தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  விண்ணதிர ஓம் நமசிவாய கோஷங்களுடன் திருவானைக்காவல் தேரோட்டம் கோலாகலம்!

விண்ணதிர ஓம் நமசிவாய கோஷங்களுடன் திருவானைக்காவல் தேரோட்டம் கோலாகலம்!

Pandeeswari Gurusamy HT Tamil
Mar 23, 2023 01:10 PM IST

இன்று அதிகாலை சுவாமி, அம்மனுக்கு உற்சவர் மண்டபத்தில் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது

திருவானைக்காவல் தேரோட்டம்
திருவானைக்காவல் தேரோட்டம்

விழாவின் 5-ம் நாளான நேற்று மாலை சுவாமி, அம்மன் வெள்ளி ரிஷப வாகனத்தில் எழுந்தருளி, இரவில் தேரோட்டத்தின் முன்னோட்ட நிகழ்ச்சியாக சுவாமி, அம்மன் தெருவடச்சானில் வீதி உலா வந்தனர்.

விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று (வியாழக்கிழமை) காலை நடைபெற்றது. இன்று அதிகாலை சுவாமி, அம்மனுக்கு உற்சவர் மண்டபத்தில் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மகரலக்னத்தில் அதிகாலை 3.45 மணிக்கு உற்சவர்கள் ஜம்புகேஸ்வரர் பெரிய தேரிலும், அகிலாண்டேஸ்வரி அம்மன் மற்றொரு தேரிலும் எழுந்தருளினர்.

முன்னதாக விநாயகர், சுப்ரமணியர் சிறிய தேர் காலை 5.30 மணிக்கு வடம் பிடித்து இழுக்கப்பட்டு தேரோடும் வீதிகளில் வந்து நிலையை அடைந்தது. பின்னர் காலை 8 மணிக்கு ஜம்புகேஸ்வரர் சுவாமி தேரை பக்தர்கள் வடம்பிடித்து இழுத்தனர்.

மேல உள்வீதி, வடக்கு உள்வீதி, கீழ உள்வீதி, தெற்கு உள்வீதி அடங்கிய தேரோடும் நான்கு பிரகாரங்களில் சுற்றிவரும் தேர் மேல உள்வீதியும், தெற்கு உள்வீதியும் சந்திக்கும் இடத்திற்கு வந்த பின்னர் அம்மன் தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டது. அம்மன் தேர் சுவாமி தேருக்கு பின்னால் கொண்டு வந்து நிறுத்தப்பட்டது. அம்மன் தேருக்கு பின்னால் சண்டீகேஸ்வரர் சிறிய சப்பரத்தில் வந்து அருள்பாலித்தார்.

மீண்டும் பக்தர்களால் சுவாமி தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டு நிலையை வந்தடையும். பின்னர் அம்மன் தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டு நிலையை வந்தடையும்.

விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் உதவி ஆணையர் ரவிச்சந்திரன், கோவில் பண்டிதர்கள், அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் உபயதாரர்கள் செய்தனர்.

பாதுகாப்பு ஏற்பாடுகளில் மாநகர காவல் துறை ஆணையர் சத்யபிரியா தலைமையில் ஸ்ரீரங்கம் ஏசி உட்பட திரளான போலீசார் செய்திருந்தனர்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

WhatsApp channel

டாபிக்ஸ்