தமிழ் செய்திகள்  /  Cricket  /  Ipl Throwback: Check Out The Winning Records Of Csk, Rcb For Past Seasons

IPL Throwback: மூன்று முறை நடந்த மிரட்டல் சம்பவம்! சிஎஸ்கே - ஆர்சிபி அணிகளில் யார் கெத்து? 16 சீசன்களின் பிளாஷ்பேக்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Mar 21, 2024 07:30 AM IST

ஐபிஎல் போட்டிகளில் அனல் பறக்கும் மோதலாக இருந்து வரும் சிஎஸ்கே - ஆர்சிபி இடையிலான போட்டியில் ஆதிக்கம் செலுத்தியது யார் என்பதும், அணிகள் வெற்றி பெற்ற போட்டிகள் குறித்தும் பிளாஷ்பேக்கை பார்க்கலாம்.

சிஎஸ்கே - ஆர்சிபி மோதல் பிளாஷ்பேக்
சிஎஸ்கே - ஆர்சிபி மோதல் பிளாஷ்பேக்

ட்ரெண்டிங் செய்திகள்

ஏற்கனவே தமிழ்நாடு - கர்நாடகா மாநிலங்களுக்கு இடையே காவிரி பிரச்னை நீண்ட காலமாக இருந்து வரும் நிலையில், அதை போன்றே இரு மாநிலங்களை அடிப்படையாக கொண்ட இந்த அணிகளுக்கு எதிராக நடைபெறும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியிலும் வார்த்தை பரிமாற்றங்களும், வாக்குவாதங்களும் சமூக வலைத்தளங்களில் அனல் பறக்கும்.

சிஎஸ்கே ஆதிக்கம்

சிஎஸ்கே - ஆர்சிபி அணிகளுக்கு இடையிலான மோதல்களில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியே ஆதிக்கம் செலுத்தி வந்துள்ளது. இதுவரை இரண்டு அணிகளும் மோதியிருக்கும் 31 போட்டிகளில் சிஎஸ்கே 20, ஆர்சிபி 10 போட்டிகளில் வெற்றி பெற்றிருக்கும் நிலையில், ஒரு போட்டியில் முடிவு கிடைக்கவில்லை.

ஐபிஎல் தொடங்கிய 2008 முதல் தற்போதைய சீசன் வரை ஆர்சிபிக்கு அணிக்கு எதிரான போட்டியில் எம்எஸ் தோனி கேப்டனாக செயல்பட்டுள்ளார். 2022 சீசனில் ஒரேயொரு போட்டியில் ரவீந்திர ஜடேஜா கேப்டனாக செயல்பட்டுள்ளார்.

அதேபோல் சிஎஸ்கேவுக்கு எதிரான போட்டியில் ஆர்சிபி அணியின் கேப்டனாக ராகுல் டிராவிட், அனில் கும்ப்ளே, விராட் கோலி, டூ பிளெசிஸ் ஆகியோர் செயல்பட்டுள்ளனர்.

ஐபிஎல் 2008 முதல் 2023 வரையிலான 16 சீசன்களில், 2016 மற்றும் 2017 தவிர்த்து சிஎஸ்கே அணி 14 சீசன்கள் விளையாடியுள்ளது. ஆர்சிபி அணி அனைத்து சீசன்களிலும் விளையாடியுள்ளது. இந்த இரு அணிகளும் விளையாடிய சீசன்களில் அணிகள் கடந்து வந்த பாதையை சிறிய பிளாஷ்பேக்காக பார்க்கலாம்

2008 சீசன்

முதல் முறையாக சிஎஸ்கே - ஆர்சிபி மோதிய போட்டி பெங்களருவில் நடைபெற்றது. இதில் சிஎஸ்கே 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சென்னையில் நடைபெற்ற இரண்டாவது போட்டி 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஆர்சிபி தக்க பதிலடி கொடுத்தது

வெற்றி கணக்கு சிஎஸ்கே 1, ஆர்சிபி 1

2009 சீசன்

ஐபிஎல் 2009 சீசன் தென் ஆப்பரிக்காவில் நடந்த நிலையில், போர்ட் எலிசபெத்தில் நடந்த முதல் போட்டியில் சிஎல்கே 92 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. டர்பனில் நடந்த இரண்டாவது போட்டியில் 2 விக்கெட் வித்தியாசத்தில் ஆர்சிபி வெற்றி பெற்றது.

