அவர் என்னுடைய படத்தை செய்யவில்லை என்ற கோபத்தில் சொல்கிறேன்.

அவர் அமைச்சரானாலும் இதே போன்று பல தேர்வுகளில் அவர் மாற்றங்களை செய்வார் இன்று நம்புகிறேன். ஏ ஆர் ரஹ்மானின் இசைக்கு மூன்று தலைமுறைகள் மயங்கி கிடக்கிறது. பேட்டன் என்று ஒன்றை சொல்வார்கள். அதை ஏ ஆர் ரஹ்மான் தாண்டிக் கொண்டே இருக்கிறார்.

அவரே தன்னுடைய விமர்சகராக இருந்து அதை செய்து கொண்டிருக்கிறார். பயமில்லாமல்,பதட்டமில்லாமல், கர்வம் இல்லாமல் அதை அவர் தொடர்ந்து செய்து கொண்டே இருக்கிறார். விழாவை தலைமை தாங்குகிறேன் என்றெல்லாம் சொன்னார்கள். நான் தாங்குகிறேன் என்னுடைய தோளில்..இந்தப்படத்தின் வெற்றி தமிழ் சினிமாவின் ரசிகர்களின் ரசனையை தரத்தை நமக்குச் சொல்லும். ஒரு சவாலாக கூட இதை நீங்கள் எடுத்துக் கொள்ளலாம். சமூக நீதி சார்ந்த உரையாடல் இந்த சமூகத்தில் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்க வேண்டும். அப்போதுதான் நாம் ஒரு நல்ல தலைவரை விட்டு செல்வோம்” என்று அவர் பேசினார்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்