தமிழ் செய்திகள்  /  Cricket  /  Check Out The Players Wins Man Of The Series Award From 2008 To 2023 Season

IPL Throwback: ஐந்து முறை சாம்பியன் சிஎஸ்கே வீரர்கள் ஒரு முறை கூட வெல்லாத விருது! இரண்டு முறை வென்ற வாட்சன், நரேன், ரசல்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Mar 15, 2024 06:00 AM IST

ஐபிஎல் தொடர் நாயகன் விருதுகளை கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர்கள் தலா 4 முறை வென்றுள்ளனர். சர்ப்பரைசாக சிஎஸ்கே வீரர்கள் ஒரு முறை கூட வென்றதில்லை.

ஐபிஎல் போட்டிகளில் தொடர் நாயகனை விருதை வென்றவர்கள் லிஸ்ட்
ஐபிஎல் போட்டிகளில் தொடர் நாயகனை விருதை வென்றவர்கள் லிஸ்ட்

ட்ரெண்டிங் செய்திகள்

அதிக ரன்கள், விக்கெட்டுகள், கேட்ச்கள், சிக்ஸர்கள், சதம் உள்பட ஒரு வீரர் அதிக செய்யும் விஷயங்களில் இருந்து மாறுபட்டு இருப்பதுடன், இந்த விருது வெல்லும் வீரர் சாம்பியன் கோப்பையை வெல்லும் அணிக்கு நிகரானதொரு பெருமையை பெறுவார். சுருக்கமாக சொல்வதென்றால் இந்த விருதை வெல்லும் வீரர் சாம்பியன் வீரராகவே பார்க்கப்படுகிறது.

அந்த வகையில் ஐபிஎல் தொடங்கிய 2008 முதல் 2023 வரையிலான 16 சீசன்களில் யாரெல்லாம் தொடர் நாயகன் விருதை வென்றார்கள் என்பதை பார்க்கலாம்

ஷேன் வாட்சன்

ஐபிஎல் முதல் சீசனான 2008இல், சாம்பியன் பட்டத்தை வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இடம்பிடித்திருந்த ஷேன் வாட்சன் பேட்டிங், பவுலிங் என தன் ஆல்ரவுண்ட் ஆட்டத்தால் இந்த விருதை வென்றார். அவர் 472 ரன்கள்,ஸ 17 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

அதேபோல் 2013 சீசனில் மீண்டும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக 543 ரன்கள், 13 விக்கெட்டுகளை வீழ்த்தி சிறப்பான பங்களிப்பை அளித்து இரண்டாவது முறையாக விருதை வென்றார்.

ஒரே அணிக்காக இரண்டு முறை இந்த விருதை வென்ற வீரர் என்ற பெருமையும் வாட்சன் பெற்றார்

ஆடம் கில்கிறிஸ்ட்

2009 சீசனில் சாம்பியன் பட்டத்தை வென்ற டெக்கான் சார்ஜர்ஸ் அணியின் கேப்டனும், விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனுமான ஆடம் கில்கிறிஸ்ட் இந்த சீசனில் 495 ரன்கள் அடித்திருந்த நிலையில், அணியை சிறப்பாக வழிநடத்தியதையும் கருத்தில் கொண்டு இந்த விருதை வென்றார்

சச்சின் டென்டுல்கர்

ஐபிஎல் முதல் இரண்டு சீசன்களில் சொதப்பிய மும்பை இந்தியன்ஸ் அடுத்தடுத்த சீசன்களில் செய்த சம்பவத்தை வரலாறு பேசும். அந்த வகையில் 2010 சீசனில் 618 ரன்கள் அடித்த சச்சின் டென்டுல்கர், தொடர் நாயகன் விருதை வென்றார்

கிறிஸ் கெய்ல்

2011 சீசனில் ருத்ரதாண்டவ ஆட்டத்தை வெளிப்படுத்திய கெய்ல் 608 ரன்கள் எடுத்ததோடு, பவுலிங்கிலும் 8 விக்கெட் வீழ்த்தி சிறப்பான பங்களிப்பு அளித்ததோடு தொடர் நாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டார்

சுனில் நரேன்

முதல் முறையாக ஒரு பவுலர் தொடர் நாயகன் விருதை வென்றது 2012 சீசனில்தான். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி சாம்பியன் பட்டம் வெல்ல தனது சுழல் மூலம் மாயாஜாலம் நிகழ்த்திய சுனில் நரேல் 24 விக்கெட்டுகளை கைப்பற்றி ஆட்ட நாயகன் விருதையும் தன் வசமாக்கி கொண்டார்.