இந்த சீசனில் முதல் முறையாக இரு அணிகளும் அரையிறுதி போட்டியில் மோதின. ஜோகன்னஸ்பெர்கில் நடந்த அந்த போட்டியில் ஆர்சிபி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு நுழைந்தது

வெற்றி கணக்கு சிஎஸ்கே 2, ஆர்சிபி 3

2010 சீசன்

பெங்களுருவில் நடந்த முதல் போட்டியில் சிஎஸ்கே 36 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. ஆர்சிபி அணி தனது உள்ளூர் மைதானத்தில் சிஎஸ்கே அணியை முதல் முறையாக இந்த போட்டியில் தான் வீழ்த்தியது. காயம் காரணமாக தோனி விளையாடாத நிலையில், சிஎஸ்கே அணிக்கு ரெய்னா கேப்டனாக செயல்பட்டார்.

சேப்பாக்கத்தில் நடந்த இரண்டாவது போட்டியில் சிஎஸ்கே அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் ஆர்சிபியை தனது உள்ளூர் மைதானத்தில் முதல் முறையாக வீழ்த்தியது.

வெற்றி கணக்கு சிஎஸ்கே 3, ஆர்சிபி 4

2011 சீசன்

இந்த சீசனில் நான்கு முறை இரு அணிகளும் மோதிக்கொண்டன. முதலில் சேப்பாக்கத்தில் நடந்த போட்டியில் சிஎஸ்கே 21 ரன்களில் வெற்றி பெற்றது. அதன் பின்னர் பெங்களுருவில் நடந்த போட்டியில் ஆர்சிபி 8 விக்கெட்டில் வென்றது.

இதைத்தொடர்ந்து வான்கடே மைதானத்தில் ஐபிஎல் போட்டிகளில் முதல் முறையாக நடைபெற்ற ப்ளேஆஃப் போட்டியில் ஆர்சிபியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி நேரடியாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.

சேப்பாக்கத்தில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் ஆர்சிபி அணியை 58 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற தொடர்ந்து இரண்டாவது முறையாக சிஎஸ்கே சாம்பியன் ஆனது

வெற்றி கணக்கு சிஎஸ்கே 6, ஆர்சிபி 5

2012 சீசன்

சேப்பாக்கத்தில் நடந்த முதல் போட்டியில் சிஎஸ்கே 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது . பெங்களருவில் நடைபெற இருந்த இரண்டாவது போட்டி டாஸுக்கு பின் மழை காரணமாக கைவிடப்பட்டது.

வெற்றி கணக்கு சிஎஸ்கே 7, ஆர்சிபி 5,

2013 சீசன்

சேப்பாக்கத்தில் நடந்த முதல் போட்டியில் சிஎஸ்கே 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பெங்களுருவில் நடந்த இரண்டாவது போட்டியில் ஆர்சிபி 24 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. மழை காரணமாக இந்தப் போட்டி 8 ஓவர் போட்டியாக நடந்தது

வெற்றி கணக்கு சிஎஸ்கே 8, ஆர்சிபி 6,

2014 சீசன்

இந்த சீசனில் சிஎஸ்கே அணியின் உள்ளூர் மைதானமாக சில போட்டிகள் தோனியின் சொந்த ஊரான ராஞ்சியில் நடைபெற்றது. இதையடுத்து 2014 சீசன் முதல் மோதலில் ஆர்சிபி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பெங்களுருவில் நடந்த இரண்டாவது மோதலில் சிஎஸ்கே 8 விக்கெட் வித்தியாசத்தில் ஆர்சிபியை வீழ்த்தியது

வெற்றி கணக்கு சிஎஸ்கே 9, ஆர்சிபி 7,

2015 சீசன்

இந்த சீசனில் இரு அணிகளும் மூன்று முறை மோதிக்கொண்டன. இதில் மூன்று போட்டிகளிலும் சிஎஸ்கே வெற்றியை தன் வசமாக்கியது.

பெங்களுருவில் நடந்த முதல் போட்டியில் 27 ரன்கள் வித்தியாசத்திலும், சேப்பாக்கத்தில் நடந்த இரண்டாவது போட்டியில் 24 ரன்கள் வித்தியாசத்திலும், ராஞ்சியில் நடந்த குவாலிபயர் 2 போட்டியில் 3 விக்கெட் வித்தியாசத்தில் சிஎஸ்கே அணி வெற்றியை தன் வசமாக்கியது.

வெற்றி கணக்கு சிஎஸ்கே 12, ஆர்சிபி 7,

2018 சீசன்

இரண்டு சீசன் தடைக்கு பிறகு 2018இல் கம்பேக் கொடுத்த சிஎஸ்கே, இந்த முறையும் இரண்டு போட்டிகளில் வெற்றியை பதிவு செய்தது. இந்த முறை சிஎஸ்கே அணியின் உள்ளூர் மைதானமாக புனே இருந்தது.

