தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Poorattathi Nakshatram: ’லட்சுமி கடாட்சத்தால் பணத்தை குவிப்பார்கள்!’ பூரட்டாதி நட்சத்திரத்தின் பலன்கள் இதோ!

Poorattathi Nakshatram: ’லட்சுமி கடாட்சத்தால் பணத்தை குவிப்பார்கள்!’ பூரட்டாதி நட்சத்திரத்தின் பலன்கள் இதோ!

Kathiravan V HT Tamil
Apr 27, 2024 02:31 PM IST

“Poorattathi Nakshatram: சுகவாசிகளான பூரட்டாதி நட்சத்திரக்காரர்கள், லட்சுமி கடாட்சம் கொண்டவர்களாக விளங்குவர். நேரத்திற்கு சாப்பிடுதல், நேரத்திற்கு தூங்குதல், அமைதியான குடும்ப வாழ்கை உள்ளிட்ட சுகங்கள் எளிதாக பூரட்டாதி நட்சத்திரக்காரர்களுக்கு கிடைக்கும்”

பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கான பலன்கள்
பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கான பலன்கள்

பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பொறுமை மிகுந்தவர்களாகவும், பெருந்தன்மை உள்ளவர்களாகவும் இருப்பார்கள். இவர்களுக்கு வாக்கு பலிதம் சக்தி இருக்கும். சமூகத்தில் பெரிய மனிதர்கள் தொடர்பு இவர்களுக்கு எப்போதும் இருக்கும். 

சுகவாசிகளான பூரட்டாதி நட்சத்திரக்காரர்கள், லட்சுமி கடாட்சம் கொண்டவர்களாக விளங்குவர். நேரத்திற்கு சாப்பிடுதல், நேரத்திற்கு தூங்குதல், அமைதியான குடும்ப வாழ்கை உள்ளிட்ட சுகங்கள் எளிதாக பூரட்டாதி நட்சத்திரக்காரர்களுக்கு கிடைக்கும். 

சிலர் தன்னை விட உயர்ந்த இடத்திற்கு செல்லும் போது, நாமும் முன்னேற வேண்டும் என்ற உத்வேகம் பூரட்டாதி நட்சத்திரக்காரர்களுக்கு எப்போதும் இருக்கும். 

எளியவர்களுக்கு உதவுவதில் அதிக ஆர்வம் காட்டும் இவர்கள், ஆசிரியர், பயிற்சியாளர் உள்ளிட்ட பணிகளில் ஆர்வம் காட்டுவார்கள்.

மனுஷ கணம் பொருந்தியதாக உள்ள பூரட்டாதி நட்சத்திரம், சத்வ குணங்களும், ரஜோதாமஸ குணங்களும் கலந்து இருக்கும். 

ஆண் நட்சத்திரமான பூரட்டாதியின் விலங்காக சிங்கம் உள்ளது. இவர்களுக்கான விருட்சமாக தேமா மரமும், இவர்களுக்கான பறவையாக உள்ளான் பறவையும் உள்ளது. 

பூரட்டாதி நட்சத்திரக்காரர்கள் தஞ்சாவூருக்கு அருகில் உள்ள திருவாணேஸ்வரர் கோயிலில் சென்று வழிபாடு நடத்த சிறப்புக்கள் கூடும். ஆனாலும் பூரட்டாதி நட்சத்திரக்காரர்கள் வசிப்பிடத்திற்கு அருகில் உள்ள சிவாலயத்தில் சிவபெருமானை வழிபாடு செய்தால் நன்மைகள் கிடைக்கும். 

பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு முதல் தசையாக குரு மகா தசை வரும். இதனால் இவர்கள் பிறந்த குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும். பூரட்டாதி முதல் பாதத்தில் பிறந்தவர்கள் ஆளுமை திறன் கொண்டவர்களாக விளங்குவர். 

பூரட்டாதி இரண்டாம் பாதத்தில் உள்ளவர்கள் தன்னுடைய மனதையும், பணத்தையும் கவனமாக கட்டுப்படுத்தக்கூடியவர்களாக இருப்பார்கள். 

பூரட்டாதி மூன்றாம் பாதத்தில் பிறந்தவர்கள் திட்டமிடுதல் துறையில் கெட்டிக்காரர்களாக விளங்குவார்கள். 

பூரட்டாதி நான்காம் பாதத்தில் பிறந்தவர்கள் மகிழ்ச்சியாக இருக்கும் தன்மை கொண்டவர்களாக விளங்குவார்கள். 

பூரட்டாதி நட்சத்திரக்காரர்களுக்கு சனி மகாதசை மற்றும் சனி புத்தி, கேது மகாதசை மற்றும் கேது புத்தி, சூரிய மகாதசை, சூரிய புத்தி, செவ்வாய் மகாதிசை, செவ்வாய் புத்தி, ராகு மகாதசை, ராகு பத்தி சாதகமான பலன்களை தரும். 

அனுஷம், உத்ரட்டாதி, பூசம், மூலம், மகம், அஸ்வினி, கிருத்திகை, உத்ராடம், உத்ரம், மிருகசீரிசம், அவிட்டம், சித்திரை, திருவாதிரை, சுவாதி, சதயம் நட்சத்திர நாட்களில் புதிய காரியங்களை தொடங்கினால் சிறப்பான பலன்களை பூரட்டாதி நட்சத்திரக்காரர்கள் பெறலாம். 

பூரட்டாதி நட்சத்திரத்தில்தான் குபேரனே பிறந்ததாக கூறுகிறார்கள்.  இவர்களுக்கு செல்வ நிலை சிறப்பானதாக இருக்கும். இதில் ஒரு சிலர் பணத்தாலும், ஒரு சிலர் கல்வியாலும் குபேரனாக விளங்குவர். 

பொறுப்புத் துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள்/ ஜோதிடர்கள்/ பஞ்சாங்கங்கள்/ சொற்பொழிவுகள்/ நம்பிக்கைகள்/ வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

WhatsApp channel