2018 சீசனில் பவுலிங் மட்டுமில்லாமல் பேட்டிங்கிலும் ஜொலித்த நரேன் 357 ரன்கள், 17 விக்கெட்டுகளை வீழ்த்தி தொடர் நாயகன் ஆனார்

கிளென் மேக்ஸ்வெல்

பஞ்சாப் கிங்ஸ் அணியை தனது அதிரடி ஆட்டத்தால் முதல் முறையாக 2014 சீசனில் பைனல் வரை அழைத்து சென்ற ஆல்ரவுண்டர் கிளென் மேக்ஸ்வெல் 552 ரன்கள், ஒரு விக்கெட் எடுத்து தொடர் நாயகன் விருதையும் வென்றார்.

ஆண்ட்ரே ரசல்

ஒன் மேன் ஆர்மியாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆல்ரவுண்டர் ஆண்ட்ரே ரசல் சிறப்பான ஆட்டத்தை 2015 சீசனில் வெளிப்படுத்தி. 326 ரன்கள், 14 விக்கெட்டுகளை எடுத்து தொடர் நாயகன் ஆனார்

இதேபோல் 2019 சீசனிலும் ஒன் மேன் ஷோ நிகழ்த்திய ரசல் 510 ரன்கள், 11 விக்கெட்டுகளை வீழ்த்தி விருதையும் வென்றார்.

பென் ஸ்டோக்ஸ்

ரைசிங் புனே சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிக்காக விளையாடிய பென் ஸ்டோக்ஸ் 2017 சீசனில் 316 ரன்கள், 12 விக்கெட்டுகளை எடுத்தார். இவரது அணி பைனலில் தோல்வி அடைந்தாலும் சீசன் முழுக்க ஸ்டோக்ஸ் அளித்த பங்களிப்புக்காக தொடர் நாயகன் விருது அளிக்கப்பட்டது

ஜோப்ரா ஆர்ச்சர்

2020 சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இடம்பிடித்து தனது மிரட்டலான பவுலிங்கால் கலக்கிய ஜோஃப்ரா ஆர்ச்சர் பேட்டிங்கிலும் பங்களிப்பை தந்தார். 113 ரன்கள், 20 விக்கெட்டுகள் எடுத்த அவர் தொடர் நாயகன் விருதை வென்றார்

ஹர்ஷல் படேல்

2021 சீசனில் 32 விக்கெட்டுகளை வீழ்த்தி ஒரே சீசனில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் டுவெய்ன் பிராவோ சாதனையை சமன் செய்த ஆர்சிபி வீரர் ஹர்ஷல் படேல் தொடர் நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்

ஜோஸ் பட்லர்

மற்றொரு ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர் ஜோஸ் பட்லர் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தி 863 ரன்களை அடித்தார். நான்கு சதம், நான்கு அரைசதமும் அடித்தார். இதன் மூலம் 2022 சீசன் தொடர் நாயகனாவும் தேர்வானார்

சுப்மன் கில்

கடந்த சீசனில் பேட்டிங்கில் கில்லியாக கலக்கிய சுப்மன் கில் 890 ரன்கள் அடித்து, தொடர் நாயகன் ஆனார்.

ராஜஸ்தான் ராயல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆதிக்கம்

இந்த தொடர் நாயகன் விருதில் ராஜஸ்தான் ராயல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வீரர்கள் அதிகமாக ஆதிக்கம் செலுத்தியுள்ளனர். இரு அணிகளும் தலா நான்கு முறை இந்த விருதை வென்றுள்ளது.

அத்துடன் பேட்ஸ்மேன்களை காட்டிலும், ஆல்ரவுண்டர்கள் இந்த விருதை அதிகமாக வென்றிருக்கிறார்கள். சர்ப்ரைஸ் விஷயமாக 5 முறை சாம்பியன் பட்டத்தை வென்ற சிஎஸ்கே அணியை சேர்ந்த வீரர்கள் ஒரு முறை கூட தொடர் நாயகன் விருதை வென்றதில்லை.

IPL_Entry_Point