VCK Symbol: திருமாவளவனுக்கு பானை சின்னம் ஒதுக்கீடு! ரவிக்குமாருக்கு என்ன சின்னம் தெரியுமா?
'சிதம்பரத்தில் திருமாவளவனும், விழுப்புரத்தில் ரவிக்குமாரும் விசிக சார்பில் போட்டியிடுகின்றனர்’
நாடாளுமன்றத் தேர்தல் 2024
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி அன்று ஒரே கட்டமாக நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனுத்தாக்கல் மார்ச் 20ஆம் தேதி தொடங்கியது. வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் மார்ச் 27 ஆகும். மார்ச் 28ஆம் தேதி வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறும் நிலையில், வேட்புமனுக்களை திரும்பப் பெற இன்று கடைசிநாள் ஆகும். பதிவு செய்யப்பட்ட வாக்குகள் வரும் ஜூன் 4ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன.
விழுப்புரம்! சிதம்பரத்தில் விசிக போட்டி!
திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு சிதம்பரம் மற்றும் விழுப்புரம் நாடாளுமன்றத் தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சிதம்பரம் தொகுதியில் அக்கட்சியின் தலைவர் திருமாவளவனும், விழுப்புரம் தொகுதியில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் ரவிக்குமாரும் வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்.
உதயசூரியனா! பானையா!
கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலின் போதும் திமுக கூட்டணியிலேயே விசிக போட்டியிட்டது. அந்த தேர்தலில் விழுப்புரம் தொகுதியில் போட்டியிட்ட விசிக பொதுச்செயலாளர் ரவிக்குமார் திமுகவின் உதயசூரியன் சின்னத்திலும், சிதம்பரம் தொகுதியில் போட்டியிட்ட திருமாவளவன் பானை சின்னத்திலும் போட்டியிட்டு வெற்றி பெற்றனர்.
பல்வேறு மாநிலங்களில் போட்டி!
தற்போது நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலில் சொந்த சின்னமான பானை சின்னத்திலேயே விசிக போட்டியிட உள்ளதாக திருமாவளவன் கூறி இருந்தார். இதுமட்டுமின்றி கேரளா, ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களிலும் விடுதலை சிறுத்தைகள் கட்சி போட்டியிட உள்ளதாகவும் திருமாவளவன் கூறி இருந்தார்.
பானை சின்னம் தர மறுப்பு!
பல்வேறு மாநிலங்களில் விசிக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு பானை சின்னம் கேட்டு தேர்தல் ஆணையத்தில் விண்ணப்பம் செய்யப்பட்டது. ஆனால் விசிகவின் கோரிக்கையை தேர்தல் ஆணையம் நிராகரித்தது.
இந்த நிலையில் பானை சின்னம் கேட்டு யாரும் விண்ணப்பிக்காததால், அதை தங்கள் கட்சிக்கு ஒதுக்க வேண்டும் என டெல்லி உயர் நீதிமன்றத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் செய்யப்பட்ட மனுவில், மக்களவைத் தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு பானை சின்னம் ஒதுக்குவது தொடர்பான மனுவை பரிசீலித்து தேர்தல் ஆணையம் முடிவு எடுக்க டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது.
ஆனால் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு பானை சின்னம் ஒதுக்க இந்திய தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்துவிட்டது.
ஏற்கெனவே விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் வழங்கப்பட்டிருந்த மனுவிற்கு பதிலாக, புதிய மனுவை தேர்தல் ஆணையத்தில் வழங்க வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது.
பானை சின்னத்தை பெற்றது எப்படி?
இந்த நிலையில் சிதம்பரம் தொகுதியில் போட்டியிடும் திருமாவளவனும் மற்றும் சுயேட்சை வேட்பாளர் ஒருவரும் பானை சின்னம் கேட்டு வேட்புமனுத்தாக்கல் செய்து இருந்தனர். ஆனால் சுயேட்சை வேட்பாளரின் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், எந்த வேட்பாளரும் பானை சின்னத்தை கேட்காத காரணத்தால் சிதம்பரம் தொகுதியில் போட்டியிடும் திருமாவளவனுக்கு பானை சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. விழுப்புரம் தொகுதியில் போட்டியிடும் ரவிக்குமாருக்கு பானை சின்னம் ஒதுக்கீடு செய்யப்படுமா என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.