AIADMK Candidates : 16 பேர் கொண்ட அதிமுகவின் முதல் கட்ட வேட்பாளர் பட்டியல்.. புதுமுகங்களுக்கு அதிக வாய்ப்பு!
AIADMK Candidates Announcement : 16 பேர் கொண்ட அதிமுகவின் முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை அக்கட்சியின் பொதுச் செயலாளர் இபிஎஸ் அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி அன்று ஒரே கட்டமாக நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனுத்தாக்கல் மார்ச் 20ஆம் தேதியான நாளை மறுநாள் தொடங்குகிறது. வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் மார்ச் 27 ஆகும்.
மார்ச் 28ஆம் தேதி வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறும் நிலையில், வேட்புமனுக்களை திரும்பப் பெற மார்ச் 30ஆம் தேதி கடைசி நாள் ஆகும். பதிவு செய்யப்பட்ட வாக்குகள் வரும் ஜூன் 4ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன.
இந்நிலையில் அதிமுக நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் கூட்டணிக் கட்சிகள் குறித்தும், அதிமுக கூட்டணியில் போட்டியிடும் வேட்பாளர்கள் குறித்தும் தற்போது அறிவித்துள்ளனர். அதன்படி அதிமுக கூட்டணியில் தேமுதிக, புரட்சி பாரதம், புதிய தமிழகம், எஸ் டி பி ஐ, ஃபார்வேர்ட் பிளாக், பெருந்தலைவர் மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ளது.
அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டு வருகிறார். அதன்படி தற்போது 16 பேர் கொண்ட முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை அறிவித்துள்ளார்.
அதிமுக முதல் கட்ட வேட்பாளர் பட்டியல்
வடசென்னை - ராயபுரம் மனோ
தென்சென்னை - ஜெயவர்த்தன்
காஞ்சிபுரம் - ராஜசேகர்
அரக்கோணம் - ஏ.எல்.விஜயன்
கிருஷ்ணகிரி - ஜெயப்பிரகாஷ்
ஆரணி - கஜேந்திரன்
விழுப்புரம் - பாக்யராஜ்
சேலம் - விக்னேஷ்
நாமக்கல் - தமிழ்மணி
ஈரோடு - ஆற்றல் அசோக்குமார்
கரூர் - கே.ஆர்.எல்.தங்கவேல்
சிதம்பரம் - சந்திரஹாசன்
நாகை - சுர்ஜித் சங்கர்
மதுரை - சரவணன்
தேனி - நாராயணசாமி
ராமநாதபுரம் - ஜெயபெருமாள்
தேமுதிகவுக்கு 5 தொகுதி
அதிமுக கூட்டணி இடம் பெற்றுள்ள தேமுதிகவுக்கு 5 தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. புதிய தமிழகம் மற்றும் எஸ் டி பி ஐ கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதிமுக கூட்டணியில் புதிய தமிழகம் கட்சிக்கு தென்காசி தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அதிமுக பரப்புரை விவரம்
வரும் 18ஆவது மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரையை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வரும் மார்ச் 24ம் தேதி திருச்சியில் தொடங்குகிறார்.
முதல்கட்டமாக வரும் மார்ச் 30ஆம் தேதி வரை திருச்சி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, சிதம்பரம், நாமநாதபுரம், கன்னியாகுமரி, காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர் உள்ளிட்ட தொகுதிகளில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பரப்புரை மேற்கொள்கிறார்.
திருச்சி நாடாளுமன்றத்தொகுதியில், வரும் மார்ச் 24ஆம் தேதி மாலை 4 மணியளவில், நவலூர் குட்டப்பட்டு, வண்ணாங்கோயிலில் அதிமுக சார்பில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பரப்புரையில் ஈடுபடவுள்ளார்.
அதனைத் தொடர்ந்து, மார்ச் 26ஆம் தேதி, தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதியில், விவிடி சிக்னல், எம்.ஜி.ஆர் திடல், தூத்துக்குடி பகுதியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் ஈபிஎஸ் பங்கேற்கிறார். அதனைத் தொடர்ந்து, திருநெல்வேலி மக்களவைத் தொகுதியில் பரப்புரை மேற்கொள்ளும் எடப்பாடி பழனிசாமி, நெல்லையில் இரவு 7 மணியளவில், வாகையடிமுனையில் தேர்தல் பரப்புரை மேற்கொள்கிறார்.
அதன்பின், குமரி மக்களவைத் தொகுதியில் வரும் 27ஆம் தேதி மாலை 4 மணியளவில், நாகர்கோயில் நாகராஜா கோயில் திடலில், எடப்பாடி பழனிசாமி உரையாற்றுகிறார். அதன்பின், இரவு ஏழு மணி வாக்கில், சங்கரன்கோவிலில் 18ஆம் படி கருப்பசாமி கோயில் அருகில், தென்காசி அதிமுக வேட்பாளரை ஆதரித்து, எடப்பாடி பழனிசாமி பரப்புரை மேற்கொள்கிறார்.
அதேபோல், வரும் மார்ச் 28ஆம் தேதி, விருதுநகர் மக்களவைத் தொகுதியில் பரப்புரை மேற்கொள்ள சிவகாசிக்கும், ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் பரப்புரை மேற்கொள்ள ராமநாதபுரம் அரண்மனை வாசலுக்கு எடப்பாடி பழனிசாமி வருகை தருகிறார்.
அதன்பின், வரும் 29ஆம் தேதி, காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதியில் பரப்புரை மேற்கொள்ள மதுராந்தகம் செல்லும் எடப்பாடி பழனிசாமி, அதே நாளில், ஸ்ரீபெரும்புதூர் மக்களவைத் தொகுதியைச் சார்ந்த பல்லாவரத்தில் தேர்தல் பரப்புரை செய்கிறார்.
மேலும், வரும் மார்ச் 30ஆம் தேதி புதுச்சேரி மக்களவைத் தொகுதியிலும், கடலூர் மக்களவைத் தொகுதியிலும் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பரப்புரை மேற்கொள்கிறார்.
அதனைத் தொடர்ந்து, மார்ச் 31ஆம் தேதி, சிதம்பரம் மாலை 3.30வாக்கில், சிதம்பரம் பைபாஸில் தேர்தல் பரப்புரை செய்யும் எடப்பாடி பழனிசாமி, மாலை 5:30 மணி வாக்கில், மயிலாடுதுறையிலும், நாகப்பட்டினம் தொகுதிக்காக, இரவு 7:30 மணி வாக்கில் திருவாரூரிலும் பரப்புரை செய்கிறார்.