ADMK DMDK Allaiance: தேமுதிகவுக்கு 4+1 கிடைக்குமா? அதிமுகவுடன் அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தை தொடங்கியது!-parliamentary elections 2024 aiadmk has started alliance talks with dmdk - HT Tamil ,தேர்தல்கள் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  தேர்தல்கள்  /  Admk Dmdk Allaiance: தேமுதிகவுக்கு 4+1 கிடைக்குமா? அதிமுகவுடன் அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தை தொடங்கியது!

ADMK DMDK Allaiance: தேமுதிகவுக்கு 4+1 கிடைக்குமா? அதிமுகவுடன் அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தை தொடங்கியது!

Kathiravan V HT Tamil
Mar 01, 2024 05:53 PM IST

“மறைந்த தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்தின் மகன் விஜயபிரபாகரன் விருதுநகர் தொகுதியில் போட்டியிட கோரி மதுரை மாவட்ட தேமுதிக நிர்வாகிகள் சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இருந்தது”

அதிமுக - தேமுதிக இடையே அதிகாரப்பூர்வ தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தை தொடங்கி உள்ளது
அதிமுக - தேமுதிக இடையே அதிகாரப்பூர்வ தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தை தொடங்கி உள்ளது

வரும் ஏப்ரல்-மே மாதங்களில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இந்த மாதம் இரண்டாம் வாரத்திற்குள் நாடாளுமன்றத் தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் அறிவிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்த நிலையில் சென்னை சாலிகிராமத்தில் உள்ள மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் இல்லத்தில் அதிமுக உடன் தேமுதிக அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது. 

தேமுதிக சார்பில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், சுதீஷ், பார்த்தசாரதி ஆகியோர் பங்கேற்றுள்ளனர். அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தை குழுவில் இடம்பெற்றுள்ள முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி, கே.பி.அன்பழகன், பெஞ்சமின் ஆகியோர் பங்கேற்றுள்ளனர். 

தேமுதிக உடன் ஏற்கெனவே பாஜக மற்றும் அதிமுக கட்சிகள் சார்பில் மறைமுக கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்றதாக தகவல்கள் வெளியாகின.  இந்த நிலையில் கூட்டணி இறுதி வடிவம் பெற்றுள்ளதால் தற்போது அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தை நடைபெறுவதாக கூறப்படுகிறது. 

அதிமுக கூட்டணியில் 4 மக்களவை தொகுதிகளும், ஒரு மாநிலங்களவை தொகுதிகளும் வேண்டும் என தேமுதிக எதிர்பார்ப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 

கடந்த சில நாட்களுக்கு முன் நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் மக்களவை மற்றும் மாநிலங்களவை தொகுதிகள் உள்ளிட்ட 14 தொகுதிகளை தரும் கட்சிகள் உடன் மட்டுமே கூட்டணி என   தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அறிவித்து இருந்தார். 

அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், 14 தொகுதிகள் எனப்து மாவட்ட செயலாளர்கள் எதிர்பார்பே தவிர, எங்கள் எதிர்பார்ப்பது இல்லை என விளக்கம் அளித்திருந்தார். 

பாஜகவுடன் கூட்டணி வேண்டாம் என தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கருத்து தெரிவித்து இருந்தனர். இந்த நிலையில் தற்போது அதிமுகவுடன் அதிகாரப்ப்பூர்வ கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது. 

தேமுதிக சார்பில் விருதுநகர், கிருஷ்ணகிரி ஆகிய தொகுதிகளை விருப்ப தொகுதிகளாக கூறி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதிமுக சார்பில் திருச்சி, கடலூர் தொகுதிகளை தர அதிமுக முன் வந்துள்ள நிலையில் அதற்கு தேமுதிக மறுப்பு தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.  

மறைந்த தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்தின் மகன் விஜயபிரபாகரன் விருதுநகர் தொகுதியில் போட்டியிட கோரி மதுரை மாவட்ட தேமுதிக நிர்வாகிகள் சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இருந்தது.  இந்த நிலையில் விருதுநகர், கிருஷ்ணகிரி உள்ளிட்ட 4 தொகுதிகளை கேட்டு பெற தேமுதிக முனைப்பு காட்டுவதாக கூறப்படுகிறது.

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்கள், மக்களவைத் தேர்தல்கள், அதன் முடிவுகள் குறித்த அனைத்து செய்திகளையும் இந்தப்பிரிவில் பார்க்கலாம்.