இது எல்லாத்துக்கும் நான் தான் பொறுப்பு.. இதெல்லாம் மாறும்.. வலியை பகிர்ந்த துல்கர் சல்மான்
ஒரு படம் தோல்வி அடைந்தால் அது முற்றிலும் என்னைடய பொறுப்பு தான் என நடிகர் துல்கர் சல்மான் கூறியுள்ளார்.
மலையாளம், தமிழ், தெலுங்கு சினிமா ரசிகர்களின் விருப்ப நாயகனாக இருப்பவர் துல்கர் சல்மான். வித்தியாசமான கதைகளின் மூலம் சினிமா பிரியர்களுக்கான ஹீரோவாக இருந்த இவர், சீதா ராமம் திரைப்படத்தின் மூலம் மக்களின் மனம் கவர்ந்த நாயகனாக முற்றிலும் மாறிவிட்டார்.
லக்கி பாஸ்கர்
இந்திய மொழி திரைப்படங்கள் அனைத்திலும் கவனத்தை செலுத்தி வரும் துல்கர் சல்மான், மலையாளம், தமிழ், தெலுங்கு மொழிகளில் நேரடி திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.
இந்நிலையில், துல்கர் சல்மான் தற்போது தெலுங்கு இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் லக்கி பாஸ்கர் எனும் திரைப்படத்தில் நடித்துள்ளார். தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு வரும் அக்டோபர் 31ம் தேதி படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், அவர் படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வருகிறார்.
சாதாரண மனிதனின் கதை
ஒரு அழகான குடும்பத்தில் பணம் சம்பாதிக்கும் ஒரே நபர் குறித்த கதை தான் லக்கி பாஸ்கர். ஒரு சாதாரண மனிதனின் வாழ்க்கையை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்த குடும்பப் படத்தில் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக மீனாட்சி சௌத்ரி நடித்துள்ளார்.
பல மோசடிகளால் பாதிக்கப்பட்டவர்களின் உண்மைக் கதையை அடிப்படையாக வைத்து இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது என படக்குழு முன்னதாக அறிவித்துள்ளது.
தோல்வி என்னுடைய பொறுப்பு
இந்த சமயத்தில், லக்கி பாஸ்கர் திரைப்படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் துல்கர் சல்மான் பங்கேற்று பேசினார். அப்போது, ஒரு படத்தின் தோல்வி என்பது முற்றிலும் என்னுடைய பொறுப்பு தான். அதை நான் ஏற்றுக் கொள்கிறேன் எனக் கூறியுள்ளார்.
துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான கிங் ஆஃப் கோதா படம் மக்களிடம் அதிகளவு விளம்பரப்படுத்தப்பட்டது. ஆனால், அந்தப் படம் எதிர்பார்த்த அளவு மக்களை ஈர்க்கவில்லை. இதனால், விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் தோல்வியையே சந்தித்தது.
துல்கர் சல்மானின் நண்பர் அபிலாஷ் ஜோஷி கிங் ஆஃப் கோதா திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகம் ஆனார். நண்பருக்கான அந்தப் படத்தில் நடித்த துல்கர் சல்மான் அவரே படத்தை தயாரிக்கவும் செய்தார்.
இந்தப் படத்தின் தோல்வி குறித்து கேள்வி எழுப்பியபோது தான் அவர், படத்தின் தோல்விக்கு தானே முழுப் பொறுப்பு என்றும், படத்தின் இயக்குநர் அபிலாஷ் அவரது அடுத்த படத்தில் வெற்றி இயக்குநராக மாறுவார் எனக் கூறினார்.
வாழ்க்கையில் பொருந்தும் படம்
முன்னதாக லக்கி பாஸ்கர் படம் குறித்து பேசிய துல்கர் சல்மான், இந்தத் திரைப்படத்தில் கிரே எனும் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளேன். இதில் நல்லவனாகவும் இல்லாமல், கெட்டவனாகவும் இல்லாமல் இருக்கும் நபராக நடித்துள்ளேன். ஒவ்வொரு நடிகர்களும் இது போன்ற கேரக்டர்களில் நடிக்க விரும்புவார்கள். ஏனென்றால் இது உங்கள் சொந்த குணத்தை வெளியே காட்ட வாய்ப்பு அளிக்கிறது. இதன் மூலம் சரி மற்றும் தவறுகளைப் புரிந்துகொள்ளலாம். இந்த படத்தில் வரும் பாஸ்கர் கதாபாத்திரம் அனைவரின் வாழ்க்கையிலும் பொருந்தும் என்றார்.
4 மொழிகளில் வெளியீடு
நீண்ட நாட்களுக்கு பிறகு என்னுடைய படம் திரைக்கு வருகிறது. இந்தப் படம் 4 மொழிகளில் வெளியாகிறது. 4 மொழிகளிலும் டப்பிங் செய்வதற்கு 40 நாள் ஆகும். 40 நாட்களும் இருட்டில் அமர்ந்தே பேசினேன். அதனால் எனக்கு 4 முறை படத்தில் நடித்தது போன்ற ஒரு அனுபவம் கிடைத்தது என்றார்.
டிரைலரில் வருவது என்னுடைய குரல் இல்லை, ஆனால் படம் வெளியாகும் போது படத்தில் என்னுடைய குரல் வரும். என் வாழ்க்கையே லக்கி தான். எனக்கு பிறந்த வீடும் லக்கி தான் எனக் கூறினார். மேலும் என் அப்பா 'பாஸ்கர் ராஸ்கல்' என்ற படத்தில் நடித்திருந்தார். அதனால் இந்தப் படத்தின் பெயரை கேட்டதும் எனக்கு மிகவும் பிடித்துப் போனது என்றார்.
டாபிக்ஸ்