இதையடுத்து பெங்களுருவில் நடந்த முதல் போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்திலும், புனேவில் நடந்த இரண்டாவது போட்டியில் 63 விக்கெட் வித்தியாசத்தில் சிஎஸ்கே வெற்றி பெற்றது.

வெற்றி கணக்கு சிஎஸ்கே 14, ஆர்சிபி 7,

2019 சீசன்

இந்த சீசனில் முதல் போட்டியிலேயே இரு அணிகளும் மோதிக்கொண்ட நிலையில், சென்னையில் நடந்த முதல் போட்டியில் சிஎஸ்கே வெற்றி பெற்றது. பின் பெங்களுருவில் நடந்த இரண்டாவது போட்டியில் 1 ரன் வித்தியாசத்தில் ஆர்சிபி த்ரில் வெற்றியை பதிவு செய்தது.

நான்கு சீசன்களுக்கு பிறகும், 7 தொடர் தோல்விகளுக்கு பிறகும் சிஎஸ்கே அணிக்கு எதிராக வெற்றியை பெற்றது.

வெற்றி கணக்கு சிஎஸ்கே 15, ஆர்சிபி 8,

2020 சீசன்

கொரோனா பெருந்தொற்று காரணமாக இந்த சீசன் முழுவதும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றது. துபாயில் நடைபெற்ற முதல் போட்டியில் ஆர்சிபி 37 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை பெற்றது. துபாயில் நடந்த இரண்டாவது மோதலில் சிஎஸ்கே 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.\

இந்த சீசனில்தான் சிஎஸ்கே அணி முதல் முறையாக ப்ளேஆஃப் சுற்றுக்கு கூட தகுதி பெறாமல் வெளியேறியது

வெற்றி கணக்கு சிஎஸ்கே 16, ஆர்சிபி 9,

2021 சீசன்

சிஎஸ்கே நான்காவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்ற இந்த சீசனில் மீண்டும் ஆர்சிபி அணியை தொடர்ச்சியாக இரண்டு போட்டிகளில் வீழ்த்தியது. மும்பை வான்கடேவில் நடைபெற்ற முதல் போட்டியில் 69 ரன்கள் வித்தியாசத்திலும், ஷார்ஜா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடந்த இரண்டாவது மோதலில் 6 விக்கெட் வித்தியாசத்திலும் வெற்றியை பதிவு செய்தது.

வெற்றி கணக்கு சிஎஸ்கே 18, ஆர்சிபி 9,

2022 சீசன்

இந்த சீசனில் தோனி அணியில் இருக்கும்போதே புதிய கேப்டனாக ஜடேஜா நியமிக்கப்பட்டார். இவரது கேப்டன்சியில் தொடர் தோல்விகளை சந்தித்த சிஎஸ்கே அணி பெற்ற முதல் வெற்றியாக ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டி அமைந்தது. டிஒய் பாட்டீல் மைதானத்தில் நடந்த போட்டியில் 23 ரன்களில் சிஎஸ்கே வெற்றி பெற்றது.

பின்னர் புனேவில் நடைபெற்ற இரண்டாவது மோதலில் ஆர்சிபி 13 ரன்களில் வெற்றியை பதிவு செய்தது.

வெற்றி கணக்கு சிஎஸ்கே 19, ஆர்சிபி 10,

2023 சீசன்

கடந்த சீசனில் இரு அணிகளுக்கு இடையே ஒரேயொரு முறை மட்டுமே மோதல் நடைபெற்றது. பெங்களுருவில் நடந்த இந்த போட்டியில் சிஎஸ்கே 8 ரன்னில் வெற்றி பெற்றது.

வெற்றி கணக்கு சிஎஸ்கே 20, ஆர்சிபி 10,

இரு அணிகளுக்கு இடையிலான மோதல்களி மூன்று முறை ஆர்சிபியை சீசன் முழுமையாக வீழ்த்திய சம்பவம் செய்துள்ளது.

16 ஆண்டுகள் காத்திருப்பு

இந்த சீசனின் முதல் போட்டியில் சிஎஸ்கே - ஆர்சிபி அணிகள் மோத இருக்கும் நிலையில், இந்த போட்டி சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற இருக்கிறது. இங்கு ஐபிஎல் முதல் சீசனான 2008இல் தான் ஆர்சிபி வெற்றி பெற்றுள்ளது. அதன் பிறகு சென்னை சேப்பாக்கத்தில் வெற்றி பெறவே இல்லை. எனவே அந்த 16 ஆண்டு கால காத்திருப்புக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்கிற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

IPL_Entry_Point