தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Erode East Bypoll: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்; இளம் வேட்பாளரை களமிறக்கும் டிடிவி

Erode East Bypoll: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்; இளம் வேட்பாளரை களமிறக்கும் டிடிவி

Karthikeyan S HT Tamil
Jan 27, 2023 02:18 PM IST

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் அமமுக சார்பில் களமிறங்கும் வேட்பாளர் பெயரை அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ளார்.

அமமுக வேட்பாளர் சிவபிரசாத், டிடிவி தினகரன்.
அமமுக வேட்பாளர் சிவபிரசாத், டிடிவி தினகரன்.

ட்ரெண்டிங் செய்திகள்

திமுக தலைமையிலான மதசார்பற்றக் கூட்டணியின் வேட்பாளராக திருமகன் ஈவெராவின் தந்தையும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவருமான ஈவிகேஎஸ் இளங்கோவன் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். தே.மு.தி.க. தனித்து போட்டியிடுவதாக அறிவித்து மாநகர் மாவட்ட செயலாளர் எஸ்.ஆனந்த் என்பவரை வேட்பாளராக நிறுத்தி உள்ளது. நாம் தமிழர் கட்சி சார்பில் நாளை மறுநாள் ஈரோட்டில் பெண் வேட்பாளர் அறிவிக்கப்பட உள்ளதாக அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார்.

திமுக கூட்டணி பரப்புரையை தொடங்கி உள்ள நிலையில், பிரதான எதிர்க்கட்சியான அதிமுக சார்பில் இன்னும் வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை. எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓபிஎஸ் ஆகிய இரு தரப்பிலும் வேட்பாளர் நிறுத்தப்படுவார்கள் என்று இரு தரப்பிலும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இரட்டை இலை சின்னம் முடங்கும் சூழல் உருவாகியுள்ளது. இதனிடையே ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் இபிஎஸ் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் அமமுக சார்பில் சிவப்பிரசாத் (வயது 29) போட்டியிடுகிறார் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் தினகரன் அறிவித்துள்ளார். வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டுள்ள சிவப்பிரசாத், ஈரோடு மாவட்ட கிழக்கு அமமுக செயலாளராக உள்ளார்.

இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன், “ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் 29 வயதான இளைஞர் சிவப்பிரசாத் போட்டியிடுகிறார். இந்தத் தேர்தலில் நம்பிக்கையுடன் அமமுக போட்டிடுகிறது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பணியாற்ற 290-க்கும் மேற்பட்டோர் தேர்தல் பணிகுழுவில் இடம்பெற்றுள்ளனர். இடைத்தேர்தலில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது. நாங்கள் ஆதரவு கேட்கும் கட்சிகளின் விவரம் பின்னர் தெரிவிக்கப்படும். வரும் 3 ஆம் தேதி அமமுக வேட்பாளர் வேட்புமனுத்தாக்கல் செய்ய உள்ளார். ஈரோடு கிழக்கில் ஞாயிற்றுக்கிழமை முதல் பிரசாரம் மேற்கொள்வோம்.” எனத் தெரிவித்தார்.

 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்