Andhra Mess: ரவுடிகளுக்கு கிடைக்கும் பணப்பை.. கண்காணாத ஊரில் தஞ்சமாகும் ரவுடிகளின் பின் வாழ்க்கையே ’ஆந்திரா மெஸ்’
Andhra Mess: ரவுடிகளுக்கு திடீரென கிடைக்கும் பணப்பை மற்றும் கண்காணாத ஊரில் தஞ்சமாகும் ரவுடிகளின் பின் வாழ்க்கையை சொன்ன ’ஆந்திரா மெஸ்’ திரைப்படம் வெளியாகி ஆறு ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.
Andhra Mess: 2018ஆம் ஆண்டு, ஜூன் 22ஆம் தேதி, முழுக்க முழுக்க கதை மற்றும் விறுவிறுப்பான திரைமொழியை மட்டுமே நம்பி வெளிவந்த திரைப்படம், ஆந்திரா மெஸ். ஆனால், இப்படம் 2015ஆம் ஆண்டு எடுக்கப்பட்டுவிட்டது.
இப்படத்தில் ராஜ் பரத், தேஜஸ்வினி, பூஜா தேவரியா, ஏ.பி. ஸ்ரீதர், மதிவாணன் ராஜேந்திரன், ஆர். அமரேந்திரன் ஆகிய சின்ன சின்ன படங்களில் முன்பு நடித்து, ஒரு பிரேக்கிற்கு காத்திருந்த நடிகர் பட்டாளம் நடித்து இருந்தது.
ஆந்திரா மெஸ் திரைப்படத்தின் கதை என்ன?
பெரிய குற்றப் பின்னணி பணிகளை செய்யும் ரவுடியாகத் திகழ்பவர், தேவராஜ். இவருக்கு ஒரு வீட்டில் இருந்து, ஒரு கைப்பையைத் திருடும் பணியை சிலர் ஒப்படைக்கின்றனர். பெரிய ரவுடியான தேவராஜ், இதை தன் விசுவாசிகளான வரது, ரத்னா, ரிச்சி மற்றும் சேது ஆகிய நால்வரிடம் நம்பி ஒப்படைக்கின்றார். வரதுவுக்கு, ஒரு காதலி இருந்தால், ஆனால் வரதுவுக்கு யாரும் இல்லை என்ற ஒரு காரணத்தைச் சுட்டிக்காட்டி, அவரை பிரேக் அப் செய்துவிட்டாள். அந்த காதல் தோல்வியில் இருக்கும்போதுதான், வரதுவுக்கு இந்தப் பணி ஒப்படைக்கப்படுகிறது. அப்போது அந்தப் பணியின்போது, அந்த கைப்பையை கண்டுபிடிக்கும், வரது, அதனை திறந்துபார்க்கும்போது கோடிக்கணக்கில் பணம் இருப்பதை அறிகிறார். இதுதான் தான் பணக்காரராக சரியான நேரம் என்பதை உணர்கிறார்.
இதைத் தொடர்ந்து வரது மற்றும் அவரது கூட்டாளிகளான ரத்னா, ரிச்சி, சேது ஆகிய நால்வரும் யாரும் கண்டறியாத ஒரு கிராமத்துக்குப் பயணப்படுகின்றனர்.
அப்போது அந்த கிராமத்தில் வாழ்ந்து வரும் ஜனார்த்தனனிடம், இந்த நால்வரும் தஞ்சம் அடைகின்றனர். வயதில் மூத்தவரான ஜனார்த்தனன் ஒரு காலத்தில் ஜமீன்தாரராக இருந்தவர். தற்போது தனது மனைவி பாலாவுடன் வாழ்ந்து வருகிறார். ரத்னா, ரிச்சி, சேது மற்றும் வரது ஆகிய நால்வரில், ரத்னாவுக்கு, ஜமீன்தாரின் மனைவி பாலா மீது ஈர்ப்பு வருகிறது. சிறிதுநாட்கள் கழித்து ஜமீன்தாரின் மனைவி பாலாவுக்கும், ரத்னா மீது ஈர்ப்பு வருகிறது. அப்போது இருவரும் நெருங்கும் தருவாயில், ரிச்சியின் காதலி அரசி, அந்த இடத்தில் என்ட்ரி கொடுக்கிறார். அரசி, அந்த கும்பலுக்கும் ரிச்சிக்கும் இடையே பிரச்னை உண்டு செய்துவிட்டுவிடுகிறார். இதனால், இருவருக்கும் பிரேக் அப் ஆகிறது.
