தமிழ் செய்திகள்  /  தேர்தல்கள்  /  Vck's Pot Symbol: பானை சின்னம் கிடையாது..திருமாவளவனுக்கு ஷாக் கொடுத்த தேர்தல் ஆணையம்!

VCK's Pot Symbol: பானை சின்னம் கிடையாது..திருமாவளவனுக்கு ஷாக் கொடுத்த தேர்தல் ஆணையம்!

Karthikeyan S HT Tamil
Mar 27, 2024 07:34 PM IST

Lok Sabha Election 2024: மக்களவை தேர்தலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு பானை சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்துள்ளது. ஏற்கனவே மதிமுக கேட்ட பம்பரம் சின்னத்தையும் ஒதுக்க தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்திருந்தது.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு பானை சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையம் மறுப்பு.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு பானை சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையம் மறுப்பு.

ட்ரெண்டிங் செய்திகள்

கடந்த தேர்தலில் விழுப்புரம் தொகுதியில் உதயசூரியன் சின்னத்திலும், சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் பானை சின்னத்திலும் விடுதலை சிறுத்தைகள் கட்சி களமிறங்கி இரண்டிலும் வெற்றி பெற்றது. ஆனால் இந்த தேர்தலில் இரண்டு தொகுதிகளிலும் தனிச் சின்னத்தில் அதுவும் பானை சின்னத்தில் போட்டியிடுவது என விசிக முடிவு எடுத்தது. இதுதொடர்பாக கடந்த மாதமே பானை சின்னம் கேட்டு விடுதலை சிறுத்தைகள் கட்சி தேர்தல் ஆணையத்தை அணுகியது. ஆனால், இந்த கோரிக்கை மீது எவ்வித முடிவும் எடுக்கப்படவில்லை.

பானை சின்னம் மறுப்பு

இந்த நிலையில் பானை சின்னம் கேட்டு யாரும் விண்ணப்பிக்காததால், அதை தங்கள் கட்சிக்கு ஒதுக்க வேண்டும் என டெல்லி உயர் நீதிமன்றத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மக்களவைத் தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு பானை சின்னம் ஒதுக்குவது தொடர்பான மனுவை பரிசீலித்து தேர்தல் ஆணையம் இன்றே முடிவு எடுக்க டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில், மக்களவை தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு பானை சின்னம் ஒதுக்க இந்திய தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்துவிட்டது. ஏற்கெனவே விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் வழங்கப்பட்டிருந்த மனுவிற்கு பதிலாக, புதிய மனுவை தேர்தல் ஆணையத்தில் வழங்க வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதற்கிடையில், மதிமுக கேட்ட பம்பரம் சின்னத்தையும் ஒதுக்க தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

திருமாவளவன் பேட்டி

முன்னதாக, அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேட்புமனுவை தாக்கல் செய்த பின்னர் திருமாவளவன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறுகையில், தேர்தல் ஆணையம் சுதந்திரமாக இயங்குவதாகத் தெரியவில்லை. பாஜக கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளுக்கு உடனுக்குடன் சின்னங்களை ஒதுக்கி உள்ளது. எதிரணியில் இருப்பவர்களுக்கு இதுவரையில் சின்னத்தை ஒதுக்காமல் நிராகரித்துக் தேர்தல் ஆணையமே ஒருதலை பட்சமாக செயல்படுவது அதிர்ச்சி அளிக்கிறது. நேர்மையோடு இந்த தேர்தலை நடத்த வேண்டும். அப்பொழுது தான் ஜனநாயகம் காப்பாற்றப்படும். ஆகவே தேர்தல் ஆணையம் ஒரு சார்பு இல்லாமல் தேசிய அளவில் தேர்மையோடு இந்த தேர்தலை நடத்த வேண்டும். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை பாரதிய ஜனதா கட்சி பூஜ்யம் என்று எங்கள் கூட்டணியின் தலைவர் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே குறிப்பிட்டுள்ளார். ஆகவே தமிழ்நாட்டில் பாஜகவினர் என்ன சொன்னாலும் எடுபடாது. அவர்களின் முயற்சி வெற்றி பெறாது. தென்னிந்திய மாநிலங்களில் பாஜகவுக்கு கடுமையான பின்னடைவு ஏற்பட்டு தோல்வியை சந்திக்கும்." என்றார்.

நாடாளுமன்றத் தேர்தல் 2024:

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி அன்று ஒரே கட்டமாக நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனுத்தாக்கல் கடந்த மார்ச் 20ஆம் தேதி தொடங்கியது. வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் மார்ச் 27 ஆகும். நாளை அதாவது மார்ச் 28ஆம் தேதி வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறும் நிலையில், வேட்புமனுக்களை திரும்பப் பெற மார்ச் 30ஆம் தேதி கடைசி நாள் ஆகும். தேர்தலில் பதிவு செய்யப்பட்ட வாக்குகள் வரும் ஜூன் 4ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

WhatsApp channel