தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Bird Kavadi: காளியம்மன் கோயில் திருவிழா: பறவை காவடி எடுத்து ஊர்வலமாக வந்த பக்தர்கள்!

Bird Kavadi: காளியம்மன் கோயில் திருவிழா: பறவை காவடி எடுத்து ஊர்வலமாக வந்த பக்தர்கள்!

Karthikeyan S HT Tamil
Jun 04, 2023 11:46 AM IST

Kaliamman Temple Festival: தூத்துக்குடி மாவட்டம் எட்டையாபுரம் அருகே நடைபெற்ற காளியம்மன் கோயில் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

பறவை காவடி எடுத்து நேர்த்தி கடன் செலுத்திய பக்தர்கள்.
பறவை காவடி எடுத்து நேர்த்தி கடன் செலுத்திய பக்தர்கள்.

தூத்துக்குடி மாவட்டம் எட்டையாபுரம் அருகே அயன் கரிசல்குளம் கிராமத்தில் அமைந்துள்ளது ஸ்ரீ காளியம்மன் கோயில். இங்கு வைகாசி மாத கொடைத் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் மிக விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்தவகையில், இந்தாண்டுக்கான திருவிழாவானது கடந்த மாதம் 27 ஆம் தேதி அன்று முகூர்த்தகால் நட்டுதலுடன் தொடங்கியது. அன்றைய தினம் பக்தர்கள் காப்பு கட்டி விரதத்தை துவங்கினர்.

இதைத்தொடர்ந்து ஸ்ரீ காளியம்மனுக்கு ஒவ்வொரு நாளும் சிறப்பு அலங்காரங்கள் மற்றும் பூஜைகள் நடைபெற்று வந்தன. இந்தநிலையில் திருவிழாவின் இறுதி நாளான நேற்று (ஜூன் 3) சனிக்கிழமை மாலையில் அயன் கரிசல்குளத்தில் அமைந்துள்ள விநாயகர் கோயிலில் இருந்து பெண்கள் மேள தாளங்கள் முழங்க‌, பால்குடங்கள் மற்றும் அக்கினி சட்டி எடுத்து ஊர்வலமாக வந்து நேர்த்திகடன் செலுத்தி அம்மனை வழிபட்டனர். இதையடுத்து நடைபெற்ற தீமிதி திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு பூக்குழி இறங்கி தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.

அதேபோன்று, திருவிழாவையொட்டி விநாயகர் கோயிலில் இருந்து காளியம்மன் கோயில் வரை அலகு குத்தி பறவை காவடி எடுத்து வந்தும் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். அயன் கரிசல்குளத்தைச் சேர்ந்த பக்தர் ஒருவருக்கு விநாயகர் கோயில் அருகே வைத்து அலங்காரம் செய்து முதுகில் மற்றும் பிண்ணந் தொடையில் அழகு குத்தி அருள் இறக்கி 4 சக்கர வாகனத்தின் மேல்பகுதியில் பறவை பறப்பது போல அமைப்புடைய காவடியை செய்து, அதில் பறவை காவடி அழகு குத்தியவரை பறக்க வைப்பதுபோல கட்டி, பக்தர்கள் அக்கினிச்சட்டி ஏந்தி பக்தி பரவசத்துடன் கோயிலை வந்தடைந்தனர். இதில், அயன் கரிசல்குளம் மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை தரிசித்தனர்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

WhatsApp channel

டாபிக்ஸ்