இவர்கள் இருக்கும் இடத்தை மோப்பம் பிடித்து வரும் தேவராஜ், இடையில் விபத்தில் மாட்டி முடங்கிப் போகிறார். இதனைத் தொடர்ந்து ஜனார்த்தனன் இறந்துவிட, பாலா - ரத்னாவின் திருமணத்தைத் தாண்டிய உறவு, அதிகாரப் பூர்வ அங்கீகாரமான மண உறவில் முடிவடைகிறது. ஜமீன்தார் ஜனார்த்தனனின் சொத்தில் இருவரும் சேர்ந்து ஆந்திரா மெஸ் தொடங்குகிறார்கள். மீதியிருப்பவர்கள் அந்த உணவகத்தை நடத்த உதவுகின்றனர். படம் முடிவடைகிறது.
ஆந்திரா மெஸ் படத்தில் நடித்தவர்கள் விவரம்:
ஆந்திரா மெஸ் படத்தில் பாலாவாக தேஜஸ்வினியும், அரசியாக பூஜா தேவரியாவும் நடித்துள்ளனர். தேவராஜ் ஆக வினோத் முன்னாவும், ரத்னாவாக ராஜ் பரத்தும், வரதுவாக ஏ.பி.ஸ்ரீதரும், ரிச்சியாக மதிவாணன் ராஜேந்திரனும், சேதுவாக பாலாஜி மோகனும் நடித்திருக்கின்றனர். ஜமீன்தார் ஜனார்த்தனனாக ஆர். அமரேந்திரனும் நடித்திருந்தனர்.
ஆந்திரா மெஸ் திரைப்படத்தின் தொழில் நுட்பக்குழுவினர்:
ஆந்திரா மெஸ் திரைப்படத்தின் மூலம் விளம்பரப் படங்களை இயக்கிக் கொண்டிருந்த ‘ஜெய்’, இப்படத்தின் மூலம் சினிமாவில் இயக்குநர் ஆக அறிமுகம் ஆனார். ஆனால், படத்தில் நேர்கோட்டில் பயணிக்கும் கதை, சுவாரஸ்யம் இல்லாத திரைக்கதையால் இப்படம் போதுமான வெற்றியைப் பெறவில்லை. படத்தின் ஒளிப்பதிவு பணியை முருகேஷ் ஞானேஷ் செய்திருந்தார். படத்தில் மிகவும் ரசிக்கப்பட்ட பகுதி என்றால் ஒளிப்பதிவு தான், இப்போது பார்த்தாலும் ஒரு இண்டர்நேஷனல் மேக்கிங் ஃபீலைத் தருகிறது. இசையமைப்பாளர் பிரசாந்த் பிள்ளை, பின்னணி இசையில் உறுத்தல் இல்லாத இசையினை வழங்கியிருப்பார். இப்படத்தை ஷோபோட் ஸ்டுடியோஸ் சார்பில், நிர்மல் கே.பாலா தயாரித்து இருந்தார்.
படம் வெளியாகி ஆறு ஆண்டுகள் ஆனாலும், ஒளிப்பதிவைக் கற்றுக்கொள்ள நினைப்பவர்கள் இந்தப் படத்தை ஒருமுறை பார்க்கலாம்.
டாபிக்ஸ்