Tamil Top 10 News: த.வெ.க. மாநாட்டுக்கு சென்றவர் பலி முதல்..ஆம்னி பஸ் கட்டணம் பல மடங்கு அதிகரிப்பு வரை - டாப் 10 நியூஸ்!
விஜயின் த.வெ.க மாநாட்டுக்கு சென்றவர் பலி, புறநகர் ரயில்கள் ரத்து, ஆம்னி பஸ் கட்டணம் உயர்வு உள்ளிட்ட இன்றை காலை நேரத்திற்கான டாப் 10 செய்திகளை இந்த தொகுப்பில் சுருக்கமாக காணலாம்.
தமிழகம் முழுவதும் நிகழ்ந்த அரசியல் முக்கிய நிகழ்வுகள், க்ரைம் செய்திகள் உள்பட அனைத்து விதமான முக்கிய செய்திகளை இந்தத் தொகுப்பில் சுருக்கமாக தெரிந்துகொள்ளலாம்.
த.வெ.க. மாநாட்டுக்கு சென்றவர் பலி
சென்னை அண்ணா சாலையில் டி.எம்.எஸ். மெட்ரோ ரயில் நிலையம் அருகே லாரி மீது பைக் மோதிய விபத்தில், பைக்கில் இருந்த இளைஞர் உயிரிழப்பு. மற்றொருவர் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இருவரும் விழுப்புரத்தில் இன்று நடக்கும் த.வெ.க. மாநாட்டுக்கு சென்ற நிலையில் விபத்து நடந்துள்ளதாக முதல் கட்ட தகவல் வெளியாகி உள்ளது.
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக 12 தமிழக மீனவர்களை கைது செய்தது இலங்கை கடற்படை
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக 12 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்தது. நெடுந்தீவு அருகே கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்களை ஒரு படகுடன் இலங்கை படை சிறைபிடித்தது. கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் இலங்கையில் உள்ள மயிலிட்டி துறைமுகத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர். கைதானவர்கள் நாகை மாவட்டத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்றவர்கள் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
50 சதவீதம் நிரம்பிய பார்க்கிங்
தவெக மாநாட்டிற்காக 250 ஏக்கர் பரப்பளவில் 5 இடங்களில் பார்க்கிங் வசதிகள் செய்த நிலையில் காலை 11 மணிக்குள் பார்க்கிங் பகுதி முழுவதுமாக நிரம்பிவிடும் என தகவல். தற்போதே சுமார் 1 லட்சம் தொண்டர்கள் மாநாட்டு திடலில் குவிந்துள்ளனர்.
புறநகர் ரயில்கள் ரத்து
பராமரிப்பு பணி காரணமாக, சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம், செங்கல்பட்டு வழித்தடத்தில் இயக்கப்படும் அனைத்து புறநகர் ரயில்களும் இன்று காலை முதல் மாலை வரை ரத்து செய்யப்பட உள்ளன.
தவெக மாநாடு - போக்குவரத்து மாற்றம்
திருச்சி நோக்கி செல்லும் அரசு பேருந்துகள் பேருந்துகள் திண்டிவனத்தில் இருந்து செஞ்சி வழியாக திருப்பி விடப்படுகின்றன. சென்னையிலிருந்து திருச்சி செல்லும் கனரக வாகனங்கள் திண்டிவனத்தில் இருந்து வில்லியனூர் வழியாக விழுப்புரம் செல்லலாம். சென்னையிலிருந்து திருச்சி செல்லும் கார்கள் திண்டிவனத்தில் இருந்து மயிலம், பெரும்பாக்கம் வழியாக விழுப்புரம் செல்லலாம். திருச்சியில் இருந்து சென்னை வரும் பேருந்து, கார்கள் செஞ்சி, திண்டிவனம் வழியாக சென்னை வரலாம். திருச்சியில் இருந்து வரும் கனரக வாகனங்கள் வில்லியனூர், திண்டிவனம் வழியாக சென்னை வரலாம்.
வானிலை நிலவரம்
தமிழகப் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று முதல் வரும் 30-ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், அக். 31, நவ. 1-ம் தேதிகளில் சில இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
மீண்டும் வலியுறுத்தல்
விக்கிரவாண்டியில் நடைபெறும் தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டிற்கு குழந்தைகள், முதியவர்கள், கர்ப்பிணிகள் வர வேண்டாம் என தவெக தலைவர் விஜய் நிர்வாகிகள் மூலம் மீண்டும் வலியுறுத்தி இருக்கிறார்.
பட்டாசு விற்பனை தொடக்கம்
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை தீவுத்திடலில் பட்டாசு விற்பனை தொடங்கியது.
13 ஆம் ஆண்டில் தேமுதிக
இந்திய ஆரசியல் வரலாற்றில் 25 லட்சம் பேர் கலந்து கொண்டு உலக சாதனை படைத்த ஒரே மாநாடு தேமுதிக மாநாடு என தேமுதிகவின் 13 ஆம் ஆண்டு விழாவையொட்டி அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் எக்ஸ் தளத்தில் பதிவு செய்துள்ளார்.
ஆம்னி பஸ் கட்டணம் பல மடங்கு அதிகரிப்பு
தீபாவளி பண்டிகையையொட்டி சொந்த ஊர் செல்ல பெரும்பாலான மக்கள் அரசு பேருந்துகளில் பயணிக்க முடிவு செய்திருந்தாலும், ரயில்கள் மற்றும் பேருந்துகளில் முன்பதிவுகள் முடிந்துள்ளதால் அடுத்த கட்டமாக மக்கள் தனியார் ஆம்னி பேருந்துகளை நோக்கி வருகின்றனர். ஆனால் ஆம்னி பேருந்துகளில் பண்டிகை கால நெருக்கடியை பயன்படுத்தி அதிக விலைக்கு டிக்கெட்டுகள் விற்பனை செய்வதை வாடிக்கையாக உள்ளது. தனியார் செயலிகளில் ஆம்னி பேருந்துகளுக்கு தற்போது கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய பகுதிகளுக்கு செல்லும் பேருந்துகளில் சாதாரண நாட்களில் அதிகபட்சமாக ரூ.1500 வரை டிக்கெட் விற்பனை செய்யப்படும் நிலையில், அக்.29ம் தேதி பயணத்திற்கு குறைந்தபட்சம் 1500 முதல் அதிகபட்சமாக ரூ.3500 வரை டிக்கெட் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் அக்.30ம் தேதி இதைவிட கூடுதலாக ரூ.5000 வரையும் சில பேருந்துகளில் டிக்கெட் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதனை தடுக்க அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
டாபிக்ஸ்