Mamata Banerjee Vs Modi: ’பாஜக 200ஐ தாண்டாது! இந்தியா கூட்டணி 300ஐ தாண்டும்!’ அடித்து சொல்லும் மம்தா! இதுதான் காரணமாம்!
’Mamata Banerjee Vs Modi: பாஜக 200 இடங்களை தாண்டாது என்றும், இந்தியா கூட்டணி 315 இடங்களை தாண்டும் என்றும் மம்தா பானர்ஜி கூறி உள்ளார்!’
மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் ஆட்சிக்கு வரமாட்டார் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறி உள்ளார்.
மேற்கு வங்க மாநிலம் நாடியாவில் நடந்த பேரணியில் பேசிய மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, சந்தேஷ்காலி விவகாரம் குறித்து பாரதிய ஜனதா கட்சி பொய்யை பரப்புவதாக கூறினார்.
மக்களவைத் தேர்தலில் ஒரே உத்தரவாதம் மோடி மீண்டும் ஆட்சிக்கு வர மாட்டார் என்பதுதான். இந்தியா கூட்டணி 295 முதல் 315 இடங்களையும், பாஜக அதிகபட்சமாக 200 இடங்களையும் கைப்பற்றும் என்றும் அவர் தெரிவித்தார்.
இது தொடர்பாக பிடிஐ செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில், பாஜகவும், பிரதமரும் பொய்யை பரப்பி வருகின்றனர். 'உத்தரவாத பாபு' (மோடியை குறிப்பிடுகிறார்) மேற்கு வங்க மாநிலத்தை இழிவுபடுத்துகிறார். உண்மை வெளிவரும் போது தொலைக்காட்சி சேனல்களை அவற்றைக் காட்ட வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறார்கள். அவர்கள் உண்மையை மறைக்க முயற்சிக்கின்றனர். மாநிலத்தின் பெண்களை களங்கப்படுத்த பாஜக சதி செய்கிறது" என மம்தா பானர்ஜி கூறி உள்ளார்.
மம்தா பானர்ஜியை குற்றம்சாட்டி பேசிய நரேந்திர மோடி
கடந்த ஞாயிற்றுக்கிழமை மேற்ங்கு வங்க மாநிலத்தில் உள்ள பாரக்பூரில் நடந்த தேர்தல் பேரணியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, மம்தா பானர்ஜியின் கட்சி திரிணாமுல் காங்கிரஸ் தனது கடந்த கால தவறான செயல்களை மறைக்க முயற்சிப்பதாக குற்றம்சாட்டினார்.
"சந்தேஷ்காலியின் சகோதரிகள் மற்றும் தாய்மார்களுடன் திரிணாமுல் காங்கிரஸ் என்ன செய்துள்ளது என்பதை நாம் அனைவரும் பார்த்தோம். முதலில் குற்றவாளிகளை காப்பாற்ற போலீசார் முயன்ற நிலையில், தற்போது திரிணாமுல் காங்கிரஸ் புதிய விளையாட்டை தொடங்கி உள்ளது. அடக்குமுறையாளரின் பெயர் ஷாஜகான் ஷேக் என்பதற்காக சந்தேஷ்காலியின் சகோதரிகளை திரிணாமுல் காங்கிரஸ் குண்டர்கள் மிரட்டுகிறார்கள். சட்ட நடவடிக்கைகளில் இருந்து அவரை காப்பாற்றவும், பாதுகாக்கவும் அவர்கள் தங்களால் முடிந்தவரை முயற்சி செய்கிறார்கள். திரிணாமுல் காங்கிரஸைக் கண்டு பயப்பட வேண்டாம்" என்று மோடி கூறினார்.
சந்தேஷ்காலி விவகாரம் - வெளியான வீடியோக்கள்!
உள்ளூர் பாஜக தலைவர் ஒருவர் சந்தேஷ்காலியில் பல பெண்களை வெற்று காகிதங்களில் கையெழுத்திட வைத்ததாகவும், பின்னர் அவை திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை புகார்களாக நிரப்பப்பட்டதாகவும், போராட்டங்களில் பங்கேற்க பெண்களுக்கு பணம் வழங்கப்பட்டதாகவும் கூறும் பல வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வெளிவந்தன. இந்த வீடியோக்களின் நம்பகத்தன்மையை பிடிஐ செய்தி நிறுவனத்தால் சுயாதீனமாக சரிபார்க்க முடியவில்லை.
நாடாளுமன்றத் தேர்தல் 2024:
இந்தியாவில் உள்ள 543 மக்களவைத் தொகுதிகளுக்கான தேர்தல் கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெற்று வருகிறது.
முதல் கட்ட தேர்தல் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 தொகுதிகளில் நடந்து முடிந்தது.
இரண்டாம் கட்ட தேர்தல் கடந்த ஏப்ரல் 26ஆம் தேதியும், மூன்றாம் கட்ட தேர்தல் கடந்த மே 7ஆம் தேதியும், மே 13ஆம் தேதி அன்று நான்காம் கட்ட தேர்தலும் நடந்து முடிந்தது.
வரும் மே 20ஆம் தேதி அன்று 5ஆம் கட்ட தேர்தலும், மே 25ஆம் தேடி அன்று 6ஆம் கட்ட தேர்தலும், ஜூன் 1ஆம் தேதி அன்று 7ஆம் கட்ட தேர்தலும் நடைபெற உள்ளது.
வரும் ஜூன் மாதம் 4ஆம் தேதி அன்று பதிவு செய்யப்பட்ட அனைத்து வாக்குகளும் எண்ணப்பட்டு, முடிவுகள் அன்றே அறிவிக்கப்பட உள்ளது.