தமிழ் செய்திகள்  /  Tamilnadu  /  Villagers Shocked By Rti Information Aout Road Work Near Vilathikulam

போடாத சாலையை போட்டதாக கணக்கு: RTI- தகவலால் பொதுமக்கள் அதிர்ச்சி - நடந்தது என்ன?

Karthikeyan S HT Tamil
Feb 02, 2023 01:56 PM IST

RTI Information about Road Work: தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே போடாத சாலையை போட்டதாக கணக்கு காட்டியதாக வெளியான தகவல் அப்பகுதி மக்களிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

விளாத்திகுளம் வட்டார வளர்ச்சி அலுவலர் நேரில் ஆய்வு.
விளாத்திகுளம் வட்டார வளர்ச்சி அலுவலர் நேரில் ஆய்வு.

ட்ரெண்டிங் செய்திகள்

விளாத்திகுளம் மீரான்பாளையம் தெருவை சேர்ந்த வழக்கறிஞர் முத்து செல்வம் என்பவர் விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட மேல்மந்தை ஊராட்சியில் இ.வேலாயுதபுரம் கிராமத்தில் இ.சி.ஆர் ரோட்டில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் இருந்து தெற்குப் பகுதியில் உள்ள மேல தெருவில் மயான பாதை ரோடு அமைத்தது தொடர்பான விபரங்களை தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் தகவல் கேட்டு இருந்தார்.

இதனையடுத்து, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் அளிக்கப்பட்ட தகவலில், இ.வேலாயுதபுரம் கிராமத்தில் இ.சி.ஆர் ரோட்டில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் இருந்து தெற்குப் பகுதியில் உள்ள மேல தெருவில் மயான பாதை  அமைக்க  5.4 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளதாகவும். அச்சாலை தென்புற பாதையில் 180 மீட்டர் நீளம் 3 மீட்டர் அகலத்தில் போடப்பட்டு உள்ளது என்றும் தெரிவிக்கபட்டு உள்ளது.

மேலும், இ.சி.ஆர் தென்புற பாதையானது பேவர் பிளாக் சாலை 15-வது நிதி குழு திட்டத்தின் கீழ் 2020 -21 திட்டத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்விவரங்களை அறிந்த கிராம மக்கள் அதிர்ச்சியடைந்தனர். தங்கள் கிராமத்தில் போடாத சாலைக்கு, போடப்பட்டுள்ளதாக கணக்கு காட்டப்பட்டிருப்பது அதிர்ச்சியை தருவதாக கிராம மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி தவறு செய்த அதிகாரி மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும், உரிய சாலை வசதியை ஏற்படுத்தி தரவேண்டும் எனவும் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தவறு நடந்தது எப்படி?

சாலை அமைக்கும் பணி தொடர்பாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தகவல்கள் கேட்டு விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றியத்துக்கு விண்ணப்பம் வந்துள்ளது. இதற்கு பதிலளித்த பொது தகவல் அலுவலர் "சாலை போடப்பட உள்ளது" என்பதற்கு பதிலாக "சாலை போடப்பட்டது" என்று தவறுதலாக பதில் அளித்துள்ளார். இது அப்பகுதி மக்களிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.

வட்டார வளர்ச்சி அலுவலர் விளக்கம்:

இ.வேலாயுதபுரம் கிராமத்தில் மயான பாதைக்கு சாலை அமைக்கும் பணிக்கு இன்னும் ஒப்பந்தமிடப்படவில்லை, பணிகளும் ஆரம்பிக்கப்படவில்லை. இது பற்றி ஒரு நபர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் தகவல்கள் கேட்டிருந்தார். அவர் கேட்ட நான்கு கேள்விகளில் ஒரு கேள்விக்கு அலுவலகத்தில் இருந்து தவறுதலாக சாலை போடப்பட்டது என்று பதில் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், சாலை போடப்படவில்லை, நிதி இழப்பு இல்லை. இந்தப் பணி விரைவில் ஊராட்சி நிர்வாகம் சார்பாக தொடங்கப்படும், ஊராட்சி நிர்வாகமும் இதில் எந்தவித தவறும் செய்யவில்லை என்று விளாத்திகுளம் வட்டார வளர்ச்சி அலுவலர் தங்கவேல் விளக்கம் அளித்துள்ளார்.

மேல்மாந்தை ஊராட்சி மன்ற தலைவர் மல்லிகா விளக்கம்:

இ.வேலாயுதபுரம் கிராமத்தில் இ.சி.ஆர் ரோட்டில் பேருந்து நிறுத்தத்தில் இருந்து தெற்கு பகுதியில் உள்ள மேலத்தெரு மயான பாதை அமைக்க ரூ.5 லட்சத்து 40 ஆயிரம்(5,40,000) ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றும், பேருந்து நிறுத்தத்திலிருந்து தென்புறப்பாதை 150 மீட்டர் நீளமும், 3 மீட்டர் அகலமும் கொண்ட ஃபேவர் பிளாக் சாலை அமைக்கும் இந்த சாலை திட்டமானது 15வது நிதி குழு மானியம் 2020-21 ஆம் ஆண்டு திட்டத்தில் செயல்படுத்த தேர்வு செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த சாலை இன்னும் டெண்டர் விடவில்லை. 

வேலை தொடங்குவதற்கு முயற்சித்த போது குறிப்பிட்ட அந்த தெருவில் உள்ளவர்கள் சிலர் தடை ஏற்படுத்தினார்கள். அதனால் வேலை செய்ய வேண்டியது தடைப்பட்டு நிற்கிறது. இதற்கிடையில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் இந்த சாலை அமைக்கும் பணி தொடர்பான கேள்விக்கு சாலை போடப்பட்டதாக பதில் அனுப்பி உள்ளார்கள். இந்த பதில் எப்படி அனுப்பினார்கள்?. இதனால் அதிகமான மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது. குடும்பத்தில் உள்ளவர்களுக்கும் மன உளைச்சல் ஏற்பட்டுள்ளது. தவறான தகவல் அனுப்பியவர்கள் மீது மாவட்ட ஆட்சித்தலைவர் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்." என்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த விவகாரம் தொடர்பாக மானநஷ்ட வழக்கு மற்றும் கிரிமினல் வழக்கு தொடுக்க வழக்கறிஞரை ஆலோசித்து வருவதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

IPL_Entry_Point

டாபிக்ஸ்