தமிழ் செய்திகள்  /  Elections  /  Former Aiadmk Mp Kc Palaniswami Comments On Sasikala-eps Birth Dates Comparison

EPS: ’வசமாக சிக்கிய எடப்பாடி!’ தன்னைவிட வயதில் பெரியவரா சசிலா! கோர்த்துவிட்ட கேசிபி!

Kathiravan V HT Tamil
Mar 29, 2024 05:46 PM IST

“அதிமுகவை தன் குடும்பச்சொத்து ஆக்குவது தான் EPS-ன் விருப்பமாக உள்ளது என கேசி பழனிசாமி புகார்”

சசிகலா மற்றும் ஈபிஎஸ்
சசிகலா மற்றும் ஈபிஎஸ்

ட்ரெண்டிங் செய்திகள்

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி அன்று ஒரே கட்டமாக நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் நாடாளுமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்து உள்ளது. 

தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் கடந்த மார்ச் 20ஆம் தேதி தொடங்கி மார்ச் 27 ஆம் தேதி முடிவடைந்தது. மார்ச் 28ஆம் தேதி வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற்றது. வேட்புமனுக்களை திரும்பப் பெற மார்ச் 30ஆம் தேதி கடைசி நாள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அன்று மாலையே இறுதி வேட்பாளர் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட உள்ளது. தேர்தலில் பதிவான வாக்குகள் வரும் ஜூன் 4ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன. 

திமுக, அதிமுக, பாஜக ஆகிய கட்சிகளின் தலைமையிலான கூட்டணியும், நாம் தமிழர் கட்சியும் 40 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தி தேர்தல் பணிகளை தொடங்கி உள்ளனர். 

திமுக இளைஞரணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் தனது பரப்புரையில் எய்ம்ஸ் செங்கலை காண்பித்து பரப்புரை செய்து கொண்டிருந்தார். 

திருச்சியில் நடைபெற்ற பிரச்சாரக்கூட்டத்தில் பேசிய ஈபிஎஸ், “நாடாளுமன்றத்திற்கு சென்று செங்கலை காட்ட முடியுமா?, ஸ்கிரிப்ட மாத்தப்பா” என கூறி இருந்தார்.

இதற்கு பதில் அளித்து பேசிய உதயநிதி ஸ்டாலின், “நான் கல்ல காட்டுறன்; ஆனால் ஈபிஎஸ் பல்லை காட்டுகிறார்” என்று கூறி மதுரை எய்ம்ஸ் அடிக்கல் நாட்டு விழா அன்று பிரதமர் மோடி உடன் சிரித்துக் எடப்பாடி பழனிசாமி இருக்கும் புகைப்படத்தை காட்டி எதிர்ப்பு தெரிவித்து இருந்தார். 

இதற்கு பதிலடி தரும் வகையில் தூத்துக்குடியில் நடந்த கூட்டத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் பிரதமர் நரேந்திர மோடி உடன் இருக்கும் படத்தையும், போதை பொருள் கடத்தல் வழக்கில் கைதாகி சிறையில் உள்ள ஜாபர் சாதிக் உடன் உதயநிதி ஸ்டாலின் இருக்கும் புகைப்படங்களையும் காட்டி உதயநிதிக்கு பதிலடி கொடுத்து இருந்தார். 

இதற்கு எதிர்வினையாக சசிகலாவின் காலில் எடப்பாடி பழனிசாமி விழும் புகைப்படத்தை காட்டி உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் செய்தார். 

இன்றைய தினம் மதுரை வந்திருந்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம் இது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அவர், ”பெரியவர்கள் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்குவதில் தவறில்லை” என கூறி இருந்தார்.

இந்த நிலையில் சசிலா மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோரின் பிறந்த தேதிகளை ஒப்பிட்டு அதிமுக முன்னாள் எம்பி கேசி பழனிசாமி ட்வீட் செய்துள்ளர். அதில், எடப்பாடி பழனிசாமி பிறந்த தேதி (20.03.1954) , சசிகலா பிறந்த தேதி (18.08.1954). சசிகலா EPS-ஐ விட இளையவர்.

எந்த பொதுத்தேர்தலை சந்தித்து @EPSTamilNadu முதல்வரானார்? எந்த தொண்டர்கள் வாக்களித்து பொதுச்செயலாளர் ஆனார்? இரண்டும் இல்லையே.

போட்டியிடுபவர்கள் யாரும் மிட்டா மிராசு அல்ல சாதாரண தொண்டர்கள் என்று கூறும் @EPSTamilNadu, 600 கோடி சொத்து உள்ள, மூன்று மாதங்களுக்கு முன் பாஜகவில் இருந்து வந்து அதிமுகவில் இணைந்த ஈரோடு வேட்பாளரிடம் எவ்வளவு வாங்கிக்கொண்டு சீட்டு கொடுத்தார்? ஜெயலலிதா அம்மாவால் ராவணோடு கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ராவணனின் பினாமி நாமக்கல் வேட்பாளர் தமிழ்மணிக்கு எதற்கு சீட்டு கொடுத்தார்? பல தொகுதிகளில் காண்ட்ராக்டர்களும் , கமிசன் ஏஜென்ட்களும் , வேறு கட்சியில் இருந்து சமீபத்தில் மாறிவந்தவர்களுக்கு தான் சீட்டுகொடுக்கப்பட்டுள்ளது.

ஒன்றுபட்ட_அதிமுக உருவாக்க வேண்டும் என்பது தான் தொண்டர்கள் விருப்பம். ஆனால் அதிமுகவை தன் குடும்பச்சொத்து ஆக்குவது தான் EPS-ன் விருப்பமாக உள்ளது. எதற்கு தொண்டர்கள் மீது பழிபோடுகிறீர்கள் இன்றைய #அதிமுக வேட்பாளர்கள் களத்தில் திணறுவது அதிமுக ஒன்றுபட்டு இல்லை என்பதால் தான் அது உங்கள் சுயநலத்தின் காரணமாக உங்களுக்கு புரியவில்லை. தேர்தல் முடிவுகள் அதை உங்களுக்கு உணர்த்தும் என கேசி பழனிசாமி கூறி உள்ளார். 

 

WhatsApp channel